பாடம் 7

மே 7-13

ஆபிரகாமுடன் உடன்படிக்கை

ஓய்வுநாள் பிற்பகல்:

மே 7

இவ்வார ஆராய்ச்சிக்கு: ஆதி 15-19:29; ரோமர் 4:3, 4, 9, 22; கலா 4:21-31; ரோமர் 4:11; 9:9; ஆமோஸ் 4:11.

மனன வசனம்: ‘அதற்கு ஆபிராம்:கர்த்தராகிய ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே; தமஸ்கு ஊரானாகிய இந்த எலியேசர் என் வீட்டு விசாரணைக்கர்த்தனாய் இருக்கிறானே என்றான். ஆதி 15:2.

தேவன் ஆபிரகாமுடன் செய்த உடன்படிக்கையை முறைப்படி உறுதிப்படுத்துகிற முக்கியத் தருணம்பற்றி ஆதி 15 பேசுகிறது. நோவாவுடன் செய்த உடன்படிக்கைக்குப் பிறகு இரண்டாவதாக ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்தார். நோவாவுடன் செய்த உடன்படிக்கைபோல, ஆபிரகாமுடன் செய்த உடன்படிக்கையும் பிற தேசங்கள் சம்பந்தப்பட்டது. மனிதர்கள் அனைவருக்கும் அருளப்படுகிற நித்திய உடன்படிக்கையின் ஒரு பகுதிதான் ஆபிரகாமுடனான உடன் படிக்கை. ஆதி 17:7; எபி 13:20.

ஆபிரகாமின் வாழ்க்கை அத்தியாயம் முழுவதிலும் பயத்தையும் சிரிப்பையும் காணமுடிகிறது. ஆபிரகாம் பயந்தான். ஆதி 15:1. சாராளும் ஆகாரும் பயந்திருக்கிறார்கள். ஆதி 18:15; 21:17. ஆபிரகாம் சிரித்தான். ஆதி 17:17. சாராளும் இஸ்மவேலும் சிரித்திருக்கிறார்கள். ஆதி 18:12; 21:9. இந்த அதிகாரங்களில் மனித உணர்வுகளும் அரவணைப்பும் வெளிப்படுகின்றன. துன்மார்க்கரான சோதோம் மக்கள் இரட்சிக்கப்படுவதை ஆபிரகாம் விரும்பினான். சாராள், ஆகார், லோத்து ஆகியோர்மேல் அக்கறை காட்டினான். தன்னிடம் வந்த மூன்று அந்நியர்களை உபசரித்தான். ஆதி 18:2-6.

இந்தப் பின்னணியில்தான் ஆபிராம் என்கிற பெயரை ஆபிரகாம் என்று தேவன் மாற்றுகிறார். அதற்கு ‘திரளான ஜாதிகளுக்குத் தகப்பன்’ என்று அர்த்தம். ஆதி 17:5. எனவே ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்து உலகளாவிய அளவில் தேவன் தம் திட்டத்தை நிறைவேற்ற விரும்பினதைக் காணமுடிகிறது.

2021, மே 14 வகுப்புக்காகப் படிக்கவேண்டிய பாடம்

ஞாயிற்றுக்கிழமை

மே 8

ஆபிரகாமின் விசுவாசம்

விசுவாசத்தினால் வாழ்வதை ஆபிரகாம் எவ்வாறு தன் வாழ்க்கையில் வெளிப்படுத்தினான்? ஆதி 15:1-21; ரோமர் 4:3, 4, 9, 22. தேவன் ஆபிரகாமிடம் செய்யும்படிச் சொன்ன பலியின் அர்த்தம் என்ன?

தனக்கு புத்திர சந்தானம் இல்லையென தேவனிடம் ஆபிரகாம் சொன்னான். ஆதி 15:1-3. உடனே தேவன், அவன் ‘கர்ப்பப்பிறப்பிலிருந்து’ ஒரு குமாரன்பிறப்பான் என்று சொன்னார். ஆதி 15:4. வரவிருந்த மேசியாவாகிய ராஜாபற்றி நாத்தானும் இவ்வாறே தீர்க்கதரிசனம் உரைத்தான். 2சாமு 7:12. ஆபிராமுக்குதேவன் வாக்குரைத்தார்; ‘அவன் கர்த்தரை விசுவாசித்தான்’. ஆதி 15:6. தன்னுடைய நீதியால் அல்ல, தேவனுடைய நீதியாலே தேவ வாக்குறுதி நிறைவேறும் என்பது புரிந்ததால் விசுவாசிக்க முடிந்தது. ஆதி 15:6; ஒப்பிடவும் ரோமர் 4:5, 6.

அந்தக் கலாச்சாரத்தில் இவ்வாறு நம்புவது எளிதல்ல. உதாரணமாக, எகிப்தியர்களின் மதநம்பிக்கைப்படி, மேட் எனும் தேவதைதான் நீதியின் அவதாரம். மனிதர்களுடைய நீதியான செயல்களை மேட் எனும் தேவதைதான் நீதிகளோடு ஒப்பிட்டு, நியாயத்தீர்ப்பு செய்தார்கள். அதாவது நன்மைகளைச் செய்து ‘இரட்சிப்பை’ சம்பாதிக்க வேண்டுமென நினைத்தார்கள்.

ஆனால், தேவன் ஆபிரகாமிடம் ஒரு பலிமுறை சடங்கைச் செய்யச் சொன்னார். நம் பாவங்களுக்காக கிறிஸ்து மரிக்கவிருந்ததை அந்தப் பலி சுட்டிக்காட்டுகிறது. கிருபையால் இரட்சிப்பு உண்டாவதையும், அது தேவனுடைய நீதியின் ஈவு என்பதையும் அந்தப் பலிகள் சுட்டிக்காட்டின. ஆனால் அந்தச் சடங்குமூலம் வேறு குறிப்பிட்ட செய்திகளையும் ஆபிரகாமுக்கு உணர்த்தினார். பலியிட்ட மிருகங்கள்மேல் பறவைகள் இறங்கின. ஆதி 15:9-11. ஆபிரகாமின் சந்ததியார் ‘நானூறு வருஷம்’ அல்லது நான்கு தலைமுறைகள் அடிமைகளாக இருக்கவிருந்ததை அது சுட்டிக்காட்டுகிறது. ஆதி 5:13, 16. பிறகு, ஆபிரகாமின் சந்ததியார், நாலாம் தலைமுறையிலே ‘இவ்விடத்துக்குத் திரும்ப’ இருந்தார்கள். ஆதி 15:16.

அந்தப் பலிமுறை சடங்கின் கடைசி காட்சி பரபரப்பூட்டுகிறது. அதாவது ‘புகைகிற சூளையும், அந்தத் துண்டங்களின் நடுவே கடந்துபோகிற அக்கினிஜுவாலையும் தோன்றின.’ ஆதி 15:17. பிரமிப்பூட்டும் அந்தக் காட்சி, ஆபிரகாமின் சந்ததியாருக்கு தேசத்தைக் கொடுப்பதாக தேவன் செய்த உடன்படிக்கை வாக்குறுதியை நிறைவேற்ற அவர் தீர்மானமாக இருந்ததை வலியுறுத்துகிறது. ஆதி 15:18.

வாக்குத்தத்த தேசத்தின் எல்லை ‘எகிப்தின் நதிதுவக்கி ஐபிராத்து நதி என்னும் பெரிய நதிமட்டும்’ பரந்து, விரிந்திருந்தது. ஆதி 15:18. அது ஏதேன் தோட்டத்தின் எல்லைகளை ஞாபகப்படுத்துகிறது. ஒப்பிடவும்:ஆதி 2:13, 14. எனவே இந்தத் தீர்க்கதரிசனமானது இஸ்ரவேலர் அடிமைகளாகச் செல்வதையும், பிறகு வாக்குத்தத்த தேசத்தைச் சுதந்தரிப்பதையும் மட்டும் சுட்டிக் காட்டவில்லை. மாறாக, ஆபிரகாமின் சந்ததியார் கானான் தேசத்தைச் சுதந்தரிப்பது, கடைசிக்காலத்தில் தேவ மக்கள் இரட்சிக்கப்பட்டு, மீண்டும் ஏதேன் தோட்டத்திற்குள் திரும்ப இருந்ததை அடையாளமாகச் சுட்டிக்காட்டுகிறது.

கிறிஸ்துவையும் அவர் நீதியையும்மட்டுமே இரட்சிப்பின் நம்பிக்கையாகக் கொண்டிருக்க நாம் என்ன செய்யலாம்? நம் நற்கிரியைகளைக் கணக்குப்பார்க்கத் தொடங்கிவிட்டால் என்ன ஆகும்?

திங்கட்கிழமை

மே 9

ஆபிரகாமின் சந்தேகங்கள்

தேவன் வாக்குப்பண்ணியிருந்தபோதிலும், ஆகாருடன் சேர ஆபிராகம் ஏன் தீர்மானித்தான்? இந்த இரு பெண்களும் எவ்வாறு விசுவாசத்தின் இரண்டு அம்சங்களுக்கு அடையாளமாக இருக்கிறார்கள்? கலா 4:21-31.

ஆபிரகாம் சந்தேகித்தான். ஆதி 15:2. உடனே தேவன், அவனுக்கு ஒரு குமாரன் பிறப்பானென சந்தேகத்திற்கு இடமின்றி சொன்னார். சற்று முன்னர்தான், வல்லமையான ஒரு தீர்க்கதரிசனத்தைச் சொல்லியிருந்தார்; ஆனாலும் ஆபிரகாமுக்கு விசுவாசமில்லாமல் போனது. சாராளுடன் தனக்கு ஒரு குழந்தை பிறக்க இனிவாய்ப்பே இல்லையென நினைத்துவிட்டான். நம்பிக்கையிழந்தசாராள் தன் விருப்பப்படிச் செயல்பட்டாள். மத்தியக் கிழக்குப் பகுதிகளில் அப்போது இருந்த வழக்கத்தின்படி, ஒரு மறுமனையாட்டியை மணக்கச் சொன்னாள். தன் வேலைக்காரியான ஆகாரை மறுமனையாட்டியாகக் கொடுத்தாள். அவள் திட்டத்திற்கு பலன் கிடைத்தது. தேவனுடைய வாக்குறுதிகளில் விசுவாசம் வைப்பதைவிட, மனித வியூகம் திறமையானதுபோலத் தெரிந்தது.

ஆபிரகாமிடம் சாராள் நடந்துகொண்டவிதம் ஏதேன் தோட்டத்தில் ஆதாமிடம் ஏவாள் நடந்துகொண்டதை ஞாபகப்படுத்துகிறது. இரு பகுதிகளிலும் பொதுவான பல கருத்துகளைப் பார்க்கமுடிகிறது. ஏவாளைப்போல சாராள் செயல்படுகிறாள்; ஆதாமைப் போல ஆபிரகாம் அதற்குள் இழுக்கப்படுகிறான். ‘செவிகொடுத்தான்’, ‘கொடுத்தாள்’ போன்ற பொதுவான வினைச்சொற்களும், சொற்றொடர்களும் வருகின்றன. இந்த ஒற்றுமை, இரு சம்பவங்களுமே தேவன் அங்கீகரிக்காதவை என்பதைக் காட்டுகிறது.

கிரியைகளையும் கிருபையையும் வேறுபடுத்திக் காட்ட பவுல் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிடுகிறான். கலா 4:23-26. இரு சம்பவங்களிலும் விளைவு ஒன்றுதான். அதாவது, தேவ சித்தத்திற்கு அப்பாற்பட்ட மனித கிரியை எதுவாக இருந்தாலும், அது பிரச்சனையில்தான் முடியும். இரு சம்பவங்களிலும் தேவனை மறந்து செயல்பட்டார்கள். சாராள் தேவனைப் பற்றிப் பேசுகிறாள்; தேவனிடம் பேசவில்லை. இரு சம்பவங்களிலும் தேவன் தங்களிடம் பேச அவர்கள் வாய்ப்பு கொடுக்கவில்லை. முந்தின அதிகாரம் முழுவதிலும் தேவனோடு தொடர்பு கொண்டார்கள்; அதற்குள் அவரை மறந்துபோனதுதான் கவனிக்கத்தக்கது.

ஆகார் ஆபிரகாமின் வீட்டைவிட்டுச் சென்றபிறகு, தேவன் அவளுக்குத் தரிசனமாகிறார். தேவனை மறந்து செயல்படுகிற சமயங்களிலும் தேவன் தம் பிரசன்னத்தை வெளிப்படுத்துவதை அந்தத் தரிசனம் காட்டுகிறது. ‘கர்த்தருடைய தூதனானவர்’ என்பது கர்த்தராகிய யாவேயைச் சுட்டிக்காட்டுகிறது. ஆதி 18:1, 13, 22. இந்த முறை தேவன் செயல்படுகிறார்; ஆகார் ஒரு குமாரனைப் பெறுவாள் என்றும், அவன் பெயர் இஸ்மவேல் என்றும் சொன்னார். இஸ்மவேல் என்றால், தேவன் கேட்கிறார் என்று அர்த்தம். ஆதி 16:11. சாராள் சொன்னதற்கு ஆபிரகாம் ‘செவிகொடுத்ததாக’ தொடங்கிய சம்பவம், ஆகாரின் நிலையை தேவன் கேட்டதாக முடிகிறது. இரண்டிலும் ஷமா எனும் எபிரெய வார்த்தை வருகிறது. ஆதி 16:2.

ஆபிரகாமிடம் காணப்பட்ட அதே விசுவாசக் குறைச்சல் நம்மிடமும் காணப்படுவது ஏன் எளிது?

செவ்வாய்க்கிழமை

மே 10

ஆபிரகாமிய உடன்படிக்கைக்கு அடையாளம்

விருத்தசேதனம் எனும் சடங்கின் ஆவிக்குரிய முக்கியத்துவம், தீர்க்கதரிசன முக்கியத்துவம் என்ன? ஆதி 17:1-19; ரோமர் 4:11.

முந்தின சம்பவத்தில் ஆபிரகாம் அவிசுவாசத்துடன் நடந்ததாகப் பார்த்தோம். ஆதி 16. தேவனோடு நல்ல ஆவிக்குரிய தொடர்பைப் பேணி வந்த நிலையில் தவறினான். அந்தச் சமயத்தில் தேவன் அமைதியாக இருந்தார். இப்போது மீண்டும் ஆபிரகாமுடன் பேசுகிறார். அவனோடு மீண்டும் தொடர்பை ஏற்படுத்தி, உடன்படிக்கை செய்து, முந்தின நிலைக்கு மீண்டும் கொண்டுவருகிறார். ஆதி 15:18.

அப்போது அந்த உடன்படிக்கைக்கு அடையாளமாக விருத்தசேதனத்தைக் கொடுக்கிறார். விருத்தசேதனத்தின் பொருள்பற்றி அறிஞர்கள் பலவாறு கருத்து கூறிவருகிறார்கள். ஆனால் விருத்தசேதன சடங் கானது இரத்தம்சிந்துதல் சம்பந்தப்பட்டது என்பதால், அது ஒரு வகை பலி ஆகும். விருத்தசேதனம் செய்தவர் ஒரு நீதிமானாக கருதப்படுவதை அது குறிக்கிறது. ரோமர் 4:11.

விருத்தசேதனம் வலியுறுத்துகிற இந்த உடன்படிக்கை, மேசியா குறித்த முதல் தீர்க்கதரிசனத்திலும் சொல்லப்படுகிறது. ஆதி 17:7 ஐ ஆதி 3:15 உடன் ஒப் பிடவும். இந்த இரு வேதப்பகுதிகளையும் ஒப்பிட்டால், ஆபிரகாமுக்கு தேவன் கொடுத்த வாக்குறுதி ஒரு குறிப்பிட்ட ஜனத்தார் பிறப்பதைபற்றி மட்டுமல்ல, பூமியின் சகல மக்களுக்கும் இரட்சிப்பின் வாக்குறுதி அருளப்படுவதையும் உள்ளடக்கியது. ‘நித்திய உடன்படிக்கையின்’ வாக்குறுதி என்பது, அந்தச் சந்ததியில் பிறக்கவிருந்த மேசியா அந்த வாக்குறுதியின் நிறைவேறுதலாக இருந்தார் என்பதே. ஆதி 17:7. தங்கள் பாவங்களுக்காக கிறிஸ்து சிலுவையில் மரித்ததை விசுவாசிக்கிற அனைவருக்கும் அவர் நித்திய ஜீவனையும், விசுவாசத்தின் சகல பலன்களையும் உறுதிசெய்கிறார். ஒப்பிடவும்:ரோமர் 6:23; தீத்து 1:2.

நித்திய எதிர்காலம்குறித்த இந்த வாக்குறுதி, ஆபிராம், சாராய் எனும் பெயர்கள் மாற்றப்பட்டதிலும் பிரதிபலிக்கிறது. ஆபிராம், சாராய் எனும் பெயர்கள் அவர் களது அப்போதைய நிலையைச் சுட்டிக்காட்டியது. ஆபிராம் என்றால், மேன்மை வாய்ந்த தகப்பன் என்றும், சாராய் என்றால் ‘என் இளவரசி என்றும் அர்த்தம். ஆபிரகாம், சாராள் எனும் பெயர்கள் எதிர்கால நிலையைச் சுட்டிக்காட்டின. ஆபிரகாம் என்றால், அநேக ஜாதிகளுக்கு தகப்பன்; சாராள் என்றால், ‘(எல்லாருக்குமான) இளவரசி. அதுபோல ஈசாக்கு என்றால் ‘அவன் சிரிப்பான் என்று அர்த்தம். ஆபிரகாம் சிரித்ததின் அடையாளமாக அப்பெயரை வைத்தார்கள். வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் சிரிப்பு அது. ஆதி 17:17. அது சந்தேகத்தால் அல்லது நம்பிக்கையின்மையால் பிறந்த சிரிப்பு. அதாவது, தேவன் தெளிவாக வாக்குரைத்ததை ஆபிரகாம் விசுவாசித்தபோதிலும்கூட, அந்த விசுவாசத்தின்படி நம்பி வாழ்வது எளிதாக இருக்கவில்லை.

ஆபிரகாமைப் போல நம் நம்பிக்கையின்படி வாழ்வது எளிதாக இல்லாமலிருந்தாலும், எவ்வாறு நம்பிக்கையை விடாதிருக்கலாம்? சந்தேகம் ஏற்படும் தருணங்களின்மத்தியிலும் நாம் பின்வாங்காமல் இருக்க என்ன செய்யலாம்?

புதன்கிழமை

மே 11

வாக்குத்தத்தக் குமாரன்

இஸ்மவேலுக்கு மட்டுமல்ல; ஆபிரகாமின் வீட்டில் பிறந்த ஆண்பிள்ளைகள் அனைவருக்கும் விருத்தசேதனம் பண்ணினார்கள். ஆதி 17:23-27. யாவரும், எல்லாரும் எனும் வார்த்தைகள் நான்குமுறை வருகின்றன. ஆதி 17:23, 27. இந்தப்பின்னணியில்தான் ஆபிரகாமுக்கு தேவன் பிரசன்னமாகி, ‘ஈசாக்கு’ எனும் மகனைக் கொடுப்பதாக தமது வாக்குறுதியை உறுதிப்பண்ணுகிறார்.

விருந்தினர்களை ஆபிரகாம் வரவேற்ற விதத்திலிருந்து விருந்தோம்பல்பற்றி என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்? ஆதி 18:1-5; ரோமர் 9:9. ஆபிரகாமின் விருந்தோம்பலை தேவன் எவ்வாறு ஏற்றுக்கொண்டார்?

அந்த அந்நியர்கள் யாரென ஆபிரகாமுக்குத் தெரிந்திருந்ததோ இல்லையோ, ஆனால் தேவனே வந்திருந்ததுபோல ஆபிரகாம் நடந்துகொண்டான். எபி 13:2. ‘பகலின் உஷ்ணவேளையில் கூடாரவாசலிலே உட்கார்ந்திருந்தான்.’ ஆதி 18:1. வனாந்தரப் பகுதியில் விருந்தினர்கள் வருவது அரிது என்பதால், அவர்களைச் சந்திக்க அவன் ஆயத்தமாக இருந்திருக்கலாம். ஆபிரகாமுக்கு 99 வயது; ஆனாலும் அவர்களை நோக்கி ஓடினான். ஆதி 18:2. அவர்களில் ஒருவரை அடோனாய் என்று அழைத்தான். அதற்கு ‘ஆண்டவரே என்று அர்த்தம். ஆதி 18:3. தேவனைத்தாம் அவ்வாறு அழைப்பதுண்டு. ஆதி 20:4; யாத் 15:17. விருந்துக்கான ஆயத்தவேலை களில் இறங்கினான். ஆதி 18:6, 7. அவர்களுக்கு தேவையானதைப் பரிமாறுவதற்கு ஆயத்தமாக, அவர்களுக்கு அருகிலேயே நின்றான். ஆதி 18:8.

அந்தப் பரலோக நபர்களை ஆபிரகாம் உபசரித்த விதமானது, விருந்தோம்பலுக்கான ஓர் எடுத்துக்காட்டாகவே மாறியது. எபி 13:2. விருந்தோம்பலின் தத்துவமேபயபக்திதான் என்பதை ஆபிரகாமின் மனநிலை காட்டியது. அந்நியர்களை மதிப்பதும், அக்கறைகாட்டுவதும் ஒரு மனிதாபிமான செயல் மட்டுமல்ல. அது தேவனுக்கே செய்கிற செயல்; பக்திக்குரிய ஒரு கடமைமத் 25:35 -40. ஏழை எளியவர்களைக் கவனிப்பவர்களில் ஒருவராக அல்ல, ஏழை எளியவர்களில் தானும் ஒருவர் என்றுதான் தேவன் தம்மை அடையாளங்காட்டுகிறார்.

மனிதர்கள்மேலிருந்த அன்பாலும் கிருபையாலும் அங்கே மனிதர்களின் உலகிற்கு தேவன் இறங்கி வந்திருந்தார். கிறிஸ்துவின் வருகைக்கு அந்த வருகை முன்னடையாளமாக இருந்தது. அவர் தம் பரலோகவாசஸ்தலத்தைவிட்டு, மனுக்குலத்தை மீட்பதற்காக ஓர் அடிமையாக வரவிருந்தார். பிலி 2:7, 8. தேவனே இறங்கி வந்தது, அவரது வாக்குறுதி நிச்சயம் நிறைவேறும் என்பதைக் காட்டியது. ஆதி 18:10. அவர் சாராளைப் பார்க்கிறார்; அவள் ‘அவருக்குப் பின்புறமாய்’ ஒளிந்துகொண்டாள்; ஆனால் அவளுடைய உள்ளான சிந்தைகளை அறிந் திருந்தார். ஆதி 18:12. அவள் சிரித்ததையும் அறிந்திருந்தார். ‘நீ நகைத்தாய்’ என்பதே அவர் கடைசியாக பேசின வார்த்தைகள். அவளுடைய சந்தேகமே அவர் தம் வார்த்தையை நிறைவேற்றுவதை உறுதிப்படுத்துகிற இடமாயிற்று.

‘ஏழை எளியவர்களைக் கவனிப்பவர்களில் ஒருவராக அல்ல, ஏழை எளியவர்களில் தானும் ஒருவர்’ என்றுதான் தேவன் தம்மை அடையாளங்காட்டுகிறார்இதுபற்றித் தியானியுங்கள். இந்தக் கருத்தை நாம் ஏன் ஒருபோதும் மறக்கக் கூடாது?

வியாழக்கிழமை

மே 12

சோதோமில் லோத்து

ஆபிரகாமின் தீர்க்கதரிசன ஊழியம் லோத்துவுக்காகப் பரிந்துபேச எவ்வாறு வழிநடத்தியிருக்கும்? ஆதி 18:16-19:29.

ஆபிரகாமுக்கு ஒரு குமாரனைக் கொடுப்பதாக அப்போதுதான் தேவன் மீண்டும் உறுதிசெய்திருந்தார். ஆனால் அந்த நல்ல செய்தியால் பூரித்து இருந்து விடாமல், சோதோமில் இருந்த லோத்துவுக்காக மும்முரமாக தேவனிடம் வேண்டினான். தேவசித்தம்குறித்த வெளிப்பாட்டைப் பெறுகிற தீர்க்கதிரிசியாக மட்டுமல்லாமல், துன்மார்க்கருக்காகப் பரிந்துபேசுகிற தீர்க்கதரிசியாகவும் இருந்தான். ‘கர்த்தருக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தான்’ என்பதற்கான எபிரெய வார்த்தைகள் ஜெபத்தைச் சுட்டிக்காட்டுகிற மரபுச்சொற்றொடராகும். ஆதி 18:22.

ஆபிரகாரம் தேவனிடம் கேள்விகள்மேல் கேள்வி கேட்டு, தன் சகோதரனுடைய மகன் வசித்த சோதோமைக் காப்பாற்றும்படி கேட்கிறான். 50 பேரில் ஆரம்பித்து 10 பேருக்கு வந்துவிட்டான். சோதோமில் 10 நீதிமான்கள் இருந்தாலும் அதை அழிப்பதில்லையென தேவன் சொன்னார்.

சோதோமின் நிலைகுறித்து எச்சரிப்பதற்கு, இரண்டு தூதர்கள் லோத்துவிடம் சென்றபோது, அங்கிருந்தவர்கள் நடந்தவிதம், அவர்கள் சீர்கெட்டு, தீயவர்கள் ஆகியிருந்ததைக் காட்டுகிறது. ஆதி 19:1-10. சுற்றிலுமிருந்த பல தேசங்களைப்போல சோதோமிலும் துன்மார்க்கம் பெருகியிருந்தது; அங்கிருந்தவர்களை தேவன் துரத்தவேண்டிய நிலை உண்டானதற்கு அது ஒரு காரணம். ஆதி 15:16.

‘சோதோமின் கடைசி இரவு நெருங்கிக் கொண்டிருந்தது. முற்றிலும் துன்மார்க்கத்தில் மூழ்கின அந்நகரத்தை தண்டனையின் மேகங்கள் சூழ்ந்திருந்தன. ஆனால் அங்கிருந்தவர்கள் அதை உணரவில்லை. தூதர்கள் தேவகட்டளைபடி அதை அழிக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்தவர்கள் தங்கள் செழிப்பால், சந்தோஷத்தில் மிதந்துகொண்டிருந்தார்கள். மற்ற நாட்களைப் போலவே அந்தக் கடைசி நாளும் வந்துபோனது. அன்றைய மாலைப்பொழுது, ரம்மியமாக, பாதுகாப்பாகக் காட்சியளித்தது. மறைந்துகொண் டிருந்த சூரியனின் கதிர்கள் பட்டு, நிலப்பரப்பு முழுவதும் எழில்கொஞ்சும் காட்சியாக இருந்தது. மாலைநேர இதமானது பட்டணவாசிகளைப் பரபரப்பாக்கியது:இன்பத்தைத் தேடி அங்குமிங்கும் அலைந்தார்கள்; ஒவ்வொரு கணமும் அதை அனுபவிப்ப தில் தீவிரமாக இருந்தார்கள்’.1

முடிவில் 10 இல் பாதிபேர்கூட இல்லை; லோத்து, அவன் மனைவி, அவனுடைய இரண்டு குமாரத்திகள் என நான்கு பேரை மட்டுமே தேவன் காப்பாற்றினார். ஆதி 19:15. லோத்துவின் எச்சரிப்பைக் கண்டுகொள்ளாத அவனுடைய மருமகன்மார்கள், பட்டணத்திற்குள்ளேயே இருந்துவிட்டார்கள். ஆதி 19:14.

‘கவிழ்த்துப்போடுதல்’ என்பதற்கான எபிரெய வினைச்சொல் ஹஃபக். ஆதி 19:21, 25, 29. சோதோம் அழிக்கப்பட்டதை அது சுட்டிக்காட்டுகிறது. உபா 29:23; ஆமோஸ் 4:11. பட்டணத்தின் நிலையில் ‘தலைகீழ் மாற்றம் நிகழ்ந்தது. ஜலப்பிரளயத்தால் ஆதி சிருஷ்டிப்பில் ‘தலைகீழ் மாற்றம் நிகழ்ந்தது; ஆதி 6:7. அதற்கு ஒப்பாக, ஏதேன் தோட்டம் போலிருந்த சோதோமில் ‘தலைகீழ் மாற்றம் நிகழ்ந்தது. ஆதி 13:10. சோதோமின் அழிவானது, கடைசிக்கால அழிவுக்கு ஒரு முன்னடையாளமாகவும் இருக்கிறது. யூதா 7.

வெள்ளிக்கிழமை

மே 13

மேலும் படிக்க:

சோதோமின் மக்களுக்காக தேவனிடம் ஆபிரகாம் பொறுமையோடும் உறுதியோடும் வேண்டினான். ஆதி 18:22-23. துன்மார்க்கர் தங்கள் பாவத்தால் நம்பிக்கையற்ற நிலையில் இருந்தாலும், அவர்களுக்காக ஜெபிப்பதற்கு நாமும்கூட ஊக்கமாக ஜெபிக்க வேண்டும். மேலும், ஆபிரகாம் விடாப்பிடியாக வேண்டிக்கொண்டதற்கு தேவன் செவிசாய்த்து, ‘பத்து’ நீதிமான்கள் இருந் தாலும் மன்னிக்க ஆயத்தமாக இருந்தது ‘புரட்சிகரமான’ ஒரு கருத்தென ஜெரார்ட் ஹேஸல் என்பவர் கூறுகிறார். அதாவது, ‘குற்றவாளிகளோடு சேர்ந்த குற்றமற்றவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுமுற்கால பொதுவான நம்பிக்கை: அதை புரட்சிகரமான விதத்தில் நேர்எதிரான ஒரு புதிய கருத்தாக மாற்றினார். மீதமான நீதிமான்கள் மற்ற அனைவரையும் பாதுகாக்கிற பங்காற்ற முடியும் என்பதே அந்தக் கருத்து. யாவேயாகிய தேவன் மீதமான நீதிமான்களின் நிமித்தம் தம்முடைய நீதியால் (ட்ஸெடாக்) அந்தத் துன்மார்க்கப் பட்டணத்தை மன்னிக்க விரும்பினார். ‘அநேகரின்’ இரட்சிப்புக்காகப் பிரயாசப்படுகிற யாவேயின் தாசர்குறித்த தீர்க்கதரிசன வார்த்தைகளில் இந்தக் கருத்து பரவலாக வெளிப்படுகிறது’. 1

‘நம்மைச் சுற்றிலுமுள்ள பல ஆத்துமாக்கள் நம்பிக்கையின்றி, சோதோமைப் போன்று கொடிய நிலையில் அழிவைநோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் சிலருடைய தவணையின் காலம் முடிந்துவருகிறது. ஒவ்வொரு மணி நேரத்திலும் சிலர் கிருபைக்கு அந்நியராக மாறிவருகிறார்கள். அந்தப் பயங்கர அழிவிலிருந்து தப்பியோடும்படி பாவியை எச்சரிக்கிற, அன்பாக வேண்டிக்கொள்கிற சத்தங்கள் எங்கே? அவர்களைப் பிடித்திழுத்து, மரணத்தினின்று தப்புவிக்கவேண்டிய கரங்கள் எங்கே? அவர்களுக்காக தாழ்மை யோடும், அசைக்கமுடியாத விசுவாசத்தோடும் தேவனிடம் மன்றாடுகிறவர்கள் எங்கே? கிறிஸ்துவின் ஆவியை உடையவனாக ஆபிரகாம் இருந்தான். பாவிக்காகப் பரிந்துபேசுவதில் மாபெரும் உதாரணம் தேவன்தாம். பாவியின் மீட்பிற்காக விலைசெலுத்தியவர், மனித ஆத்துமாவின் மதிப்பை அறிந்திருக்கிறார்.’

கலந்துரையாடக் கேள்விகள்

  1. வானவில்லும், விருத்தசேதனமும் மட்டுமே ‘உடன்படிக்கையின் அடையாளம்’ என்று அழைக்கப்படுகின்றன. இரண்டு உடன்படிக்கைகளுக்கும் இடையேயான பொதுவான கருத்துகள், வித்தியாசங்கள் என்ன?
  2. ஆபிரகாம் தேவனுடைய அழைப்பைப் பெற்றவன்தான்; விசுவாசத்தால் வாழ்வதற்கு உதாரணமாக புதிய ஏற்பாடு சுட்டிக்காட்டுகிறவன்தான். ஆனாலும் சிலசமயங்களில் தடுமாற்றமடைந்தான். அவனுடைய முன்மாதிரியிலிருந்து நாம் பின்பற்றவேண்டிய, பின்பற்றக்கூடாத பாடங்கள் என்ன?
  3. துன்மார்க்கரை தேவன் தண்டிப்பார் என்கிற கருத்துக்கு எதிராக சிலர் வாதிடுகின்றனர்; இந்தச் செயல் தேவ அன்பிற்கு எதிரானது என்று கூறுகிறார்கள். துன்மார்க்கரை தேவன் தண்டிப்பார் என்பது உண்மைதான். ஆனால், அது தேவ அன்புக்கு எதிரானது அல்ல என்பதை நாம் எவ்வாறு முன்வைக்கலாம்?