பாடம் 5

ஏப்ரல் 23-29

எல்லாத் தேசங்களும் பாபேலும்

ஓய்வுநாள் பிற்பகல்:

ஏப்ரல் 23

இவ்வார ஆராய்ச்சிக்கு: ஆதி 9:18-11:9; லூக் 10:1; மத் 1:1-17; லூக் 1:26-33; சங் 139:7-12; ஆதி 1:28; ஆதி 9:1.

மனனவசனம்: ‘பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில் தாறுமாறாக் கினபடியால், அதின் பேர் பாபேல் என்னப்பட்டது; கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப் போகப்பண்ணினார்.’ ஆதி 11:9.

ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, நோவா எனும் தனிமனிதனைப் பற்றிப் பேசாமல், அவனுடைய மூன்று குமாரர்களான சேம், காம், யாப்பேத்பற்றி வேதாகமம் பேசுகிறது. குறிப்பாக காமின் வம்சவரலாற்றைச் சொல்கிறது. அவன் கானானின் தகப்பன். ஆதி 10:6, 15. இது, வாக்குத்தத்த ‘கானான்’ தேசத்தை நினைவுபடுத்து கிறது. ஆதி 12:5. அந்தத் தேசத்தை நாடியே ஆபிரகாம் சென்றான். அவன்மூலமாக பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படவிருந்தன. ஆதி 12:3.

வம்சவரலாற்றைச் சொல்லிவந்த நிலையில், திடீரென பாபேல் கோபுரம்பற்றி ஆதி 11:1-9 பேசுகிறது. மீண்டும், மனுகுலம் குறித்த தேவதிட்டங்கள் தகர்கின்றன. பல தேசங்கள் உருவானது ஓர் ஆசீர்வாதமாக இருந்திருக்க வேண்டும்; ஆனால் அதுவே இன்னொரு சாபத்திற்கு காரணமாகிறது. தேசங்கள் இணைந்து, தேவனுடைய இடத்தை ஆக்கிரமிக்க முயல்கின்றன. அதனால் தேவன் அவர்களை நியாயந்தீர்க்கிறார். அதனால் குழப்பம் உண்டாகிறது; மக்கள் உலகமெங் கும் சிதறுண்டு செல்கிறார்கள். ஆதி 11:8. இவ்வாறு ‘பூமியை நிரப்புங்கள்’ என்று தேவனிட்ட கட்டளை நிறைவேறுகிறது. ஆதி 9:1.

மனிதர்கள் துன்மார்க்கமாக நடந்தாலும்கூட, தேவன் தீமையை நன்மையாக மாற்றுகிறார். எப்போதுமே தேவனுக்குத்தான் இறுதி வெற்றி. தன் தகப்பனுடைய கூடாரத்தில் காம் சபிக்கப்பட்டான். ஆதி 9:21, 22. பாபேல் கோபுர நிகழ்வின் நிமித்தம் தேவன் தேசங்களைக் குழம்பச்செய்து, அவற்றைச் சபித்தார். ஆதி 11:9. இந்தச் சாபங்களையெல்லாம் தேசங்களுக்கு ஆசீர்வாதமாக மாற்றவிருந்தார்.

2021, ஏப்ரல் 30 வகுப்புக்காகப் படிக்கவேண்டிய பாடம்

ஞாயிற்றுக்கிழமை

ஏப்ரல் 24

காமுக்குச் சாபம்

ஆதி 9:18-27இல் உள்ள விநோதமான சம்பவம் சொல்கிற செய்தி என்ன?

நோவா திராட்சத்தோட்டத்தில் வேலைசெய்தது, ஆதாம் ஏதேன் தோட்டத்தில் இருந்ததை ஞாபகப்படுத்துகிறது. இரண்டு சம்பவங்களிலும்கனியைப் புசித்தல், அதனால் நிர்வாணமாகுதல், பிறகு வஸ்திரத்தால் மூடுதல், ஒரு சாபம், ஓர் ஆசீர்வாதம் போன்ற சில பொதுவான கூறுகள் உள்ளன. ஆதாமின் வம்சத்தில் தானும் வந்ததை நோவா நிரூபித்தான்; அதே தோல்வி வரலாற்றைத் தொடர்ந்தான்.

பழங்களைப் புளிக்கவைத்து குடிக்கும்படி சிருஷ்டிப்பின்போது தேவன் சொல்லவே இல்லை. ஆனால் நோவா குடித்தான்; சுயக்கட்டுப்பாட்டை இழந்தான்; அதனால் வஸ்திரத்தை இழந்தான். விலக்கப்பட்ட விருட்சத்தை ஏவாள் பார்த்ததுபோல நோவாவின் நிர்வாணத்தை காம் ‘பார்த்தான்’. ஆதி 3:6. இந்த ஒற்றுமையிலிருந்து ஒன்று தெரிகிறது. காம் தன் தகப்பனின் நிர்வாணத்தை எதேச்சையாகப் ‘பார்க்கவில்லை’; மாறாக, தகப்பனின் நிர்வாணத்தை மூட முயலாமல், அதைவெளியே போய்ச் சொல்லுகிறான். ஆனால் அவனுடைய சகோதரர்கள் உடனடியாக தகப்பனுடைய நிர்வாணத்தை மூட முயல்கிறார்கள்; அது காமின் செயல்களைக் கண்டிக்கிற வகையில் இருந்தது.

பெற்றோரைக் கனம்பண்ணத் தவறுவதின் விளைவை இந்தச் சம்பவம் வலியுறுத்துகிறது. நம் பெற்றோரைக் கனம்பண்ணத் தவறினால், நம் எதிர்காலம் பாதிக்கப்படும். யாத் 20:12; ஒப்பிடவும் எபே 6:2. எனவே காமின் எதிர்காலத்தையும் அவனது குமாரன் கானானின் எதிர்காலத்தையும் அந்தச்சாபம் பாதித்தது.

இந்த வசனங்களை வைத்து, யாருக்கும் எதிராக இனரீதியில் தப்பெண்ண கருத்துகளை வளர்ப்பது மிகப்பெரிய இறையியல் தவறு; அறநெறிக் குற்றமும்கூட. இந்தத் தீர்க்கதரிசனம் காமின் குமாரனான கானானுக்கும்மட்டும் சொல்லப்பட்ட ஒன்று. கானானியர்களின் சில சீர்கேடான நடைமுறைகளை மனதில் வைத்து, வேதாகம ஆசிரியர் இதை எழுதியிருக்கலாம். ஆதி 19:5-7, 31-35.

மேலும், அந்தச் சாபத்தில் ஓர் ஆசீர்வாத வாக்குறுதியும் உள்ளது. ‘கானான்’ என்கிற பெயரில் அதைக் காணலாம். கானான் என்பது கானா என்கிற எபிரெய வினைச்சொல்லிலிருந்து வந்தது. அதற்கு ‘அடக்கு’ என்று அர்த்தம். கானான் தேசத்தை அடக்குவதன்மூலம் சேமின் வம்சத்தாரான தேவமக்கள் வாக்குத்தத்த தேசத்தைச் சுதந்தரிக்கவிருந்தார்கள்; மேசியாவின் வருகைக்கு வழியை உண்டாக்கவிருந்தார்கள்; அவரே ‘சேமுடைய கூடாரங்களில் குடியிருக்கும்படி ‘யாப்பேத்தை விருத்தியாக்குவார்’. ஆதி 9:27. இது, சகல தேசங்களோடும் தேவன் செய்த உடன்படிக்கையை தீர்க்கதரிசனமாகச் சுட்டிக்காட்டுகிறது; இஸ்ரவேலர் இரட்சிப்பின் செய்தியை உலகத்திற்கு அறிவிப்பதும் அதில் அடங்கும். தானி 9:27; ஏசா 66:18-20; ரோமர் 11:25. காமின் சாபமானது சகல தேசங்களுக்கும் ஓர் ஆசீர்வாதமாக விளங்கும்; காம் – கானானின் சந்ததியாரில் தேவனுடைய இரட்சிப்பை ஏற்றுக்கொள்கிற அனைவரும் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.

ஜலப்பிரளயத்தின் முக்கிய கதாபாத்திரமான ‘நோவா’ குடித்தானா? நாம் அனைவருமே குற்றமுள்ளவர்கள், நம் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் நமக்கு கிருபை தேவையாயிருக்கிறது என்பதை இது எவ்வாறு காட்டுகிறது?

திங்கட்கிழமை

ஏப்ரல் 25

ஆதியாகம வம்சவரலாறு

ஜலப்பிரளயத்திற்கு முன்னர் வாழ்ந்தவர்களுக்கும் பின்னர் வாழ்ந்தவர்களுக்கும் இடையே நோவா ஒரு பாலமாக இருந்ததை அவனுடைய கால வம்ச வரலாறு சொல்கிறது. இந்தச் சம்பவத்தின் கடைசி இரண்டு வசனங்கள், அதாவது ஆதி 9:28, 29 ம் வசனங்கள் ஆதாமின் வம்சவரலாற்றின் கடைசி இணைப்பை ஞாபகப்படுத்துகிறது. ஆதி 5:32. நோவாவின் தகப்பனான லாமேக்குக்கு 56 வயதாக இருந்தபோது, ஆதாம் மரித்தான்; எனவே ஆதாம்பற்றி நோவா கண்டிப்பாகக் கேள்விப்பட்டிருப்பான்; அதை ஜலப்பிரளயத்திற்கு முன்னரும் பின்னரும் வாழ்ந்த தன் வம்சத்தாருக்கும் சொல்லியிருப்பான்.

வேதாகமத்தில் இந்த வம்சவரலாறு வருவதின் நோக்கம் என்ன? ஆதி 10; லூக்கா 3:23-28.

 வேதாகமத்தில் வம்சவரலாறு வருவதற்கு மூன்று காரணங்கள் உள்ளன.

முதலாவது, வேதாகம நிகழ்வுகளின் வரலாற்று தன்மையை வலியுறுத்துவதற்கு; வாழ்ந்தவர்கள், மரித்தவர்கள், வாழ்ந்த ஆண்டுகள்குறித்த விபரங்கள் இருக்கும்.

இரண்டாவது, முற்காலம்முதல் இந்த எழுத்தாளரின் காலம்வரையான தொடர்பை விளக்குவதற்கு; அதனால் முற்காலம் முதல் ‘தற்காலம்’ வரை ஒரு சங்கிலித் தொடரை உருவாக்க முடியும்.

மூன்றாவது, மனிதப்பெலவீனத்தையும், பாவசாபத்தின் கொடிய விளைவையும், பின்னான சகல தலைமுறையினரிலும் அதனால் உண்டான மோசமான விளைவுகளையும் நினைவூட்டுவதற்கு.

காம், சேம், யாப்பேத்தின் வம்சவரலாற்றை தெளிவாக வரையறுத்துச் சொல்லவில்லை. மொத்தம் எழுபது தேசத்தாரைப் பற்றிச் சொல்கிறது; அவை யாக்கோபின் குடும்பத்தைச் சேர்ந்த எழுபதுபேருக்கும், வனாந்தரத்தில் இருந்த இஸ்ரவேலரின் 70 மூப்பர்களுக்கும் முன்னடையாளமாக இருக்கின்றன. ஆதி 46:27; யாத் 24:9. 70 தேசத்தாரையும் 70 மூப்பர்களையும், பிற தேசத்தாருக்குச் செய்யவேண்டியதிருந்த ஊழியத்தோடு தொடர்புபடுத்திப் பார்க்கலாம்: ‘உன்னதமானவர் ஜாதிகளுக்குச் சுதந்தரங்களைப் பங்கிட்டு, ஆதாமின் புத்திரரை வெவ்வேறாய்ப் பிரித்த காலத்தில், இஸ்ரவேல் புத்திரருடைய தொகைக்குத்தக்கதாய், சர்வஜனங்களின் எல்லைகளைத் திட்டம்பண்ணினார்’. உபா 32:8 அவ்வாறே, நற்செய்தியை அறிவிக்க இயேசு 70 சீடர்களை அனுப்பி வைக்கிறார். லூக் 10:1.

ஆதாமுக்கும் கோத்திரப்பிதாக்களுக்கும் இடையே உள்ள நேரடித் தொடர்பை இந்தத் தகவல் காட்டுகிறது. அவர்கள் ஆதாமின் வம்சவழியில் வந்த வரலாற்றின் நிஜமனிதர்கள். எனவே ஆதிகால நிகழ்வுகளை நேரடியாகப் பார்த்திருந்தவர்களை இந்தக் கோத்திரப்பிதாக்கள் நேரடியாகச் சந்தித்திருந்தார்கள்.

மத்தேயு 1:1-17இல் வருகிற அனைவரும் உண்மையில் வரலாற்றில் வாழ்ந்தவர்கள் என்பது எவ்வாறு தெளிவாகிறது? அவர்கள் உண்மையில் வாழ்ந்தவர்கள் என்பதை அறிவதும், நம்புவ தும் நம் விசுவாசத்திற்கு ஏன் முக்கியமானது?

செவ்வாய்க்கிழமை

ஏப்ரல் 26

ஒரே பாஷை

‘பூமியெங்கும்’ இருந்தவர்கள் சிதறிப்போகாமல் ஒரே இடத்தில் இருக்க விரும்பியது ஏன்? ஆதி 11:1-4.

‘பூமியெங்கும்’ என்பது ஜலப்பிரளயத்திற்கு பிறகு வாழ்ந்த ஒரு சிறுகூட்ட மக்களைக் குறிக்கிறது. வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தைக் கட்டுவதற்காக அவர்கள் ஓரிடத்தில் கூடினார்கள். ஆதி 11:4. அவர்களுடைய உண்மையான நோக்கம், சிருஷ்டிகராகிய தேவனுடைய இடத்தை எடுத்துக்கொள்வதே. அந்த மக்களுடைய நோக்கங்களும் செயல்களும் சிருஷ்டிப்புச் சம்பவத்தில் வெளிப்படுகிற தேவனுடைய நோக்கங்களையும் செயல்களையும் பிரதிபலிக்கிறது. உதாரணமாக: ‘அவர்கள் சொல்லிக்கொண்டார்கள்’ ஆதி 11:3, 4; ஒப்பிடவும் ஆதி 1:6, 9, 14 போன்ற வசனங்கள்.’ உண்டாகப்பண்ணுவோம்’ ஆதி 11:3, 4; ஒப்பிடவும் ஆதி 1:26. அவர்களுடைய நோக்கம் தெளிவாகத் தெரிகிறது: ‘நமக்குப் பேர் உண்டாகப்பண்ணுவோம்’ ஆதி 11:4. இந்த வார்த்தைகள் தேவனுக்கு மட்டுமே சொந்தமானவை. ஏசாயா 63:12, 14.

சிருஷ்டிகராகிய தேவனைப் போல் ஆக வேண்டும் என்கிற தவறான ஆசையோடு பாபேல் கோபுரத்தைக் கட்டினார்கள். அதற்குப் பின்னணியில் இருந்தது யார் என்பது நமக்குத் தெரியும்தானே? ஏசா 14:14. அவர் கள் அந்த முடிவுக்கு வந்ததற்குஜலப்பிரளயமும் ஒரு காரணமாக இருந்திருக்கும். இனி ஜலப்பிரளயம் வருவதில்லை என்று வாக்குக்கொடுத்திருக்க, அப்படியொன்று வந்தால், அதிலிருந்து தப்புவதற்காக உயரமான கோபுரம் கட்டினார்கள். ஜலப்பிரளய ஞாபகம் பாபிலோனிய பாரம்பரியத்தில் இடம்பிடித்திருந்தது; ஆனால் உள்ளபடி அதை அறியாமல் இருந்திருக்கலாம்; அதனால்தான் பாபேல் நகரத்தை (பாபிலோன்) கட்டியிருக்க வேண்டும். வானத்தை எட்டி, தேவனுடைய இடத்தைப் பிடிக்க நினைப்பது, உண்மையில் பாபிலோனின் ஆவியையைச் சுட்டிக்காட்டுகிறது.

அதனால்தான் பாபேல் கோபுரச் சம்பவமானது தானியேல் புத்தகத்தில் ஒரு முக்கியக் கருத்தாக இடம்பெற்றுள்ளது. பாபேல் கோபுரச் சம்பவத்தில் சிநேயார் தேசம் வருகிறது. ஆதி 11:2. சிநேயார் தேசத்தில்தான் எருசேலம் தேவாலயப் பொருட்களை நேபுகாத்நேச்சார் வைத்ததாக தானியேல் புத்தகம் தொடங்குகிறது.தானி 1:2. வேதாகமத்தின் பல பகுதிகள் இதை தெளிவுப்படுத்துகின்றன. குறிப்பாக, அதேஇடத்தில் அதே ‘சமவெளியில்’ நேபுகாத்நேச்சார் பொற் சிலையை நிறுவியது குறிப்பிடத்தக்கது. முடிவுகாலத் தீர்க்கதரிசனங்களிலும் தானியேல் இதே காட்சியைத் தான் பார்க்கிறான். பூமியின் தேசங்கள் தேவனுக்கு எதிராக ஒன்று திரளுகின்றன; ஆனால் பாபேல் சம்பவம்போல அந்த முயற்சி தோற்றுப்போகிறது. தானி 2:43; தானி 11:43-45; ஒப்பிடவும் வெளி 16:14-16.

முற்கால பிரபல பிரெஞ்ச் நாத்திக எழுத்தாளர் ஒருவர், மனுக்குலத்தின் மிகப்பெரிய நோக்கம்.  ‘கடவுளைப் போலாக’ முயல்வதெனச் சொன்னார். ஏவாளும்கூட ஏதேனில் இதே ஆபத்தான பொய்யை நம்பிதானே ஏமாந்துபோனாள்? ஆதி 3:5.

புதன்கிழமை

ஏப்ரல் 27

‘நாம் இறங்கிப்போய்’

தேவன் எதற்காக பூமிக்கு இறங்கிவந்தார்? ஆதி 11:5-7; சங் 139:7-12. தேவன் அவ்வாறு தீர்மானித்ததற்கு காரணமாக இருந்த நிகழ்வு என்ன?

மனிதர்கள் உயரத்திற்குமேல் உயரமாகக் கட்டிக்கொண்டிருக்க, தேவன் கீழே இறங்கிவந்தார். தேவன் இறங்கிவந்தார் என்பது அவர் உன்னதமான நிலையில் இருப்பதைக் காட்டுகிறது. தேவன் எப்போதும் மனிதர்களுக்கு எட்டாத தூரத்தில்தான் இருக்கிறார். அவர் இருக்கிற இடத்திற்கு ஏறிச்சென்று, அவரைச் சந்திக்க முயல்வது வீண்; பைத்தியக்காரத்தனம். அதனால்தான் நம்மை இரட்சிக்க இயேசு நம்மிடத்திற்கு இறங்கிவந்தார். அதுதவிர, நம்மை இரட்சிக்க வேறு வழி இல்லை.

பாபேல் கோபுரச் சம்பவத்தில், ‘நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிறதற்கு’ என்று தேவன் சொன்னது சற்று முரணாக உள்ளது. ஆதி 11:5. பார்ப்பதற்கு தேவன் இறங்கிவரவேண்டிய அவசியமில்லை. சங் 139:7-12; ஒப்பிடவும்: சங் 2:4. ஆனாலும் இறங்கிவந்தார். தேவன் மனுக்குலத்தின்மேல் எவ்வளவு அக்கறை காட்டுகிறார் என்பதை இது காட்டுகிறது.

நம்மைச் சந்திக்க தேவன் இறங்கி வந்ததுபற்றி லூக்கா 1:26-33 வசனங்கள் சொல் வது என்ன?

 விசுவாசத்தால்மட்டுமே இரட்சிப்பும், தேவகிருபையும் கிடைக்கிறது என்கிற நியதியையும் அவர் இறங்கிவந்தது காட்டுகிறது. தேவனுக்காக நாம் செய்கிறவேலை எதுவாக இருந்தாலும், அவர் நம்மைப் பார்க்க இறங்கி வந்தால்தான் உண்டு. நாம் என்ன செய்கிறோம் என்பதைவைத்து அவர் இறங்கி வந்து, நம்மை மீட்பதில்லை. மாறாக, தேவனே தாமாக நமக்காக இறங்கி வருவதால் மீட்புகிடைக்கிறது. தேவன் ‘இறங்கினதாக’ ஆதியாகமம் இருமுறை குறிப்பிடுகிறது. அவர் எவ்வளவு தூரம் அக்கறைகாட்டினார் என்பது இதில் தெரிகிறது.

அவர்கள் ஒரே இடத்தில் கூடுவதைத் தடுப்பதற்கு தேவன் விரும்பினார் இல்லையெனில், விழுந்துபோன நிலையில், அது அதிக தீமைக்கு வழிவகுக்கும். அதனால்தான் பாஷைகளைக் குழப்பி, அவர்கள் திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரத் தீர்மானித்தார்.

‘பாபேலைக்கட்டினவர்களின் திட்டங்கள் தவிடுபொடியாகி, அவமானத்தில் முடிந்தன. அவர்கள் அகந்தைக்கு அடையாளமான அது, மூடத்தனத்தின் நினைவுச்சின்னமானது. ஆனாலும் மனிதர்கள் அதே பாதையில்தான் செல்கிறார்கள். அதாவது, சுயத்தைச் சார்ந்து, தேவனுடைய பிரமாணத்தைப் புறக்கணிக்கிறார்கள். இதைத்தான் பரலோகத்தில் சாத்தானும் செய்தான். இதே நியதியின்படிதான் காயீனும் பலிசெலுத்தினான்’.1

1Ellen G. White, Patriarchs and Prophets, p. 123.

பாபேல் கோபுரச் சம்பவம் எவ்வாறு மனிதனின் ஆணவத்திற்கும், இறுதியில் அதால் பயனில்லை என்பதற்கும் மற்றுமொரு உதாரணமாக இருக்கிறது? இந்தச் சம்பவத்தில் ஒவ்வொருவருக்கும் உள்ள பாடங்கள் என்ன?

வியாழக்கிழமை

ஏப்ரல் 28

சிதறடிக்கப்பட்டோரின் மீட்பு

தேவன் அவர்களைச் சிதறிப்போகச் செய்தது எவ்வாறு ஒரு மீட்பின் செயலாகும்? ஆதி 11:8,9; 9:1; ஒப்பிடவும்: ஆதி 1:28.

‘பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்’ என்பதே மனிதர்களுக்கு தேவன் கொடுத்த ஆசீர்வாதம்; தேவனுடைய திட்டம். ஆதி 9:1; ஒப்பிடவும்:ஆதி 1:28. தேவனுடைய திட்டத்திற்கு மாறாக, பாபேலைக் கட்டினவர்கள் ஒரே இடத்தில் இருக்க விரும்பினார்கள். அந்த நகரத்தை அவர்கள் கட்ட விரும்பினதற்கு ஒரு காரணம், ‘நாம் பூமியின்மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு’ என்பதே. ஆதி 11:4. வேறு இடங்களுக்குச் செல்ல விரும்பவில்லை. தனித்தனியாக சிதறிச் செல்வதைவிட, ஒரே இடத்தில் இருந்தால் மிகவும் ஆற்றலோடு இருக்கலாமென நினைத்திருக்கலாம். ஒரு விதத்தில் அது சரிதான்.

ஆனால் ஒன்றாக இருந்து நன்மையை அல்ல, தீமையைச் செய்ய விரும்பினார்கள். ‘நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம்’ என்றார்கள். அவர்களுடைய துணிகரமும் அகந்தையும் உச்சக்கட்டத்தில் இருந்தது. மனிதர்கள் தேவனுக்கு எதிராக நின்று, தங்களுக்கு ‘பேர் உண்டாகப்பண்ண’ நினைக்கும்போதெல்லாம், அது தோல்வியில்தான் முடிந்திருக்கிறது. அந்த முயற்சி வெற்றிபெற்றதே இல்லை.

அவர்களுடைய துணிகரமானச் செயலுக்குத் தண்டனையாக, தேவன் அவர்களை  ‘பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்’. ஆதி 11:9. அப்படி நடக்கக் கூடாது என்றே அவர்கள் நினைத்தார்கள்.

பாபேல் என்றால் ‘கடவுளின் வாசல்’ என்று அர்த்தம். அது ‘பலால்’ எனும் வினைச்சொல்லுடன் சம்பந்தமுடையது. பலால் என்றால் ‘குழப்பு’ என்று அர்த்தம். ஆதி 11:9. அவர்கள் கடவுளின்  ‘வாசலை’ அடைவதற்கு கடவுளின் நிலையை அடைவதற்கு நினைத்ததால், குழப்பத்தில்போய் நின்றார்கள்; முன்பைவிட பெலமிழந்து காணப்பட்டார்கள்.

‘பாபேலின் மனிதர்கள், தேவன் இல்லாத ஓர் அரசாங்கத்தை ஏற்படுத்த உறுதிகொண்டார்கள். ஆனாலும் அவர்கள் மத்தியில் கர்த்தருக்குப் பயந்த ஒரு சிலர் இருந்தார்கள்; பக்தியற்றவர்களின் வேஷங்களால் வஞ்சிக்கப்பட்டு, அவர்களுடைய திட்டங்களில் பங்கெடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் உண்டானது. அந்த உண்மையுள்ளவர்களின் நிமித்தம் தேவன் தம் நியாயத் தீர்ப்புகளைத் தள்ளிப்போட்டார்; மக்கள் தங்கள் உள்ளான நிலையை வெளிப்படுத்த அவகாசமளித்தார். அவ்வாறு வெளிப்பட்டபோது, தேவபுத்திரர்கள் அவர்களை மனந்திரும்பச் செய்ய முயன்றார்கள்; ஆனால் அவர்களோ பரலோகத்திற்குச்சவால் விடுவதில்முற்றிலும் இணைந்திருந்தார்கள். அவர்களைத் தடுக்காமல் விட்டிருந்தால், உலகத்தை ஆரம்பக்கட்டத்திலேயே ஒழுக்கமற்றதாக மாற்றியிருப்பார்கள். அந்தச் சதித்திட்டம் கலகத்தால் உண்டானது; சுயமேன்மைக்காக ஸ்தாபிக்கப்பட்டது; தேவ ஆளுகைக்கும் கனத்திற்கும் பங்கம் விளைவிப்பது’.1

¹Ellen G. White, Patriarchs and Prophets, p. 123.

நமக்கு ‘பேர் உண்டாகப்பண்ண’ எதையும் செய்யாமல் இருக்க ஏன் கவனம் அவசியம்?

வெள்ளிக்கிழமை

ஏப்ரல் 29

மேலும் படிக்க:

‘ஒரு நகரத்தையும், நகரத்திற்குள் உயரமான ஒரு கோபுரத்தையும் கட்டத் தீர்மானித்தார்கள். இந்த முயற்சிகளை எல்லாம் மக்கள் கூட்டம்கூட்டமாக சிதறிப்போவதைத் தடுப்பதற்காக எடுத்தார்கள். மனிதர்கள் பூம்யெங்கும் செல்லவும், பலுகிப்பெருகி, அதைக் கீழ்ப்படுத்தவும் தேவன் கட்டளையிட்டார். ஆனால் பாபேலைக் கட்டினவர்கள் ஒரே இடத்தில் கூடி வாழவும், பூமி முழுவதையும் அரசாளுகிற சாம்ராஜ்யத்தை அமைக்கவும் தீர்மானித்தார்கள். அதன் மூலம் தங்கள் நகரத்தை உலகளாவிய சாம்ராஜ்யத்தின் தலைநகராக்கலாம், அதன் மகிமையைக் கண்டு உலகம் முழுவதையும் பிரமிக்கவைக்கலாம், வணங்கச் செய்யலாம், அதை ஸ்தாபித்த தங்களைப் புகழச்செய்யலாம். வானத்தை எட்டுமளவிற்கு உயரமான கோபுரம், அதைக் கட்டின தங்களின் ஆற்றலுக்கும் அறிவுக்கும் நினைவுச்சின்னமாக விளங்கும், தங்கள் புகழ்பற்றி பின்சந்ததியாரையும் பேசவைக்கும் என்று நினைத்தார்கள்.

‘இனி பூமியின்மேல் ஜலப்பிரளயம் வராது’ என்கிற தேவனுடைய உடன்படிக்கையை சிநேயார் சமவெளியில் வசித்த மக்கள் நம்பவில்லை. அவர்களில் பலர் தேவன் இருப்பதை நம்பவில்லை; இயற்கை விளைவுகளால் ஜலப்பிரளயம் வந்ததாகச் சொன்னார்கள். மற்றவர்கள் கடவுள் ஒருவர்இருப்பதையும், அவர்தாம் ஜலப்பிரளயத் திற்குமுன் உலகத்தை அழித்ததையும் நம்பினார்கள். ஆனால் காயீனைப் போல இருதயங்களில் கலகம் எண்ணம் கொண்டார்கள்; மீண்டும் ஜலப்பிரளயம் வந்தால் தங்களைப் பாதுகாப்பதற்காக ஒரு கோபுரத்தைக் கட்ட விரும்பினார்கள். ஜலப்பிரளயத்தின் தண்ணீர்கூட எட்டாத உயரத்திற்கு கோபுரத்தைக் கட்டிவிட்டால், எந்த ஆபத்தும் தங்களை அண்டமுடியாதென நினைத்தார்கள். மேகங்கள் இருக்கிற இடம்பட்டும் ஏறிவிட்டால், ஜலப்பிரளயத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து விடலாமென நினைத்தார்கள். கட்டுமானக்காரர்களின் அகந்தையை மேலும் அதிகரித்து, வருங்காலச் சந்ததியாரின் இருதயங்களை தேவனைவிட்டு விலக்கி, அவர்களை சிலைவழிபாட்டிற்குள் வழிநடத்தும்படியே அந்த ஒட்டுமொத்த திட்டமும் இருந்தது ‘.1

¹Ellen G. White, Patriarchs and Prophets, pp. 118, 119.

கலந்துரையாடக் கேள்விகள்

  1. தங்களுக்கு பேர் உண்டாகப் பண்ண வேண்டும் என்று முயல்கிறவர்களால் முற்காலத்திலும், இப்போதும் பிரச்சனை உண்டாகியிருக்கிறது என்பதற்கு வரலாற்றில் என்ன உதாரணம் உள்ளது?
  2. நாமும்கூட ஒரு சபையாக பாபேல் கோபுரம் போன்று எதையும் கட்டமுயற்சிக்கிற ஆபத்தை எவ்வாறு தவிர்க்கலாம்? நம்மை அறியாமலும்கூட என்னென்ன வழிகளில் நாம் அவ்வாறு செய்ய வாய்ப்புள்ளது?