பாடம் 13

ஜூன் 18-24

எகிப்தில் இஸ்ரவேல்

ஓய்வுநாள் பிற்பகல்:

ஜூன் 18

இவ்வார ஆராய்ச்சிக்கு: ஆதி 46; ரோமர் 10:12, 13; ஆதி 47; ஆதி 48; அப் 3:25, 26; ஆதி 49; பிலி 2:10; ஆதி 49:29-50:21.

மனன வசனம்: ‘இஸ்ரவேலர் எகிப்துதேசத்திலுள்ள கோசேன் நாட்டிலே குடியிருந்தார்கள்; அங்கே நிலங்களைக் கையாட்சி செய்து, மிகவும் பலுகிப் பெருகினார்கள்.’ ஆதி 47:27.

யாக்கோபு மற்றும் யோசேப்பின் கடைசிக்காலங்கள்பற்றி ஆதியாகமம் சொல்கிறது. எகிப்தில் குடியிருக்கும்படிஇஸ்ரவேல் எனும் யாக்கோபு கானானை விட்டுச் சென்றான். ஆதி 46, 47. அங்கேயே மரிக்கவும் இருந்தான். ஆதி 49:29-50:21. எகிப்தில் இருந்தாலும்கூட, வாக்குத்தத்த தேசத்திற்கு திரும்ப எப்படிச் செல்லப்போகிறார்கள் என்பது பெரிய கேள்வியாக இருந்தது. ஆதி 50:22-26.

யாக்கோபு எகிப்திற்கு வந்ததுமே பார்வோனை ஆசீர்வதிக்கிறான். ஆதி 47:7-10. எனவே, நீ ஜாதிகளுக்கு ஆசீர்வாதமாய் இருப்பாய் என்று ஆபிரகாமுக்கு தேவன் கொடுத்த வாக்குறுதி இங்கு ஒருவிதத்தில் நிறைவேறுகிறது. ஆதி 12:3. பிறகு மரிக்கும் தருவாயில், யோசேப்பின் பிள்ளைகளை யாக்கோபு ஆசீர்வதிக்கிறான். ஆதி 48. யாக்கோபு தன் பிள்ளைகளையும் ஆசீர்வதிக்கிறான். ஆதி 49:1-28. அப்போது இஸ்ரவேலின் வருங்கால 12 கோத்திரங்களின் அடிப்படையில் சில முக்கிய விஷயங்களை முன்னுரைக்கிறான். ஆதி 49:1-27.

இஸ்ரவேல் எகிப்திற்குச் சென்று ‘வாசம்பண்ணியது’ வாக்குத்தத்த தேசத்திற்குத் திரும்பிச்செல்லும் நம்பிக்கையை கேள்விக்குறியாக மாற்றியிருந்தது. இஸ்ரவேல் புத்திரர் எகிப்தில் இருந்ததாகத்தான் ஆதியாகமப் புத்தகம் முடிகிறது; ஆனால் யோசேப்பு கடைசியாகச் சொன்ன சில வார்த்தைகள், அவர்கள் அங்கிருந்து செல்லவிருந்ததைக் காட்டுகிறது: ‘நான் மரணமடையப்போகிறேன்; ஆனாலும் தேவன் உங்களை நிச்சயமாய்ச் சந்தித்து, நீங்கள் இந்தத் தேசத்தை விட்டு, தாம் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக்கொடுத்திருக்கிற தேசத்துக்குப் போகப்பண்ணுவார்’. ஆதி 50:24.

2021, ஜூன் 25 வகுப்புக்காகப் படிக்கவேண்டிய பாடம்

ஞாயிற்றுக்கிழமை

ஜூன் 19

யோசேப்பிடம் யாக்கோபு செல்கிறான்

யாக்கோபு கானானை விட்டுப் புறப்பட்டதிலுள்ள முக்கியத்துவம் என்ன? ஆதி 46.

யாக்கோபு கானானிலுள்ள தன் வசிப்பிடத்தைவிட்டு முற்றிலும் நம்பிக்கையோடு சென்றான். எகிப்திற்குச் சென்றால் பசியால் வருந்த அவசியமில்லை என்பதும், யோசேப்பு உயிருடன் இருந்த நற்செய்தியும்தான் அந்த வாக்குத்தத்த தேசத்தை விட்டு அவன் புறப்படுவதற்குத் தூண்டியிருக்க வேண்டும்.

ஆபிரகாமுக்கு உண்டான அதே அனுபவம்தான் இங்கே யாக்கோபுக்கு உண்டாகிறது; ஆனால் ஆபிரகாம் வாக்குத்தத்த தேசத்தை நோக்கிச் சென்றான். ஆபிரகாம் தேவனிடமிருந்து கேட்ட அதே வாக்குறுதியை யாக்கோபும் கேட்கிறான்; அதாவது அவனை ‘பெரிய ஜாதியாக்குவதாக’ தேவன் சொன்னார். ஆதி 46:3; ஒப்பிடவும் ஆதி 12:2. தேவனுடைய அழைப்பு அவர் ஆபிரகாமுடன் செய்த உடன்படிக்கையையும் ஞாபகப்படுத்துகிறது. ஆபிரகாமிடமும் யாக்கோபிடமும் ‘பயப்பட வேண்டாம்’ என்று சொல்லி, தேவன்உத்தரவாதமளிக்கிறார். ஆதி 46:3; ஒப்பிடவும் ஆதி 15:1. அதாவது வளமான ஓர் எதிர்காலம் காத்திருப்பதாக உறுதியளித்தார்.

எகிப்திற்குச் சென்ற அவனுடைய குமாரர்களுடைய பெயர்கள் விலாவாரியாகச் சொல்லப்படுகிறது. ஆதி 46:7. ஆபிரகாம் பிள்ளையில்லாமல் இருந்தபோதே அவன் பலுகிப்பெருக்குவான் என்று தேவன் வாக்குரைத்ததை அது ஞாபகப்படுத்துகிறது. யாக்கோபு, யோசேப்பு, அவனுடைய இரண்டு குமாரர்கள் உட்பட மொத்தம்’ எழுபது’ பேர். எழுபது என்பது முழுமையைக் குறிக்கிறது. இஸ்ரவேலர் ‘யாவரும்’ எகிப்திற்குப் போனார்கள். 70 என்கிற எண், மொத்த தேசங்களின் எண்ணிக்கைக்கு ஒத்திருக்கிறது. ஆதி 10. சகல தேசங்களின் முடிவும் யாக்கோபின் பயணத்தைச் சார்ந்தே இருந்தது.

இந்த உண்மை பலவருடங்களுக்கு பின்னர்தான் முற்றிலும் விளங்கவிருந்தது. அதாவது சிலுவையில் இயேசு மரித்து, இரட்சிப்பின் திட்டம் முழுவதும் வெளியரங்கமான போதுதான் விளங்கியது. அதாவது ஆபிரகாமின் புத்திரருக்காக மட்டு மல்ல; ஒட்டுமொத்த மனுக்குலத்திற்காகவும் இயேசு மரித்தார்.

வேறு வார்த்தைகளில் சொன்னால், ஆபிரகாமின் சந்ததியாரான இந்தக் குடும் பத்தாரின் அனுபவம் எவ்வளவுதான் ஆர்வமூட்டுவதாக இருந்தாலும், அதில் பற்பல ஆவிக்குரிய பாடங்கள் சம்பந்தப்பட்டிருந்தாலும், அவை இரட்சிப்பின் வரலாற்றில் ஓர் அங்கமாக இருப்பதாலேயே தேவவார்த்தையில் இடம்பெற்றுள்ளன. விழுந்துபோன இந்த உலகில் யாரையெல்லாம் மீட்கமுடியுமோ அவர்களை மீட்பதற்கான தேவதிட்டத்தின் ஒரு பகுதியாக அவை இருக்கின்றன.

‘யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார். ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்’. ரோமர் 10:12,13. சுவிசேஷம் எல்லாருக்கும் உரியது என்பதை பவுலின் வார்த்தைகள் எவ்வாறு காட்டுகின்றன? சுவிசேஷத்தைப் பரப்புவதற்கு ஒரு சபையாக பிரயாசப்படவேண்டியதையும் எவ்வாறு காட்டுகின்றன?

திங்கட்கிழமை

ஜூன் 20

யாக்கோபு எகிப்தில் குடியமர்தல்

யோசேப்பு எகிப்தில் உயிரோடிருந்த செய்திபற்றி விலாவாரியாகச் சொன்ன போதிலும்கூட, ஆண்டவர் ‘இரவிலே தரிசனமாகி’, அங்கிருந்து செல்லும்படி கட்டளையிட்டபோது சென்றான். ஆதி 46:2. யாக்கோபு வாக்குத்தத்த தேசத்தை விட்டு எகிப்திற்குச் செல்கிறான். அந்த இடம்தான் பூமியிலேயே அவர்கள் மீண்டும் செல்ல விரும்பாத ஓர் இடமாக விளங்கவிருந்தது.உபா 17:16.

ஆதி 47இன் சம்பவத்திலுள்ள ஆவிக்குரிய சத்தியங்களும் நியதிகளும் என்ன?

‘பார்வோனிடம் அறிமுகப்படுத்தவும், அவர்கள் தங்குவதற்கு நிலத்தைப் பெறவும் யோசேப்பு அவர்களை பார்வோன்முன் நிறுத்தினான். தன் முதல் மந்திரிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அந்த மன்னன் அவர்களுக்குஅரசு பதவிகளை வழங்கி கௌரவிக்க எண்ணியிருக்கலாம்; ஆனால், யெகோவாவையே உண்மையோடு தொழவும், அஞ்ஞான அரவையின் சோதனைகளில் அகப்படாமலும் தன் சகோதரர்களைக் காப்பாற்றயோசேப்பு நினைத்தான். அதனால் இராஜா கேட்டபோது, வெளிப்படையாக தங்கள் தொழில் என்னவென்று சொல்லும்படி ஆலோசனை கூறினான். யாக்கோபின் குமாரர்கள் அந்த ஆலோசனைக்குச் செவிகொடுத்து, தாங்கள் நிரந்தமாக அல்ல, தற்காலிகமாகத் தங்குவதற்கு அங்கு வந்ததாகக் கவனமாகப் பேசினார்கள்; அதன்மூலம் தாங்கள் விரும்பினால் அங்கிருந்து செல்ல தங்களுக்கு உரிமையுண்டெனத் தெரிவித்தார்கள். ராஜா அவர்கள் தங்குவதற்கு, ‘நல்ல நாடாகிய’ கோசேன் நாட்டில் இடமளித்தான்’.1

பார்வோனும் ஞானமாக, அவர்கள் பிறர் தயவில் வாழவும், எகிப்தியர் கொடுத்து பிழைக்கவும் ஊக்குவிக்கவில்லை. அந்தப் புதிய சூழலில் அவர்கள் தாக்குப்பிடிக்கும்படி அவர்களுடைய ‘தொழில்’ என்னவென்று கேட்டான். ஆதி 47:3. அவர்கள் சிறந்து விளங்கும் துறையில் அவர்களைப் பயன்படுத்தவும் விரும்பினான். அதனால் தன் ‘ஆடுமாடுகளை விசாரிக்கிறதற்கு அவர்களை தலைவராக’ வைக்கவும் ஆலோசனைசொன்னான். ஆதி 47:6.

பிறகு, யாக்கோபு அந்நியனாக, பிழைக்க வந்தவனாக, புதியவனாக இருந்த போதிலும், அந்தத் தேசத்தின் தலைவனுக்கு முன்பாக நின்று, ‘பார்வோனை ஆசீர் வதித்தான்’. ஆதி 47:7. பிழைக்கவந்த ஓர் அந்நியன், வல்லமைவாய்ந்த எகிப்தின் அரசனை ஆசீர்வதிக்கிறானா? ஏன் அப்படி நடக்க வேண்டும்?

‘முன்பாக நிறுத்துதல்’ என்பதற்கான எபிரெயச் சொல் அமட் லிஃப்னி. ஆதி 47:7. பொதுவாக ஆசாரியர்கள் சம்பந்தமாக மட்டும் இந்த வார்த்தைகள் வரும். லேவி 14:11. பண்டைய எகிப்தில், பார்வோனை தலைமை ஆசாரியனாகப் பார்ப்பது வழக்கம்; எனவே ஆவிக்குரிய ரீதியாக, எகிப்தின் தலைமை ஆசாரியனைவிட பெரிய ஆசாரியனாக, பார்வோனைவிட பெரியவனாக யாக்கோபு நிற்கி றான்.

1Ellen G. White, Patriarchs and Prophets, p. 233.

நாம் வாழ்க்கையில் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும், நாம் ‘ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும்’ இருப்பதால், மற்றவர்களை நடத்தும்விதத்தில் அது எப்படிப்பட்ட தாக்கத்தை உண்டாக்க வேண்டும்? 1பேதுரு 2:9. நம் விசுவாசம் நம்மேல் சுமத்துகிற கடமைகள் என்ன?

செவ்வாய்க்கிழமை

ஜூன் 21

யோசேப்பின் குமாரர்களை ஆசீர்வதிக்கிறான்

யாக்கோபு மரணத்தருவாயை நெருங்கியபோது, முன்பு பெத்தேலுக்குச் சென்றதை நினைவுகூர்ந்தான். ஆதி 35:1-15. அங்கே, ஆபிரகாமுக்கு அருளப்பட்ட நித்திய சுதந்தரம்’குறித்த வாக்குறுதியை தேவன் மீண்டுமாகப் புதுப்பித்தார். ஆதி 17:8; 48:4. வாக்குத்தத்த தேசம்குறித்த நம்பிக்கை, ஓர் இனிய நினைவாக, அந்த மரணத்தருவாயிலும் அவனுக்கு நம்பிக்கையளித்தது. எகிப்தில் பிறந்த யோசேப்பின் இரண்டு குமாரர்களிடமும் திரும்பி, அவர்களை ஆசீர்வதிக்கிறான்; ஆனால், தன் சந்ததிகுறித்து நிறைவேறவிருந்த வாக்குறுதியின் அடிப்படையில் ஆசீர்வதிக்கிறான்.

யாக்கோபு தன் மற்ற பேரப்பிள்ளைகளை ஆசீர்வதிக்காமல், யாக்கோபின் இரண்டு குமாரர்களையும் ஆசீர்வதிப்பதின் காரணம் என்ன? ஆதி 48.

தன் பேரப்பிள்ளைகளில் யோசேப்பின் இரண்டு குமாரர்களாகிய மனாசே, எப்பிராயீம் எனும் இருவரைமட்டுமே யாக்கோபு ஆசீர்வதித்தான். அதனால் பேரப்பிள்ளைகள் என்கிற ஸ்தானத்திலிருந்து குமாரர்கள் என்கிற ஸ்தானத்திற்கு அவர்களை உயர்த்தினான் ஆதி 48:5. மூத்தவனாகிய மனாசேயைவிட, இளையவனாகிய எப்பிராயீமை முக்கியப்படுத்தி யாக்கோபு ஆசீர்வதித்தாலும்கூட, யாக்கோபு கொடுத்த ஆசீர்வாதம் முக்கியமாக யோசேப்புக்கான ஆசீர்வாதமாகும். ஆதி 48:15.

கடந்தகாலத்தில் தேவன் தம் வாக்குறுதிகளுக்கு உண்மையாக இருந்தார்; வருங்காலத்திலும் தம் வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்பதற்கான தனிப்பட்ட சாட்சி அது. ஆபிரகாம் தேவன், ஈசாக்கின் தேவன் என்று தேவனை அழைத்தான்; அவரே அவர்களுக்கு உணவும் பாதுகாப்பும் அளித்தார். ஆதி 48:15. ‘எல்லாத் தீமைக்கும் நீங்கலாக்கி என்னை மீட்ட’ தேவன் என்றான். ஆதி 48:16. தான் யாருடன் போராடினானோ, தன் பெயரை யார் ‘இஸ்ரவேல்’ என்று மாற்றினாரோ, அந்தத் தேவனை, ‘பெத்தேலிலே தரிசனமான தேவனை’ மனதில் வைத்து, யாக்கோபு பேசினான். ஆதி 32:29; 32:26-29; 31:13.

தேவன் தீமையை நன்மையாக முடியப்பண்ணின அனுபவங்களை எல்லாம் குறிப்பிட்டு, யாக்கோபு நம்பிக்கையை வெளிப்படுத்துகிறான். அவர் தன் உயிரையும் யோசேப்பின் உயிரையும் பாதுகாத்ததுபோல தன் பேரப்பிள்ளைகளின் உயிரையும் பாதுகாப்பார் என்றும், எதிர்காலத்தின் தன் சந்ததியாரைகானான் தேசத்துக்குத் திரும்பச்செய்வார் என்றும் நம்பினான். சீகேம்பற்றி அவன்குறிப்பிட்டதில் அந்த நம்பிக்கை வெளிப்படுகிறது. ஆதி 48:22. அங்கு அவன் ஒரு சிறிய நிலத்தை வாங்கியிருந்தான். ஆதி 33:19. அங்கேதான் யோசேப்பின் எலும்புகளை அடக்கம் பண்ணினார்கள். யோசுவா 24:32. சீகேமில் வைத்துதான் இஸ்ரவேல் கோத்திரத்தாருக்கு தேசத்தைப் பங்கிட்டார்கள். யோசுவா 24:1. இந்திகழ்வுகள் அனைத்திற்கும் மத்தியிலும், தேவனுடைய வாக்குறுதிகளை யாக்கோபு மறக்கவில்லை. ஏனென்றால் அவனுடைய குடும்பத்தார்மூலம் ‘பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்’ என்று தேவன் சொல்லியிருந்தார். ஆதி 12:3.

ஆதி 12:3 இன் வாக்குறுதி எவ்வாறு நிறைவேறுவதாக ஆதி 3:25,26 இல் பேதுரு சுட்டிக்காட்டு கிறான்? நாமும்கூட அந்த ஆசீர்வாதத்தை எவ்வாறு பெற்றிருக்கிறோம்?

புதன்கிழமை

ஜூன் 22

யாக்கோபு தன் குமாரர்களை ஆசீர்வதிக்கிறான்

யாக்கோபு தன் குமாரர்களுக்குக் கொடுத்த ஆசீர்வாதங்களின் ஆவிக்குரிய முக்கியத்துவம் என்ன? ஆதி 49:1-28.

இஸ்ரவேல் கோத்திரத்தார்குறித்துச் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்களையும் தாண்டி, மேசியாவையும் அவர்மூலமான இரட்சிப்பின் நம்பிக்கையை யும் குறித்து யாக்கோபு பேசினான். ‘கடைசி நாட்களில்’ நேரிடப்போவதை அறிவிப்பதாக யாக்கோபு சொன்னான். அதில்தான் அந்த நம்பிக்கை வெளிப்படுகிறது. ஆதி 49:1. அது வரவிருந்த மேசியாவாகிய ராஜாவைச் சுட்டிக்காட்டுகிற வார்த்தைகள். ஏசா 2:2; தானி 10:14.

பிறகு ஒவ்வொரு குமாரனுடைய எதிர்காலத்தையும்பற்றிச் சொன்னான். அதற்காக அவர்களுடைய நிலை முன்னரே தீர்மானிக்கப்பட்டது. அவ்வாறு நேரிட தேவன் முன்னரே சித்தங்கொண்டிருந்தார் என்று அர்த்தமல்ல. மாறாக, அவர்களுடைய குணங்களாலும், அவர்களுடையபிள்ளைகளின் குணங்களாலும் அவ்வாறு நடக்கவிருந்தது. அப்பாவி ஒருவனை இன்னொருவன் கொல்லுவான் என்பதை தேவன் அறிவார் என்பது வேறு; அவ்வாறு தேவன்தாம் அவனைக் கொல்லவைத்தார் என்று நினைப்பது வேறு.

ஆதி 49:8-12இன் தீர்க்கதரிசனம் என்ன? அது ஏன் முக்கியமானது?

மனிதர் தங்கள் சுயாதீன சித்தத்தால் என்ன செய்வார்கள் என்பது மட்டுமல்ல, எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதும் தேவனுக்குத் தெரியும். யூதாவின் வம்சத்தில் மேசியா பிறப்பதற்கு தேவன் ஏற்பாடு செய்திருந்தார். யூதாவை யாக்கோபு பாலசிங்கத்திற்கு ஒப்பிட்டான். ஆதி 49:8-12. அது அரசகுலத்தையும் துதியையும் சுட் டிக்காட்டுகிறது. யூதாவின் வம்சத்தில் தாவீது ராஜா பிறக்கவிருந்தான்; அது மட்டுமல்ல ஷிலோவும் பிறக்கவிருந்தார். ஷிலோ என்றால் ‘ஷலோமை, அதாவது சமாதானத்தைக் கொண்டுவருகிறவர்’ என்று அர்த்தம். ஏசா 9:6, 7. அவருக்கு’ ஏராளமான ஜனங்கள் அடிபணிந்து சேவை செய் வார்கள்’. ஆதி 49:10. (எளிமை மொழியாக்கம்.)

இது மேசியாகுறித்த தீர்க்கதரிசனம் என்றும், வரவிருந்த மேசியாவைச் சுட் டிக்காட்டுகிறதென்றும் மக்கள் நம்பினார்கள்; கிறிஸ்தவர்களும் அது இயேசு வையே சுட்டிக்காட்டுவதாக நம்புகிறார்கள். ‘ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள்’ என்பது, ‘இயேசுவின் நாமத்தில் முழங்கால் யாவும் முடங்கும்’ என்கிற புதிய ஏற்பாட்டு வாக்குறுதிக்கு முன்னடையாளமாக இருக்கிறது. ஆதி 49:10; பிலி 2:10. எலன் ஒய்ட் பின்வருமாறு எழுதுகிறார்: ‘தாவீதும், தாவீதின் குமாரனாகிய’ ‘யூதா கோத்திரத்து’ மெய்யான சிங்கமாகிய ஷிலோவும் பிறந்த அந்தக் கோத்திரத்தைச் சுட்டிக்காட்ட காட்டுக்கு ராஜாவான சிங்கம், பொருத்தமான அடையாளமாக இருந்தது. அவரையே சகல வல்லமைகளும் பணிந்து, சகல தேசங்களும் ஆராதனை செய்யும்’.

சகல தேசத்தாரும் இயேசுவைப் பணிந்துகொள்வதற்குமுன்னரே, இப்போதே, நாம் ஏன் அவரைப் பணிந்துகொள்ள வேண்டும்?

வியாழக்கிழமை

ஜூன் 23

வாக்குத்தத்த தேசம்குறித்த நம்பிக்கை

ஆதியாகமப் புத்தகத்தின் முடிவுப்பகுதியில் நம்பிக்கைகுறித்த என்னென்ன கருத்துகள் உள்ளன? ஆதி 49:29-50:21.

நம்பிக்கையளிக்கும் மூன்று நிகழ்வுகள் நிறைந்துள்ளன.

முதலாவது, இஸ்ரேவேலர் வாக்குத்தத்த தேசத்திற்குத் திரும்புவார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது. வாக்குத்தத்த தேசத்தைப் பின்னணியாக வைத்தே யாக்கோபு – யோசேப்பின் மரணங்கள்பற்றி ஆதியாகமத்தை எழுதின மோசே சொல்கிறான். யாக்கோபு ‘இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தாரை’ ஆசீர்வதித்து, தீர்க்கதரிசனம் சொன்னதும், தான் மரிக்கப்போவதை அறிந்து, சாராளை அடக்கம்பண்ணின, கானானில் உள்ள மக்பேலா குகையில் தன்னை அடக்ம்பண்ண தன் குமாரர்களுக்குக் கட்டளையிடுகிறான். ஆதி 49:28, 29-31. கானானுக்குச் சென்ற அடக்க ஊர்வலமானது, பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு இஸ்ரவேலர் எகிப்திலிருந்து புறப்பட்டுச் செல்லவிருந்ததற்கு அடையாளமாக இருந்தது.

இரண்டாவது, தேவன் தீமையை நன்மையாக முடியப்பண்ணுவார் என்கிற நம்பிக்கை உள்ளது. யாக்கோபு மரித்து, அடக்கம்பண்ணப்பட்டபிறகு, யோசேப்பின் சகோதரர்கள் தங்கள் எதிர்காலம்குறித்துப் பயந்தார்கள். யோசேப்பு பழி வாங்குவானோ என்று அஞ்சினார்கள். அவர்கள் யோசேப்பிடம் வந்து, அவனுக்கு முன்பாக முகங்குப்புறவிழுந்து, அவனுக்கு அடிமைகளாகவும் ஆயத்தமாக இருந்தார்கள். ஆதி 50:18. அது, யோசேப்பு தீர்க்கதரிசனமாகக் கண்ட சொப்பனங்களை ஞாபகப்படுத்துகிறது. யோசேப்பு அவர்களுக்கு நம்பிக்கை யளித்து, ‘பயப்படாதிருங்கள்’ என்றான். ஆதி 50:19. அது எதிர்கால வாழ்க்கைக்கான ஒரு சொற்றொடர். ஆதி 15:1. ஏனென்றால், அவனுக்குச் செய்ய நினைத்த ‘தீமையை’ தேவன் ‘நன்மையாக முடியப்பண்ணினார்’. ஆதி 50:20. மேலும், இரட்சிப்புக்கேதுவான நிகழ்வுகளாக்கினார். ஆதி 50:19-21; ஒப்பிடவும் ஆதி 45:5, 7-9. மனிதர்களின் தோல்விகளுக்குமத்தியில் தேவவழிநடத்துதலே வெற்றிபெறும்.

மூன்றாவது, விழுந்துபோன மனுக்குலத்தை தேவன் இரட்சிப்பார் என்கிற நம்பிக்கை உள்ளது. ஆதியாகமத்தின் கடைசி வசனங்கள் யோசேப்பின் மரணம்பற்றிக் கூறுகின்றன; அதில் வேறுபல விஷயங்களும் சம்பந்தப்பட்டுள்ளன. யோசேப்பு தன் எலும்புகளைப் புதைக்கக் கட்டளையிடவில்லை. மாறாக, ‘தேவன் உங்களைச் சந்திக்கும்போது, என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டு போவீர்களாக’ என்று சொன்னான். ஆதி 50:25. அவன் சொன்னபடியே பல வருடங்களுக்கு பின் செய்தார்கள். யாத் 13:19. இறுதியாக, வாக்குத்தத்த தேசமாகிய கானான்குறித்த நம்பிக்கையானது, இறுதி இரட்சிப்பு, புதுப்பித்தல், புதிய எருசலேமின் புதிய வானம் – புதிய பூமி குறித்த நம்பிக்கைக்கு முன்னடையாளமாக இருக்கிறது. அந்த நம்பிக்கை நிறைவேறவே அனைவரும் காத்திருக் கிறோம்; அந்த நம்பிக்கை ஷிலோவின் மரணத்தால் சாத்தியமாகியுள்ளது.

நாம் பெற்றுள்ள மகத்தான நம்பிக்கைபற்றி வெளி 21:1-4 வசனங்கள் சொல்வது என்ன? அந்த வாக்குறுதி இல்லாமல், நம் பிரச்சனைகளுக்கு ஏதாவது தீர்வு உண்டா? மரித்து, ஒன்றுமில்லாமல்தானே போக வேண்டும்?

வெள்ளிக்கிழமை

ஜூன் 24

மேலும் படிக்க:

யோசேப்பின் வாழ்க்கை கிறிஸ்துவின் வாழ்க்கையை எடுத்துக்காட்டுகிறது. யோசேப்பின் சகோதரர்கள் அவனை அடிமையாக விற்பதற்கு பொறாமைதான் காரணம். தங்களை விட பெரியவனாவதைத் தடுக்க நினைத்தார்கள். அவனை எகிப்திற்குக் கொண்டுசென்றபோது, அவனுடைய கனவுகள் இனி நிறைவேறாது என்றும், அதற்கான சாத்தியங்களை அகற்றிவிட்டதாகவும் தங்களை ஏமாற்றிக்கொண்டார்கள். ஆனால் எது நடக்கக்கூடாதென செயல்பட்டார்களோ, அதில் தேவகரம் செயல்பட்டது. அதுபோலவே தங்களைவிட்டு மக்களுடைய கவனத்தை கிறிஸ்து தம்மிடம் திருப்பிவிடுவாரோ என்று யூத ஆசாரியர்களும் மூப்பர்களும் பயந்தார்கள். அவரை ராஜா ஆகவிடாமல் தடுப்பதற்காக மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தார்கள்; ஆனால் அந்தச் செயலே அவரை ராஜாவாக்கியது. யோசேப்பு, எகிப்தில் அடிமையாக இருந்ததன் மூலம், தன் தகப்பனுடைய குடும்பத்தைக் காப்பாற்றமுடிந்தது; இருந்தாலும்கூட, அவனுடைய சகோதரர்களின் குற்றவுணர்வை அது குறைத்துவிடவில்லை. அதுபோல கிறிஸ்துவின் எதிரிகள் அவரைச் சிலுவையில் அறைந்ததும்கூட, அவரை மனுக்குலத்தின் மீட்பராகவும், விழுந்துபோன மனிதர்களின் மீட்பராகவும், உலகம் முழுவதிற்கும் அரசராகவும் ஆக்கியது; ஆனாலும் அவரைக் கொலைசெய்தவர்கள் செய்த குற்றம் மிகவும் கொடியதுதான்; தேவனுடைய முன்னறிவின் கரம் தம் மகிமைக்காகவும் மனிதனுடைய நலனுக்காகவும் அது நிகழாதபடி தடுத்து நிறுத்தவில்லை’.

‘யோசேப்பின் சொந்த சகோதரர்களே அவனை அஞ்ஞானிகளிடம் விற்றதுபோல, கிறிஸ்துவின் சொந்த சீடர்களில் ஒருவனே அவரை அவருடைய கொடிய எதிரிகளிடம் விற்றான். யோசேப்பின் நற்குணத்தின்நிமித்தம் அவன்மேல் பொய்யாகக் குற்றஞ்சாட்டி, சிறையில் அடைத்தார்கள்; அதுபோல கிறிஸ்துவையும் அவருடைய நீதியின் நிமித்தமும், அவருடைய சுயமறுப்பான வாழ்க்கை தங்கள் பாவத்தைக் கடிந்துகொள்வதாக இருந்ததாலும் அவரைப் புறக்கணித்து, தள்ளினார்கள். அவர் ஒரு குற்றமும் செய்யாதபோதிலும், பொய்ச்சாட்சிகளின் அடிப்படையில் மரணத்திற்குள்ளாகத் தீர்த்தார்கள். அநீதிக்கும் ஒடுக்குதலுக்கும் மத்தியிலும் யோசேப்பு பொறுமையோடு இருந்ததும், சுபாவஅன்பற்ற தன் சகோதரர்களிடம் மன்னிக்கும் தன்மையோடும் மெய்யான தயாளத்தோடும் நடந்ததும், கிறிஸ்துவானவர் துன்மார்க்கரின் தீயவார்த்தைகளையும் கொடுமைகளையும் சகித்துக்கொண்டதையும், தன்னைக் கொலைசெய்தவர்களை மட்டுமல்ல, தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, மன்னிப்புவேண்டி தம்மிடம் வருகிற அனைவரையும் மன்னிப்பதையும் எடுத்துக்காட்டியது.’

கலந்துரையாடக் கேள்விகள்

  1. யாக்கோபு மரித்ததும், யோசேப்பு தங்களை பழிவாங்குவானோ என்று அவனது சகோதரர்கள் பயந்தார்கள். அவர்களிடம் தொடர்ந்து குற்றவுணர்வு காணப்பட்டது. அவர்களை யோசேப்பு மன்னித்ததை அவனது செயல் எவ்வாறு காட்டுகிறது?
  2. யோசேப்பின் வாழ்க்கைக்கும், இயேசுவின் வாழ்க்கைக்கும் உள்ள ஒற்றுமைகள் யாவை?
  3. நம் எதிர்காலம்பற்றி தேவனுக்க நன்றாகத் தெரிந்தாலும்கூட, நம் தெரிந்துகொள்ளும் உரிமையை அவர் கட்டுப்படுத்துவதில்லை என்கிற உண்மையைத் தியானியுங்கள். இந்த இரண்டு கருத்துகளைக் குறித்து குழம்பாமல், எவ்வாறு ஒரு சமநிலையைப் பேணலாம்?