பாடம் 10

மே 28 - ஜூன் 3

யாக்கோபு – இஸ்ரவேல்

ஓய்வுநாள் பிற்பகல்:

மே 28

இவ்வார ஆராய்ச்சிக்கு: ஆதி 32:22-31; ஓசியா 12:3, 4; எரே 30:5-7; ஆதி 33; 34:30-35:29.

மனன வசனம்: ‘அப்பொழுது அவர்: உன் பேர் இனி யாக்கோபு என்னப் படாமல் இஸ்ரவேல் என்னப்படும்; தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார்’. ஆதியாகமம் 32:28.

யாக்கோபின் குடும்பத்தில் நிகழ்ந்த நல்ல விஷயங்களும் கெட்ட விஷயங்களும் தொடர்ந்து சொல்லப்படுகின்றன. ஆனால் எல்லா நிகழ்வுகளுக்கு மத்தியிலும் தேவனுடைய கரம் செயல்படுவதையும், உடன்படிக்கை வாக்குறுதிகளுக்கு அவர் உண்மையுள்ளவராக இருந்ததையும் காணமுடிகிறது.

லாபானிடமிருந்து யாக்கோபு விடைபெற்று, சொந்தத் தேசத்துக்குத் திரும்புகிறான்; அப்போது யாக்கோபின் வஞ்சகத்தால் ஏமாந்த ஏசாவைச் சந்திக்க நேரிடுகிறது. வஞ்சிக்கப்பட்ட அந்தச் சகோதரன் என்ன செய்யப்போகிறான்?

நல்ல விஷயம் என்னவென்றால், அச்சுறுத்தலான அந்த நேரத்தில் யாக்கோபின் பிதாக்களுடைய தேவன் அவனுக்கு மீண்டும் தரிசனமானார்; அந்தச் சம்பவம்தான் பிற்பாடு ‘யாக்கோபின் இக்கட்டுக் காலம்’ என்று அழைக்கப்பட்டது. எரே 30:5-7. அன்று இரவில், தன் சகோதரனுடைய இடத்தை ஏமாற்றிப் பிடித்த யாக்கோபு ‘இஸ்ரவேலாக’ மாறினான். அது ஒரு புதிய தொடக்கத்திற்கான புதிய பெயர். அந்தப் பெயரில் ஒரு தேசமே உருவாக காரணமாக இருந்தது.

பலநிகழ்வுகளின் மத்தியிலும் கோத்திரப்பிதாக்கள், அவர்களுடைய குடும் பங்களின் சம்பவம் வேதாகமத்தில் சொல்லப்பட்டிருப்பதின் காரணம் என்ன? அதாவது, தேவனுடைய ஜனங்கள் அவருடைய வாக்குறுதிகள் நிறைவேறுவதைத் தடுப்பதுபோல நடந்துகொண்டபோதிலும், தாம் சொன்னதை நிறைவேற்ற தேவன் உண்மையுள்ளவராக இருந்தார் என்பதைக் காட்டுவதற்கே.

2021, ஜூன் 4 வகுப்புக்காகப் படிக்கவேண்டிய பாடம்

ஞாயிற்றுக்கிழமை

மே 29

தேவனோடு போராடுதல்

லாபானிடமிருந்து விடைபெற்றபிறகு, யாக்கோபு தேவனை மீண்டும் சந்திக்கிறான். தன் சகோதரனாகிய ஏசா ‘நானூறு பேரோடே’ வருவதாக யாக்கோபு கேள்விப்பட்டதும், தேவனிடம் ஊக்கமாக ஜெபித்தான். ஆதி 32:6. ‘அடியேனுக்கு தேவரீர் காண்பித்த எல்லாத் தயவுக்கும் எல்லாச் சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல’ என்று தன் நிலையை ஒத்துக்கொள்கிறான். ஆதி 32:10. யாக்கோபிடம் கிருபைகுறித்த தெளிவான புரிதல் இருந்தது. அதற்கு ஆண்டவர் சொன்ன பதில் என்ன?

இந்த அற்புதச் சம்பவத்தின் ஆவிக்குரிய முக்கியத்துவம் என்ன? ஆதி 32:22-31; ஓசியா 12:3,4.

தன் குடும்பத்தைக் காப்பாற்ற தன்னால் முடிந்த அனைத்தையும் யாக்கோபு செய்தான். ஆனாலும் பயம் நீங்கவில்லை. அதற்குகாரணம் இல்லாமல் இல்லை. அன்று பாளயத்தில் தங்கினான். அப்போது ஒரு ‘புருஷன்’ அவனோடே போராட ஆரம்பித்தார். ஆதி 32:24. இந்த வார்த்தை தேவனுடைய பிரசன்னத்தைச் சுட்டிக்காட்டும் அர்த்தமிக்க வார்த்தை. ஏசா 53:3. பரலோக ஆசாரியனாகிய மிகாவேலைச் சுட்டிக்காட்ட தானியேல் இந்த வார்த்தையைப் பயன்படுத்தினான். தானி 10:5.மேலும், யோசுவா இந்த வார்த்தையை ‘கர்த்தருடைய சேனையின் அதிபதியைச்’ சுட்டிக்காட்டப் பயன்படுத்தினான். யாவேயாகிய கர்த்தர்தாமே அந்தச் சேனாபதி. யோசுவா 5:13-15.

யாக்கோபு போராடினாலும்கூட, தான் தேவனோடு போராடுவதை அவன் புரிந்திருக்க வேண்டும். அதனால்தான்,’ நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன்’ என்று சொன்னான். ஆதி 32:26. தேவனை விடாமல்பற்றிக் கொண்டதும், அவரைவிட மறுத்ததும், அவன் பாவமன்னிப்பைப் பெற வாஞ்சையாக இருந்ததையும், தேவனோடு ஒப்புரவாக விரும்பியதையும் காட்டுகிறது.

‘ஏமாற்றி சேஷ்டபுத்திர பாகத்தைப் பெற்றதில் யாக்கோபு செய்த பாவம் என்னவென்பதை அவனுக்கு தெளிவாகச் சுட்டிக்காட்டினார். அவன் தேவனுடைய வாக்குறுதிகளை நம்பவில்லை; தேவன் தமக்கேற்ற நேரத்திலும் வழியிலும் நிறைவேற்றியிருக்கவேண்டியதை தன் சொந்த முயற்சிகளால் நிறை வேற்ற முயன்றான்.’1

அவன் பெயர் மாற்றம் அவன் மன்னிப்புப் பெற்றதைக் காட்டியது. அவனுடைய பாவத்தைச் சுட்டிக்காட்டிய பழைய பெயருக்குப் பதிலாக, வெற்றியைச் சுட்டிக்காட்டும் பெயரை வழங்கினார். ‘உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும்; தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே’ என்று தூதனானவர் சொன்னார். ஆதி 32:28.

1Ellen G. White, Patriarchs and Prophets, pp.197, 198.

தேவனோடு போராடுவதில் உங்களுடைய அனுபவம் என்ன? அது எப்படிப்பட்ட அனுபவமாக இருந்தது? சில சமயங்களில் அது போன்ற அனுபவம் ஏன் நமக்குத் தேவையாக இருக்கிறது?

திங்கட்கிழமை

மே 30

சகோதரர்கள் சந்திக்கிறார்கள்

பெனியேல் என்றால் ‘தேவனுடைய முகம்’ என்று அர்த்தம். தேவனை முகமுகமாய்க் கண்ட இடத்திலிருந்து, தன் சகோதரனைச் சந்திக்கும்படி யாக்கோபு புறப்பட் டான். ஆதி 32:30. இருவரும் 20 வருடங்களாகச் சந்திக்கவில்லை; இப்போது 400 பேருடன் ஏசா வந்ததை யாக்கோபு கேள்விப்பட்டான். ஆதி 33:1. யாக்கோபு பயந்துபோய், என்ன நடந்தாலும் அதைச் சந்திப்பதற்காக தன்னையும் தன் குடும்பத்தையும் ஆயத்தப்படுத்துகிறான்.

யாக்கோபு தேவனுடைய முகத்தைக் கண்ட அனுபவத்திற்கும் தன் சகோதரனுடைய முகத்தைக் கண்ட அனுபவத்திற்கும் இடையேயான தொடர்பு என்ன? ஆதி 33. தேவனோடு நாம் வைக்கிற உறவுக்கும், நம் ‘சகோதரர்களோடு’ நாம் வைக்கிற உறவுக்கும் தொடர்பிருப்பதை இதிலிருந்து எவ்வாறு அறியலாம்?

யாக்கோபு தன் சகோதரனை ஏழுமுறை தரைமட்டும் குனிந்து வணங்கினான். ஆதி 33:3. ‘என் ஆண்டவன்’ என்று அடிக்கடி அழைத்தான். ஆதி 33:8, 13, 15. தன்னை ‘அடியான்’ என்றான்’. ஆதி 33:5; ஒப்பிடவும் 32:5,18,20. யாக்கோபு ஏழு முறை குனிந்து பணிந்தது அவனது தகப்பனுடைய ஏழு ஆசீர்வாதங்களைச் சுட்டிக்காட்டுகிறது. ஆதி 27:27-29. மேலும், அவன் குனிந்து, வணங்கியபோது, ‘ஜாதிகள் உன்னை வணங்கவும்கடவர்கள்’ என்று தகப்பன் கொடுத்த ஆசீர்வாதத்திற்கு நேர் எதிராக நடக்கிறான். ஆதி 27:29.

தன் சகோதரனுக்குச் செலுத்தவேண்டிய கடனைச் செலுத்தி, அவனிடமிந்து களவாடிய ஆசீர்வாதத்தைத் திரும்பக் கொடுப்பதுபோல யாக்கோபு நடந்தான். பார்க்கவும் ஆதி 33:11. ஏசா தன் சகோதரனிடம் நடந்துகொண்டது எதிர்பாராத ஒன்று. அவன் யாக்கோபிடம் ஓடிச்சென்று, யாக்கோபைக் கொல்லுவதற்குப் பதிலாக அவனை ‘முத்தஞ்செய்தான்; இருவரும் அழுதார்கள்’. ஆதி 33:4.

அதன்பிறகுதான் ஏசாவிடம் யாக்கோபு, ‘உம்முடைய முகத்தைக் கண்டது தேவனுடைய முகத்தைக் கண்டதுபோல இருக்கிறது’ என்று சொன்னான். ஆதி 33:10. ஏசா தன்னை மன்னித்துவிட்டதை யாக்கோபு புரிந்துகொண்டதால் அந்த வார்த்தைகளைச் சொன்னான்.’ தயவு கிடைத்தல்’ என்பதற்கான எபிரெய வார்த்தை ரட்ஷா. ஆதி 33:10. அது தேவனுக்கு ஏற்ற’, பிரியமானபலியைச் சுட்டிக்காட்டுகிற ஓர் இறையியல் வார்த்தை; அதாவது தேவனுடைய மன்னிப்பைச் சுட்டிக் காட்டு கிற வார்த்தை. லேவி 22:27; ஆமோஸ் 5:22.

யாக்கோபு பெனியேலில் தேவனிடம் மன்னிப்பு பெற்றான்; அதே அனுபவத்தை இப்போது தன் சகோதரனிடத்திலும் பெறுகிறான்; அதனால்தான் தேவனுடைய முகத்தைக் கண்டதுபோல இருப்பதாகச் சொன்னான். யாக்கோபு இரண்டாவதாக ஒரு பெனியேலில் நின்றிருந்தான்; முதல் பெனியேல் இரண்டாவது பெனியேலுக்கு வழியுண்டாக்கியது. யாக்கோபு தேவனிடமும் தன் சகோதரனிடமும் மன்னிப்பு பெற்றான். அவன் உண்மையிலேயே கிருபையின் பொருளை முன்பைவிட இப்போது அதிகமாக அறிந்திருக்க வேண்டும்.

தேவனைத்தவிர பிறர் உங்களை மன்னித்ததிலிருந்து கிருபைபற்றி என்ன அறிந்து கொண்டீர்கள்?

செவ்வாய்க்கிழமை

மே 31

தீனாள்மேல் பலாத்காரம்

யாக்கோபு தன் சகோதரனுடன் ஒப்புரவாகியதால், கானான் தேசத்தில் சமாதானமாகக் குடியேற விரும்பினான். ‘சாலேம்’ எனும் பட்டணத்திற்கு அருகே தங்கினான். ஆதி 33:18. அது ஷலோம் எனும் வார்த்தையிலிருந்து வந்தது. சாலேம் என்றால் ‘பாதுகாப்பு’; ஷலோம் என்றால் ‘சமாதானம்’. யாக்கோபு முதன் முதலாக ஓர் இடத்தில் சமாதானமாகத் தங்கினான்.

அப்பகுதியின் குடிகளிடமிருந்து ஒரு சிறிய நிலத்தை வாங்கினான். ஆதி 33:19. அங்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான். தேவனையே விசுவாசித்து, அவரையே சார்ந்திருந்ததை அது காட்டியது. பலிபீடத்தில் செலுத்தும் ஒவ்வொரு பலியும் ஓர் ஆராதனைச் செயலாக இருந்தது.

ஆனாலும் யாக்கோபாகிய இஸ்ரவேல் தனது வாழ்நாளில் முதன்முறையாக தேசத்தில் குடியேறுவதில் சிக்கல்களைச் சந்திக்கிறான். ஈசாக்கிற்கு கேராரில் அபிமலேக்கால் பிரச்சனை உண்டானதுபோல, யாக்கோபுக்கு கானானியர்கள் மூலம் சில சிக்கல்கள் எழும்பின. ஆதி 26:1-33.

சமாதானமாகக் குடியேற விரும்பிய யாக்கோபின் திட்டம் எவ்வாறு தகர்ந்தது? ஆதி 34.

இந்த மோசமான சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நபர்களையும் அவர்களது செயல்களையும் எப்படி புரிந்துகொள்வதென்றே தெரியவில்லை. உணர்ச்சித்தூண்டலில் இருந்த சீகேம் என்பவன் தீனாளிடம் அத்துமீறினான்; அதேசமயம் தீனாளை உண்மையாகவே நேசித்தான். அதனால் பிரச்சனையைத் தீர்க்க முயன்றான். விருத்தசேதனம் எனும் உடன்படிக்கைச் சடங்கைச் செய்யவும் ஆயத்தமாக இருந்தான்.

ஆனால் தேவனுக்கும் அவர் கற்பனைகளுக்கும் உண்மையாக இருப்பவர்கள் என்றும், கானானியருடன் திருமணசம்பந்தம் செய்வதில்லை என்றும் சொல்லிக்கொண்ட சிமியோனும் லேவியும் பொய் சொன்னார்கள்; வஞ்சித்தார்கள்; கொல்லவும் கொள்ளையிடவும் தயங்கவில்லை. லேவி 19:29; ஆதி 34:13; ஆதி 34:25-27. அவர்களது செயல் கண்டித்தக்கதுமட்டுமல்ல; அதனால் பல பிரச்சனைகளும் வரயிருந்தன. தவறுசெய்தவனைமட்டும் தண்டித்திருந்தால் கூட பரவாயில்லை.

ஆனால் யாக்கோபோ சமாதானம்பற்றி மட்டுமே யோசித்தான். தன் மகளை ஒருவன் பலாத்காரம் செய்த செய்தியை அறிந்தபிறகும் அவன் ஒன்றும் சொல்ல வில்லை. ஆதி 34:5. ஆனால் தன் குமாரர்கள் செய்ததை அறிந்தபோது, அதனால் உண்டாகப்போகிற விளைவுகளுக்காக அவர்களைக் கடிந்துகொண்டான்: ‘இந்தத் தேசத்தில் குடியிருக்கிற கானானியரிடத்திலும் பெரிசியரிடத்திலும் என் வாசனையை நீங்கள் கெடுத்ததினாலே என்னைக் கலங்கப்பண்ணினீர்கள்; நான் கொஞ்ச ஜனமுள்ளவன்; அவர்கள் எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி, நானும் என் குடும்பமும் அழியும்படி என்னை வெட்டிப்போடுவார்களே’. ஆதி 34:30.

ஏமாற்றம், வஞ்சகம், இரக்கம், கிருபை ஆகியவற்றை இந்தச் சம்பவங்களில் மாறிமாறிப் பார்க்க முடிகிறது. இதிலிருந்து மனித தன்மைபற்றித் தெரிவது என்ன?

புதன்கிழமை

ஜூன் 1

பெருகியிருந்த சிலைவழிபாடு

ஆதியாகமம் 34:30-35:15 இன் சம்பவத்தில் உள்ள பாடங்கள் என்ன?

கானானியர்களோடு தன் சமாதானத்தைக் கெடுத்துவிட்டதாக யாக்கோபு தன் குமாரர்களைக் குற்றஞ்சாட்டி, அவர்களைக் கடிந்துகொண்டான். ஆதி 34:30. அதன்பிறகு அங்கிருந்து கிளம்பி, மீண்டும் பெத்தேலுக்குச் செல்லும்படி யும், அங்கு தம் உடன்படிக்கையைப் புதுப்பிக்க விரும்புவதாகவும் தேவன் சொன்னார். பெத்தேலுக்குச் சென்றதும், ஒரு பலிபீடத்தைக் கட்டும்படியும் தேவன் கூறினார்.

தேவன் கட்டளையிட்டதும் யாக்கோபு உடனடியாக தன் மக்களிடம் கானானியக் கடவுள்களை தங்கள் நடுவிலிருந்து விலக்கச் சொன்னான். ஏனென்றால் கானானியரிடம் கொள்ளையிட்ட சுரூபங்களையும், ராகேல் தன் வீட்டிலிருந்து திருடி வந்த சுரூபங்களையும் தங்களிடம் வைத்திருந்தார்கள். ஆதி 31:19,32. தேவனோடு உடன்படிக்கை பண்ணுவதற்கு இதைச் செய்வது அவசியமாக இருந்தது.

தேவன்மேல் யாக்கோபு பற்றுதலாக இருந்தபோதிலும், மற்றவர்கள் அந்தச் சுரூபங்களை தங்களோடு வைத்து, வழிபட்டு வந்திருக்க வாய்ப்புள்ளது. சீகேமிலிருந்து வெளியேறுவதால் மட்டும் கானானிய செல்வாக்கை யாக்கோபு முற்றிலும் விலக்க முடியாது. பாளயத்திலும் மக்களின் மனதிலும் இடம்பிடித்திருந்த சுரூபங்களை யாக்கோபு அப்புறப்படுத்த வேண்டியிருந்தது.

ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு, அல்லது ஒரு சபையிலிருந்து இன்னொரு சபைக்கு மாறுவதால் மட்டும் மனமாற்றம் நிகழ்ந்துவிடாது. மாறாக, நாம் எந்த இடத்தில் வாழ்ந்தாலும் நம் இருதயங்களிலிருந்து விக்கிரகங்களை அகற்றுவதற்கு தேவகிருபையால் முயல வேண்டும். ஏனென்றால், எந்த விஷயத்தையும் விக்கிரகமாக்கி விட வாய்ப்புள்ளது.

யாக்கோபு தேவனுக்குக் கீழ்ப்படிந்து, தேவகட்டளைப்படி நடந்தபோது, தேவன் தலையிடுகிறார்; அவர்களைச் சுற்றிலுமிருந்த மக்கள் மத்தியில் ‘தேவனாலே பயங்கரம் உண்டானதினால்’ அவர்கள் யாக்கோபைத் தாக்குவதற்குத் துணியவில்லை. ஆதி 35:5. யாக்கோபும் ‘அவனோடேகூட இருந்த எல்லா ஜனங்களும்’ தேவனைத் தொழுதுகொள்ள ஆயத்தமானார்கள். ஆதி 35:6. குடும்பத்தில் மீண்டும் ஒற்றுமை உண்டானது. அந்த இடத்திற்கு யாக்கோபு ஏல்பெத்தேல் என்று பெயரிட்டான். ஏணிகுறித்த தரிசனத்தை அவன் நினைவுகூர்ந்திருக்கலாம். அந்த ஏணியானது வானம் – பூமிக்கு இடையேயான தொடர்புக்கு அடையாளம்; சிலகாலம் முறிந்திருந்த அந்தத் தொடர்பு இப்போது மீண்டும் சரியானது.

இந்தமுறை அந்த இடம் அல்ல, அங்கு தேவன் தரிசனமானதுதான் முக்கியமானது. தேவன் பிரசன்னமாகி யாக்கோபிடம் அவன் பெயர் ‘இஸ்ரவேல்’ என்று ஞாபகப்படுத்துகிறார். ஆதி 35:10. மேலும், இரண்டு ஆசீர்வாதங்களைக் கொடுக்கிறார். பல ஜாதிகளுக்கு தகப்பன் ஆவான் என்பதும், அவன் சந்ததியில் மேசியா பிறப்பார் என்பதும் முதல் ஆசீர்வாதம். ஆதி 35:11. வாக்குத்தத்தத் தேசத்தைச் சுதந்தரிப்பான் என்பது இரண்டாவது ஆசீர்வாதம். ஆதி 35:12.

நயவஞ்சகமான என்னென்ன வழிகளில் விக்கிரகாராதனை நம் இருதயங்களில் நுழைய வாய்ப்பிருக்கிறது? அவ்வாறு நுழையவிடாமல் அதைத் தடுப்பதற்கு என்ன செய்யலாம்?

வியாழக்கிழமை

ஜூன் 2

ராகேலின் மரணம்

சிக்கல்நிறைந்த தன் குடும்பத்தில் யாக்கோபு சந்தித்த வேறுசில வேதனையான அனுபவங்கள் என்ன? ஆதி 35:15-29.

யாக்கோபு பெத்தேலைவிட்டுக் கிளம்பினபிறகு, வாக்குத்தத்த தேசத்தைச் சென்று சேருவதற்குள் மூன்று குறிப்பிட்ட சம்பவங்கள் நிகழ்ந்தன.

  • யாக்கோபுக்கு கடைசி மகனாகிய பென்யமீன் பிறந்தான்.
  • ராகேல் மரித்தாள்.
  • யாக்கோபின் மறுமனையாட்டியுடன் ரூபன் தவறுசெய்தான்.

அந்த வாலிபன் ஏன் அவ்வளவு பெரியதீங்கைச் செய்தானென வேதாகமம் சொல்லவில்லை. யாக்கோபின் கடைசி மகனுடைய பிறப்பின்போது பெத்லகேம்பற்றி ஆதி 35:19 சொல்கிறது. அது வாக்குத்தத்தத் தேசத்திற்கு உட்பட்ட பகுதி. எனவே இஸ்ரவேலின் எதிர்காலம்குறித்த தேவ வாக்குறுதியின் முதல் நிறைவேறுதலாக அந்தப் பிறப்பு இருந்தது. ஆபிரகாமுக்கு தேவன் நிச்சயம ளித்ததுபோல, ராகேலுக்கு அவளுடைய தாதி, ‘பயப்படாதே’ என்று நிச்சயம ளித்தாள்.ஆதி 35:17; ஒப்பிடவும். ஆதி 15:1.

மரணத்தருவாயில் இருந்த ராகேல் தன் மகனுக்கு பென் – ஆனி என்று பெயரிட்டாள்; அதற்கு ‘என் துக்கத்தின் குமாரன்’ என்று பொருள். அதை யாக்கோபு ‘பென்யமீன்’ என்று மாற்றினான். அதற்கு ‘வலது கரத்தின் குமாரன்’ என்று அர்த்தம். வாக்குத்தத்த தேசம் தென்புறத்தில் இருந்ததாலும், அங்குக் குடியேறினபிறகு தேவன் தம் மக்களுக்குச் செய்வதாகச் சொன்னதை எல்லாம் செய்வார் என்று நம்பியதாலும் அவ்வாறு பெயரிட்டிருக்கலாம்.

அந்தச் சமயத்தில்தான், தன் தப்பனின் மறுமனையாட்டியும், ராகேலின் பணி விடைக்காரியுமான பில்காளுடன் ரூபன் பாலுறவு கொண்டான். ஆதி 35:25; 30:3. அந்த மோசத்தை அவன் ஏன் செய்தானெனத் தெரியவில்லை; மனிதத்தன்மை அவ்வளவுக்கு சீர்கேடுள்ளது என்பது தவிர வேறு காரணம் சொல்வதற்கில்லை.

அந்த கொடூரமான அத்துமீறல்பற்றி யாக்கோபு கேள்விப்பட்டும், ஒன்றும் செய்யவில்லை. ஆதி 35:22. தன்னைச் சுற்றிலும் நிகழ்ந்த பாவத்திற்கும் தீமைக்கும் தேவனே பதில்செய்வார் என்று நம்புகிற நிலைக்கு யாக்கோபு வந்திருக்கலாம்.

இஸ்ரவேலின் மூதாதையர்களான யாக்கோபின் 12 குமாரர்கள்மூலம் தேவன் கற்றுக்கொடுக்கிற விசுவாசப் பாடம் இதுதான். ஆதி 35:22-26. அதாவது அவர்கள் மிகவும் நல்லவர்களாக, அன்புள்ளவர்களாக இருக்கவில்லை. ஆனாலும் எல்லாப் பிரச்சனைகளுக்கும், குறைபாடுகளுக்கும், பில்காளுடன் ரூபன் செய்த பாவம் போன்ற கொடிய தீமைக்கும்மத்தியிலும், தேவன் சிக்கல்கள் நிறைந்த அந்தக் குடும்பத்தின்மூலம் தம் திட்டத்தை நிறைவேற்ற இருந்தார்.

மனிதர்களுடைய தவறுகளுக்குமத்தியிலும் தேவனுடைய இறுதி நோக்கம் நிறைவேறும். மக்கள் ஒத்துழைத்திருந்தால், கீழ்ப்படிந்திருந்தால் என்னவாகியிருக்குமென நினைத்துப் பாருங்கள். யாருக்கும் வேதனையும் மனஅழுத்தமும் தாமதமும் நேரிடாமல் எவ்வளவு எளிதாக தேவன் தம் சித்தத்தை நிறைவேற்றியிருக்க முடியும்?

வெள்ளிக்கிழமை

ஜூன் 3

மேலும் படிக்க:

‘யாக்கோபு அன்று இரவில் அனுபவித்த போராட்டமும் வியாகுலமும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்குமுன்னர் தேவ மக்கள் கடந்துசெல்லவேண்டிய பாடுகளைக் காட்டுகிறது. தீயவல்லமைகளுடனான இறுதிப்போராட்டத்தில் தேவமக்களுக்கு இத்தகைய அனுபவமே காத்திருக்கிறது. அவர்கள் விசுவாசத்தையும், விடாமுயற்சியையும், அவர்களை விடுவிப்பதற்கான தம் வல்லமையில் அவர்களுக்குள்ள நம்பிக்கையையும் தேவன் சோதிப்பார். இனி என்ன செய்தாலும் பயனில்லை என்றும், மன்னிப்பைப் பெறமுடியாத அளவுக்கு அவர்களுடைய பாவங்கள் பெரியது என்றும் எண்ணத்தைக் கொடுத்து அவர்களைத் திகிலடையச் செய்ய சாத்தான் பெரிதும் முயலுவான். அவர்கள் தங்கள் குறைகளை அதிகமாக உணருவார்கள்; அவர்கள் தங்கள் வாழ்க்கையை மீள்பார்வையிடும்போது, அவர்கள் நம்பிக்கை மங்கிப் போகும். ஆனால், தேவகிருபையின் மகத்துவத்தை உணர்ந்து, உதவியற்ற நிலையில், மெய் மனதுடன் மனந்திரும்புகிற பாவிகளுக்கு கிறிஸ்து மூலம் கிடைக்கிற வாக்குறுதிகளைக் கேட்டு கெஞ்சுவார்கள். தங்கள் ஜெபங்களுக்கு உடனடியாகப் பதில் கிடைக்காவிட்டாலும், விசுவாசத்தை விடமாட்டார்கள்.தூதனானவரையாக்கோபு இறுகப் பற்றிக்கொண்டதுபோல, தேவனுடைய பெலத்தை இறுகப்பற்றிக்கொள்வார்கள்; ‘நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன்’ என்று சொல்லுவார்கள்.’

‘பாவத்திற்குள் நயவஞ்சகமாக இழுக்கப்பட்டாலும், மெய்யான மனந்திரும்புதலுடன் தம்மிடம் திரும்புகிறவர்களை தேவன் புறம்பே தள்ளமாட்டார் என்பதை யாக்கோபின் வரலாறு உறுதியாகக் காட்டுகிறது. யாக்கோபு தன் சொந்தப் பெலத்தால் போராடி பெறமுடியாததை, தன்னையே அர்ப்பணித்து, முழுவிசுவாசத்தை வெளிப்படுத்திப் பெற்றான். அவன் மிகவும் வாஞ்சித்த ஆசீர்வாதமானது தேவவல்லமையாலும் கிருபையாலும்மட்டுமே கிடைக்கும் என்பதை தேவன் தம் தாசனுக்குக் கற்றுக்கொடுத்தார். கடைசி நாட்களில் வாழ்கிறவர்களின் நிலையும் இதுதான். அவர்களை ஆபத்துகள் சூழும்போது, ஆத்துமாவை மனமடிவு பற்றிப் படிக்கும்போது, பாவநிவாரணத்தின் புண்ணியங்களைமட்டுமே அவர்கள் சார்ந்திருக்க வேண்டும். நம் பெலத்தால் நாம் ஒன்றுமே செய்ய முடியாது’.

கலந்துரையாடக் கேள்விகள்

  1. தேவகிருபை வெளிப்பட யாக்கோபின் பெலவீனம் எவ்வாறு நல்ல தருணத்தைக் கொடுத்தது? நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்’ எனும் பவுலின் வார்த்தைகள் எவ்வாறு யாக்கோபின் வாழ்க்கையில் வெளிப்பட்டது? கொரி 12:10.
  2. வேதாகம் கதாபாத்திரங்கள் அநேகரைப் பற்றி மோசமான தகவல்களை வேதாகமம் வெளிப்படுத்துவது ஏன்? அதன்மூலம் வேதாகமம் வலியுறுத்த விரும்புவது என்ன? அதிலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக்கொள்ளலாம்?
  3. விக்கிரகாராதனைபற்றித் தியானியுங்கள். நம் கலாச்சாரத்திலும், நம் நாகரிகத்திலும் நமக்கு விக்கிரகங்களாக இருப்பவை என்ன? ஆண்டவரைத்தவிர வேறு யாரையும், வேறு எதையும் நாம் தொழுதுகொள்ளாமல் இருப்பதற்கு என்ன செய்யலாம்?