பாடம் 9
பெப்ரவரி 19-25
இயேசுவே பூரண பலி

ஓய்வுநாள் மாலை:
இவ்வார ஆராய்ச்சிக்கு: எபி 9:15; ஆதி 15:6-21; எரே 34:8-22; எபே 3:14-19; எபி 7:27; 10:10; 9:22-28.
மனன வசனம்: பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார். எபி 10:14.
குற்றவாளியெனத் தீர்த்து, சிலுவையில் அறையப்பட்ட ஒருவரைதேவனாக வணங்குவதை அக்காலத்தினர் நினைத்துக்கூட பார்த்திருக்க வாய்ப்பில்லை. ரோம இலக்கியத்தில் சிலுவையைப் பற்றிய சில குறிப்புகளின்படி, அத்தகைய நபரை அவர்கள் வெறுத்தார்கள். யூதர்களை பொருத்தவரை, சிலுவையில் தூக்கப்பட்டவன் தேவனால் சபிக்கப்பட்டவன் என்று நியாயப்பிரமாணம் சொன்னது. உபா 21:23.
கிறிஸ்தவர்களின் குகைக் கல்லறைகளில் பெரும்பாலும் மயில், புறா தடகள வீரனின் வெற்றி ஓலை, மீன் ஆகிய உருவங்களைப் பொறித்தார்கள். அழியா வாழ்க்கையைச் சுட்டிக்காட்ட மயிலைப் பொறித்திருக்கலாம். சில காலத்திற்குப் பிறகு நோவாவின் பேழை, ஈசாக்குக்குப் பதிலாக ஆபிரகாம் ஆட்டுக்கடாவைப் பலியிடுதல், சிங்கக்கெபியில் தானியேல், யோனாவை மீன் கக்குதல், மேய்ப்பன் ஆட்டுக்குட்டியைச் சுமந்துசெல்தல் போன்ற கருத்துகளைச் சுட்டிக்காட்டும் ஓவியங்களையும், திமிர்வாதக்காரனைக் குணமாக்கினது, லாசருவை உயிருடன் எழுப்பினது போன்ற அற்புதங்களைச் சுட்டிக்காட்டும் ஓவியங்களையும் பொறித்தார்கள். இவற்றை இரட்சிப்புக்கும் வெற்றிக்கும் அக்கறைக்கும் அடையாளங்களாகக் கருதினார்கள். ஆனால் சிலுவையை அவமானத்தின் சின்னமாகக் கருதினார்கள்.
ஆம், சிலுவைதான் கிறிஸ்தவமார்க்கத்தின் அடையாளமாக மாறியது. ஆமாம், நற்செய்தியை பவுல், ‘சிலுவையைப் பற்றிய உபதேசம்’ என்று சொன்னான், 1கொரி 1:18.
சிலுவைபற்றி எபிரெயர் நிருபம் சொல்வதை இந்த வாரம் ஆராய்வோம்.
2021, பெப்ரவரி 26 வகுப்புக்காகப் படிக்கவேண்டிய பாடம்
ஞாயிற்றுக்கிழமை
பெப்ரவரி 20
பலிகள் ஏன் அவசியமாக இருந்தன?
தேவபிள்ளைகள் ‘வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக’ ‘முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்வதற்காக இயேசு பலியானதாக எபிரெயர் 9:15 விளக்குகிறது.
பண்டைய கிழக்கத்திய நாடுகளில், இரு நபர்கள் அல்லது இரு தேசங்கள் கடும் நிபந்தனைகளுடன் உடன்படிக்கை செய்வார்கள். ஒருவருக் கொருவர் ஆணையிட்டு, வாக்குறுதிகளைக் கொடுப்பார்கள். அதாவது ஆணையை மீறுகிறவரைகடவுள் தண்டிப் பார் என்று அர்த்தம். பெரும்பாலும் மிருகபலியிட்டு உடன்படிக்கைகளை உறுதிசெய்தார்கள்.
உதாரணமாக, ஆபிரகாமுடன் தேவன் உடன்படிக்கை செய்தபோது, மிருகங்களை நடுவாகத் துண்டித்து வைக்கச்சொன்னார். ஆதி 15:6-21. உடன்படிக்கையை மீறுகிறவர் அதுபோலத் துண்டிக்கப்படுவார் என்பதற்கு அடையாளமாக இருசாராரும் அந்தத்துண்டங்களுக்கு நடுவே நடந்து செல்ல வேண்டும். ஆனால் தேவன் மட்டுமே அந்தத் துண்டங்களுக்கு நடுவே கடந்துசென்றார் ; தம்முடைய வாக்குறுதியை தாம் மீறப்போவதில்லை என்பதை அதன்மூலம் காட்டினார்.
ஆதி 15:6-21 ; எரே 34:8-22 ஆகிய வசனங்களை ஒப்பிடுங்கள். உடன்படிக்கை பற்றி இந்த வசனங்கள் போதிப்பது என்ன?
தேவனுக்கும் இஸ்ரவேலுக்கும் இடையேயான உடன்படிக்கையில், வாக்குத்தத்த தேசத்தைச் சுதந்தரிப்பது குறித்த வாக்குறுதியைக் கொடுத்திருந்தார். பத்துக் கற்பனைகளுக்குக் கீழ்ப்படியவும், பலி பீடத்தில் இரத்தம் தெளிக்கவும் கட்டளை யிட்டிருந்தார். உடன்படிக்கையை மீறுகிறவருக்கு என்ன நேரும் என்பதை இரத்தம் தெளித்தல் சடங்கு சுட்டிக்காட்டியது. அதனால்தான் எபிரெயர், ‘இரத்தஞ் சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது’ என்று சொல்லுகிறது. எபி 9:22.
இஸ்ரவேலர் உடன்படிக்கையை மீறினபோது, தேவனுக்கு தர்மசங்கடமான நிலை உண்டானது. உடன்படிக்கை நிபந்தனைபடி, அதை மீறினவர் சாக வேண்டும் ; ஆனால் தேவன் தம் மக்களை நேசித்தார். அதற்கு மாற்று வழியைத் தேடியிருந்தால், அதாவது, மீறினவர்களைத் தண்டிக்காமல் விட்டிருந்தால், அவரது கட்டளைகளின்படி நடக்குமாறு எவரிடமும் சொல்லக்கூட முடியாது: இந்த உலகம் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும்.
ஆனால் தேவகுமாரன் நமக்குப் பதிலாக அவரே மரித்தார். ‘வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக’ நமக்குப்பதிலாக மரித்தார். எபி 9:15,26 ; ரோமர் 3:21-26. பிரமாணத்தின் புனிதத்தையும் பாதுகாக்க வேண்டும் ; அதேசமயம், பிரமாணத்தை மீறினவர்களையும் மீட்க வேண்டும் ; அதுவே தேவநோக்கம். சிலுவைதான் அதற்கான ஒரே வழியாக இருந்தது.
நற்செய்தியின் மையமாக சிலுவை இருப்பதற்கான காரணம்பற்றி என்ன புரிகிறது ?
திங்கட்கிழமை
பெப்ரவரி 21
பல்வேறு வகை பலிகள்
இயேசுவின் மரணத்தால் நாம் பாவமன்னிப்பைப் பெறுவதற்கு வழி பிறந்தது.உடன்படிக்கையை மீறினதால் உண்டான தண்டனை ரத்தானதால் மட்டும் பாவமன்னிப்பு கிடைக்கவில்லை. வேறு முக்கிய விஷயங்களும் உள்ளன அதனால் தான் இஸ்ரவேலின் பலிமுறையில் ஐந்து வெவ்வேறு பலிகள் இடம் பெற்றிருந்தன. ஒவ்வொன்றும் கிறிஸ்துவின் சிலுவைகுறித்த ஆழமான புரிதலுக்கு அவசியமாக இருந்தன.
சர்வாங்க தகனபலி என்பது, பலியான மிருகத்தின் அனைத்து பகுதிகளை யும் பலிபீடத்தின்மேல் தகனிப்பதாகும். லேவி 1. அந்தப் பலி நமக்காக தம் ஜீவனைப் பலிகொடுத்த இயேசுவைச் சுட்டிக்காட்டியது. நம் பாவத்திற்குப் பரிகாரமாக இயேசு தம்மை முற்றிலும் அர்ப்பணிக்க வேண்டியதிருந்தது. அவர் தேவனுக்கு சமமானவராக இருந்தும், ‘தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்தார்’. பிலி 2:5-8.
போஜனபலி என்பது, தேவன் தம் மக்களைப் போஷித்து, நடத்தினதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் செலுத்தின பலியாகும். லேவி 2. அந்தப் பலியும்’ ஜீவ அப்பமாகிய ‘இயேசுவையே சுட்டிக்காட்டியது. யோவான் 6:35,48. அவர் மூலமாக நித்திய ஜீவனைப் பெற்றிருக்கிறோம்.
சமாதான பலி என்பது, தேவன் அருளிய நன்மைகளைக் கொண்டாட, நண்பர் களோடும் குடும்பத்தினரோடும் சேர்ந்து உண்ணும் ஐக்கிய விருந்தாகும். லேவி 3.அந்தப் பலியும், நமக்குச் சமாதானத்தை அருளியுள்ள கிறிஸ்துவைச் சுட்டிக்காட்டியது. ஏசா 53:5 ; ரோமர் 5:1 ; எபே 2:14. இயேசுவின் மாம்சத்தைப் புசித்தும், அவரது இரத்தத்தைப் பானம்பண்ணியும் அவருடைய தியாகத்தில் பங்குபெறுவதை அது வலியுறுத்துகிறது. யோவான் 6:51-56.
பாவநிவாரண பலி என்பது, பாவநிவிர்த்திக்காகச் செலுத்தின பலியாகும். லேவி 4:1-5:13. பாவமன்னிப்பு உண்டாகும்படி ஜீவனுக்கு அடையாளமான இரத்தம் சிந்தப்படவேண்டியதை இந்தப் பலி காட்டியது. லேவி 17:11. அது நம் பாவங்களிலிருந்து நம்மை மீட்கிற இயேசுவின் இரத்தத்தைச் சுட்டிக்காட்டியது, மத் 26:28 ; ரோமர் 3:25 ; எபி 9:14.
குற்றநிவாரண பலி என்பது, சரிசெய்யவோ இழப்பீடு வழங்கவோ வாய்ப் பிருந்த குற்றங்களுக்காகச் செலுத்தின பலியாகும். லேவி 5:14-6:7. தேவன் நம்மை மன்னித்தாலும்கூட, நாம் தவறு இழைத்தவர்களுக்கு அதைச் சரிசெய்யவோ இழப்பீடுவழங்கவோ வாய்ப்பிருந்தால், அதைச் செய்ய கடமைப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
விசுவாசிகளுக்காக பவுல் ஏறெடுக்கிற ஜெபம் என்ன ? எபே 3:14-19.
இரட்சிப்பின் அனுபவமானது இயேசுவை நம் பதிலாளியாக ஏற்றுக்கொள் வதைவிட அதிகமான ஒன்று என்பதையே ஆசரிப்புக்கூடார பலிமுறைகள் போதிக் கின்றன. நாம் அவரில் ‘மேய்ச்சலைக்’ காண வேண்டும் ; அவர் அருளும் நன்மைகளை மற்றவர்களுடன் பகிர வேண்டும் ; நாம் தவறிழைத்தவர்களுக்குத் தேவையான நிவாரணங்களைச் செய்ய வேண்டும்.
செவ்வாய்க்கிழமை
பெப்ரவரி 22
இயேசுவின் பூரண பலி
இயேசுவின் பலிபற்றி எபி 7:27; 10:10 வசனங்கள் சொல்வது என்ன ?
லேவிகோத்திர ஆசாரியர்கள் அநேகர் இருந்தார்கள் ; ஏனென்றால் அவர்கள் ‘மரணத்தினிமித்தம் நிலைத்திருக்கக்கூடாதவர்களாக’ இருந்தார்கள். எபி 7:23. ஆனால் இயேசு, என்றென்றும் ஜீவிக்கிறார் ; நித்திய ஆசாரியத்துவத்தைப் பெற்றிருக்கிறார். எபி 7:24, 25. லேவிகோத்திர ஆசாரியர்கள் ‘நாடோறும்’, ‘வருஷந்தோறும்’ பலிகளையும் காணிக்கைகளையும் செலுத்தினார்கள். எபி 7:27 ; 9:25. அவை ‘ஆராதனை செய்கிறவனுடைய மனச்சாட்சியைப் பூரணப் படுத்தக்கூடாத வைகளாம்.’ எபி 9:9; 10:1-4.
ஆனாலும் இயேசு தம்மை ‘ஒரேதரம்’ பலியாக்கி, ‘ஒரே பலியைச்’ செலுத்தினார். எபி 10:10, 12-14. அது நம் மனச்சாட்சியைச் சுத்திகரிக்கிறது. எபி 9:14 ; 10:1-10. அது நம் ‘பாவங்களை நீக்குகிறது’. எபி 9:26. மிருகபலிகளைவிட இயேசுவின் பலி மேலானது ; ஏனென்றால், இயேசுவானவர் தேவகுமாரன். எபி 7:26-28. அவர் தேவ சித்தத்தை முற்றிலும் நிறைவேற்றினார். எபி 10:5-10.
‘ஒரேதரம்’ இயேசு பலியானார் என்பதில் பல முக்கிய உண்மைகள் அடங்கியுள்ளன.
முதலாவது, இயேசுவின் பலி முழுப்பயனுள்ளது ; அதற்கு மிஞ்சின பலி இல்லை. லேவிகோத்திர ஆசாரியர்கள் மீண்டும்மீண்டும் பலிசெலுத்தினார்கள்: ஏனென்றால் அந்தப்பலிகள் பூரணப்படுத்தவில்லை ; ‘பூரணப்படுத்துமானால், ஆராதனை செய்கிறவர்கள் ஒருதரம் சுத்தமாக்கப்பட்டபின்பு, இன்னும் பாவங்களுண் டென்று உணர்த்தும் மனச்சாட்சி அவர்களுக்கு இல்லாதிருப்பதினால், அந்தப் பலிகளைச் செலுத்துகிறது நிறுத்தப்படுமல்லவா ?’ எபி 10:2.
இரண்டாவது, பழைய ஏற்பாட்டின் பல்வேறு வகை பலிகள் சிலுவையில் முற்றிலுமாக நிறைவேறின. எனவே, இயேசு நம் பாவங்களைச் சுத்திகரிக்கிறார். எபி 9:14. அதுமட்டுமல்ல. நம் ஜீவியத்தில் பாவங்களை நீக்கி, நம்மைப் பரிசுத்தப்படுத்துகிறார். எபி 9:26; 10:10-14. ஆசாரியர்கள் ஆசரிப்புக்கூடாரத்தில் தேவனுடைய சமூகத்திற்குச் சென்று, சக மனிதர்களுக்காக ஊழியம் செய்வதற்கு முன் தங்களைச் சுத்திகரித்து, பரிசுத்தப்படுத்த வேண்டியதிருந்தது.லேவி 8,9.நாம் தேவனுடைய சமூகத்திற்குள் தைரியமாய் செல்லவும், ‘ராஜரீக ஆசாரியக் கூட்டமாக’ அவரைச்சேவிக்கவும், இயேசுவின் பலி நம்மைச் சுத்திகரிக்கிறது ; பரிசுத்தப் படுத்துகிறது. எபி 10:19-23; 9:14; 1பேதுரு 2:9.
மூன்றாவது, இயேசுவின் பலி நம் ஆவிக்குரிய வாழ்விற்கான ஊட்டத்தை அளிக்கிறது. நமக்கு முன்மாதிரியை வழங்குகிறது. எனவே, இயேசுவை நோக்கிப்பார்க்க, குறிப்பாக சிலுவையின் நிகழ்ச்சிகளைப் பார்த்து, அவர் வழிநடத்துதலைப் பின்பற்ற எபிரெயர் நம்மை அழைக்கிறது. எபி 12:1-4 ; 13:12,13.
தேவன் நமக்கு அருளுகிற சகல நன்மைகளுக்கும் அடிப்படை சிலுவைதான். அது பாவத்திலிருந்து சுத்திகரிக்கிறது, நாம் ஊழியம்செய்ய நம்மைப் பரிசுத்தப்படுத்துகிறது ; வளருவதற்கு ஊட்டமளிக்கிறது. இயேசுவில் நமக்கு அருளப்பட்டுள்ளதை சிறப்பாக அனுபவிக்க நாம் என்ன செய்யலாம் ?
புதன்கிழமை
பெப்ரவரி 23
சிலுவையும் பாவமன்னிப்பின் விலையும்
பரலோகப் பரிசுத்தஸ்தலத்தில் கிறிஸ்து செய்கிற ஊழியம்பற்றி எபி 9:22 - வசனங்கள் சொல்வது என்ன ?
பழைய ஏற்பாட்டின் ஆசரிப்புக்கூடாரம்பற்றிப் புரிந்தால்தான் பரலோக பரிசுத்த ஸ்தலம் ஏன் சுத்திகரிக்கப்பட வேண்டும் என்பது புரியும். ஆசரிப்புக்கூடாரமானது தேவனுடைய ஆளுகையின் ஓர் அடையாளமாகும். 1சாமு 4:4; 2சாமு 6:2. தேவன் பாவத்தை அணுகுகிறவிதம், அவருடைய ஆளுகை நீதியானது என்பதை மக்கள் புரிந்துகொள்ள உதவுகிறது. சங் 97:2. தேவனே அரசர் என்பதால், அவரே தம் ஜனங்களின் நியாயாதிபதி ; அதனால் அவர் நீதிபரராக இருக்க வேண்டும் ; குற்றமில்லாதவர்களை குற்றமில்லாதவர்களாகவும், குற்றவாளிகளை குற்றவாளிகளாகவும் தீர்க்க வேண்டும். எனவே பாவியை மன்னித்தால், சட்டப்படி அதற்குக் காரணம்சொல்ல பொறுப்பாளியாகிறார். தேவனுடைய குணத்தையும் நிர்வாகத்தையும் பிரதிபலிக்கிற ஆசரிப்புக்கூடாரம் தீட்டுப்பட்டுள்ளது. அதாவது தேவன் நம் பாவத்தை மன்னிக்கும்போது, அந்தப் பாவம் அவர்மேல் சுமருகிறது. யாத் 34:7; எண் 14:17-19. இந்த வசனங்களில் வரும் ‘மன்னித்தல்’ என்பதற்கான எபிரெய வார்த்தை நோஸ். அதற்கு ‘சுமத்தல், தாங்குதல்’ என்று அர்த்தம்.
இஸ்ரவேலின் ஆசரிப்புக்கூடாரபலிமுறைகள் இந்தக் கருத்தை வலியுறுத்தின. பாவமன்னிப்புக்காக பலிமிருகத்தைக் கொண்டு வருகிறவன், அதன்மேல் தன் கைகளை வைத்து, பாவத்தை அறிக்கையிட்டு, அதைப் பலியிட வேண்டும். அந்த மிருகத்தின் இரத்தத்தை ஆசாரியன் பலிபீடத்தின் கொம்புகளில் பூசுவான் ; அல்லது தேவாலயத்தின் முதல் அறையில் இருந்த திரையின்மேல் தெளிப்பான். பாவமானது பரிசுத்த ஸ்தலத்திற்குள் சென்றதை அது சுட்டிக்காட்டியது. தேவன் மனிதர்களுடைய பாவங்களை அகற்றி, அவற்றை தம்மேல் சுமந்தார்.
இஸ்ரவேலில், பாவசுத்திகரிப்பு அல்லது பாவநிவாரணம் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. வருடம் முழுவதிலும், பாவத்திற்காக வருந்துகிறவர்கள் பலிமிருகங்களைக் கொண்டுவந்து, பலியிட்டு, பாவத்திலிருந்து சுத்திகரிக்கப்பு பெற்றார்கள் ; அவர்களுடய பாவம் பரிசுத்தஸ்தலத்திற்கு, அதாவது தேவனிடத்திற்கு மாற்றப்பட்டது. அந்த வருடத்தின் முடிவில், பாவநிவாரண நாள் வரும் ; அதுநியாயவிசாரிப்பு நாள். அன்று, தேவன் பரிசுத்த ஸ்தலத்தைச் சுத்திகரித்தார் ; பாவங்களை பரிசுத்த ஸ்தலத்திலிருந்து போக்காட்டிற்கு மாற்றி, சட்டப்படி சுத்திகரித்தார். அந்தப் போக்காடு சாத்தானைச் சுட்டிக்காட்டியது. லேவி 16:15-22.
இந்த இரண்டு கட்ட சுத்திகரிப்புகள், ஆசரிப்புக்கூடாரத்தின் இரண்டு அறைகளில் தனித்தனியே நடந்தன. அவை பரலோக ஆசரிப்புக்கூடாரத்தின் சாயலுக்கு ஒத்திருந்தன.யாத் 25:9 ; எபி 8:5. தேவன் ஒரே நேரத்தில் இரக்கமும் நீதியும் காட்டுவதை விளங்கிக்கொள்ள உதவின. வருட முழுழுவதிலும் பாவங்களை அறிக்கையிட்டவர்கள், பாவநிவாரண நாளில் விசேஷித்த ஓய்வை அனுசரித்து, தங்களைத் தாழ்மைப்படுத்த வேண்டும் ; தேவன் மேலான மெய்ப்பற்றிற்கு அது அடையாளம். லேவி 16:29-31. அப்படி செய்யாதவன் ‘அறுப்புண்டுபோவான்’. லேவி 23:27-32.
உங்களுடைய பாவங்களுக்கு நியாயப்படி தண்டனைகொடுத்தால் உங்கள் நிலை எள்ளவாகும் ? கிறிஸ்து உங்களுக்காக எவ்வளவு மேலான நன்மையைச் செய்திருக்கிறார் ?
வியாழக்கிழமை
பெப்ரவரி 24
நியாயவிசாரணையும் தேவனுடைய குணமும்
நம் பாவங்களை மன்னிக்கப்படுவதற்காக இயேசு சிலுவையில் மீட்பைப் பெற்றுக் கொடுத்தது தேவனைப் பற்றி என்ன வெளிப்படுத்துகிறது ? ரோமர் 3:21-26 ; 1:16,17; 5:8.
நம் பாவமன்னிப்பில், பரலோக ஆசரிப்புக்கூடாரத்தின் இரண்டு அறைகளில் இயேசுவின் இரண்டு கட்ட மத்தியஸ்த பணி சம்பந்தப்பட்டுள்ளது. முதலாவது, இயேசு நம் பாவங்களை நீக்கி, தம்மை நம்புகிற ஒவ்வொருவரும் பாவமன்னிப்பு பெறும்படி சிலுவையில் தொங்கினார். அப் 2:38; 5:31. சிலுலையில், அனைவருடைய பாவத்தையும் அவர் சுமந்ததால், தம்மை நம்புகிற ஒவ்வொருவரையும் மன்னிப்பதற்கான உரிமையைப் பெற்றார். மேலும் புதிய உடன்படிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறார் ; அதனால் பரிசுத்த ஆவியாவனர்மூலம் விசுவசிகளின் இருதயங்களில் தேவ பிரமாணத்தை எழுத முடியும். எபி 8:10-12; எசே 36:25-27.
இயேசுவினுடைய ஊழியத்தின் இரண்டாம் கட்ட நியாயவிசாரணை சம்பந்தப்பட்டது ; அது வருகைக்கு முந்தைய நியாயவிசாரணை:எபிரெயரை எழுதின சமயத்தில் அது தொடங்கியிருக்கவில்லை. எபி 2:1-4; 6:2 ; 9:27,28; 10:25. இந்த நியாயவிசாரணை தேவ மக்களிடத்தில் தொடங்குகிறது ; தானியேல் 7:9-27 ; மத்தேயு 22:1-14 ; வெளி 14:7 ஆகிய வசனங்கள் இதைச் சொல்கின்றன. தேவன் தம் மக்களை மன்னிப்பது நியாயம்தான் என்பதை வெளிப்படுத்துவதே இந்த நியாய விசாரணையின் நோக்கம். இதில், அவர்களுடைய வாழ்க்கை பதிவுகள் அண்ட சராசரத்திற்கும் முன்பு வெளியரங்கமாகும். விசுவாசிகளுடைய இருதயங்களில் உண்டான மாற்றத்தையும், அவர்கள் இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொண்டு, ஆவியானவரை வாழ்க்கையில் அனுமதித்தவிதத்தையும் தேவன் காட்டுவார்.
நியாயவிசாரணைபற்றி எலன் ஒய்ட் பின்வருமாறு எழுதினார்: ‘இந்தக் குற்றச்சாட்டுகளை மனிதன் சுயமாக எதிர்கொள்ள முடியாது. பாவக்கறைபடிந்த வஸ்திரங்களுடன், தன் பாவங்களை அறிக்கையிட்டவனாக தேவனுக்குமுன் நிற்கிறான். ஆனால் மனந்திரும்பி, விசுவாசித்து தங்கள் ஆத்துமாக்களை தம்மிடம் ஒப்படைத்தவர்களின் சார்பாக நம் வழக்கறிஞரான இயேசு வல்லமையாக வாதாடுகிறார். அவர்களுக்கு ஆதரவாக மன்றாடுகிறார் ; கல்வாரியின் மகத்துவங்களை முன்வைத்து, வாதாடி, அவர்களைக் குற்றஞ்சாட்டுகிறவனுடைய வாயை அடைக்கிறார். சிலுவையின் மரணபரியந்தம் தேவபிரமாணத்திற்கு அவர் முற்றிலும் கீழ்ப்படிந்ததால், பூமியிலும் வானத்திலும் சகல அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்தார் ; குற்றவாளியான மனிதனுக்கு பிதாவின் இரக்கத்தையும் ஒப்புரவாகுதலையும் உரிமைகோருகிறார். நம் பாவ நிலையை உணருகிற அதேவேளையில் நாம் நீதிமான்களாகவும், பரிசுத்தமாகவும், மீட்பைப்பெறவும் கிறிஸ்துவை மட்டுமே சார்ந்திருக்க வேண்டும். சாத்தான் நமக்கு எதிராக வைக்கிற குற்றச்சாட்டுகளுக்கு நாம் பதிலளிக்க முடியாது ; கிறிஸ்துமட்டுமே நமக்காக வல்லமை யோடு மன்றாட முடியும். நம் புண்ணியங்களை வைத்தல்ல, தம் புண்ணியங்களை வைத்து வாதாடி, குற்றஞ்சாட்டுகிறவனை வாயடைக்க வல்லவர்’.
தாழ்மையோடும் மனந்திரும்புதலோடும் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் ; சிலுவையும் இயேசு நமக்காகச் செய்கிற ஊழியமும் அதை எவ்வாறு சுட்டிக்காட்டுகின்றன ?
வெள்ளிக்கிழமை
பெப்ரவரி 25
மேலும் படிக்க: வருகைக்கு முந்தைய விசாரணையின் தன்மைபற்றி பேராசிரியர் யிரி மோஸ்கலா இவ்வாறு விவரிக்கிறார்: “கடைவிளம்பர பொருட்கள்போலஎன் பாவங்களை விளம்பரய்டுத்ததேவன் விரும்புவதில்லை. மாறாக, முதலாவது மறுரூபமாக்க வல்லமையுள்ள தம் ஆச்சரிய கிருடையைச் சுட்டிக்காட்டுவார் ; அவரே என் வாழ்நாளின் மெய்யான சாட்சி என்பதால் ஒட்டுமொத்த பிரபஞ்சத்திற்கும் முன்பாக தேவன்மேலான என் மனநிலையையும், என் உள்ளான நோக்கங்களையும், என் எண்ணங்களையும், என் செயல்களையும், என் வழிப்போக்கையும், வாழ்க்கைத் திசையையும் விளக்குவார் ; விலாவாரியாக எடுத்துக்கூறுவார். நான் பல தவறுகள் செய்ததையும், அவருடைய பரிசுத்த பிரமாணத்தை மீறினதையும், ஆனால் மனந்திரும்பி, பாவமன்னிப்பு கேட்டு, அவர் கிருபையால் மாற்றமடைந்ததையும் சாட்சியிடுவார். அவர், ‘பாவியான மோஸ்கலாவுக்கு என் இரத்தம் போதுமானது ; அவன் வாழ்க்கைப் பாதை என்னைநோக்கியே இருந்தது ; என் மேலும் பிறர்மேலும் அன்பான, சுயநலமற்ற மனநிலையுடன் நடந்தான் ; அவன் நம்பத் தகுந்த வன் ; அவன் என்னுடைய உண்மையும் உத்தமுமான ஊழியக்காரன்’ என்று சொல்வார் “.1
‘சிலுவையே மீட்கப்பட்டவர்களின், விழுந்துபோகாதவர்களின் ஆராய்ச்சியும் பாடலுமாக இருக்கும். சுயநலமற்ற அன்பின் மகிமைதான் இயேசுவின் முகத்தில் பிரகாசமாக ஜொலிக்கிறதென்பது புலப்படும். சுயநலப்புறக்கணிப்பு பிரமாணமே வானத்திலும் பூமியிலும் வாழ்க்கைக்கான விதி என்பதே கல்வாரியின் வெளிச்சத்தில் புலப்படுகிறது ; “தற்பொழிவை நாடாத” அன்பு, தேவனுடைய இருதயத்திலிருந்து புறப்படுகிற அன்பாகும் ; சாந்தமும் மனத்தாழ்மையுமாக இருக்கிற கிறிஸ்துவில்தாம் ஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரின் குணம் வெளிப்படுகிறது’ 2
1 “Toward a Biblical Theology of God’s Judgment: A Celebration of the Crass in Seven Phases of Divine Universal Judgment,” Journal of the Adventist Theological Society 15 (Spring 2004): p. 155.
2Ellen G. White, The Desire of Ages, pp. 19, 20.
கலந்துரையாடக் கேள்விகள்
- இரட்சிப்புக்காக அல்லது பாவமன்னிப்புக்காக நேவனுக்கு பல்வேறு வகை பலிகளை இடுவதே மனிதர்களின் இயல்பு. சிலர் தேவனுக்கு, நீண்டதூரம் பாதயாத்திரை செல்வது போன்ற தீவிர நோன்பைக் கடைபிடிக்கிறார்கள் ; வேறு சிலர் நற்பணி தொண்டுகளைச் செய்கிறார்கள் அல்லது சுயமறுப்பு செயல்களில் ஈடுபடுகிறார்கள் ; இன்னும் பல இருக்கின்றன. இயேசு தம்மையே பலியாகக் கொடுத்தபோது சகலவித பலிகளும் சிலுவையில் நிறைவேறினதாக வேதாகமம் சொல்கிறது ; அப்படியானால், தற்தியாக நோன்புகளை எவ்வாறு கருத வேண்டும் ? தானி 9:27 ; எபி. 10:18.
- அதேசமயம், விசுவாசியின் வாழ்க்கையில் தற்தியாகத்தின் பங்கு என்ன ? இயேசு, தம் சிலுவையை எடுத்துக்கொண்டு தம்மைப் பின்பற்றும்படி சொன்னார். மத் 16:24. அப்போஸ்தலன், நாம் நம் சரீரங்களை ‘பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவ பலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்ற’ சொன்னான். ரோமர் 12:1. அதன் அர்த்தம் என்ன ? இயேசுவும் பவுலும் சொல்லும் அறிவுரைகளுக்கு என்ன சம்பந்தம் இருக்கிறது ? மத் 16:24 ; ரோமர் 12:1 ; எபி 13:15,16.