பாடம் 12

மார்ச் 12-18

அசைக்கப்படாத ராஜ்யத்தைப் பெறுதல்

ஓய்வுநாள் பிற்பகல்

இவ்வார ஆராய்ச்சிக்கு:எபி 12:18-29; யாத் 32:32; தானி 7:9, 10, 13-22; ஆகாய் 2:6-9, 20-22; சங் 15:5; 16:8; எபி 13:15, 16.

மனன வசனம்: ‘ஆதலால், அசைவில்லாத ராஜ்பத்தைப் பெறுகிறவர்களாகிய நாம்பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்’ எபி 12:28.

இவ்வார ஆராய்ச்சி வசனங்கள் எபி 12:18-29; எபிரெயர் நிருபத்தின் உச்சக்கட்ட வசனங்கள்கூட. ‘தேவன் தம் குமாரன்மூலம் பேசினார்; அவருக்குநாம் செவிகொடுக்க வேண்டும்’ என்று ஆரம்பத்தில் சொன்ன கருத்தை மீண்டும் வலியுறுத்துகின்றன. எபி 1:1,2; 12:25. இந்த நிருபம் முழுவதும் இயேசுவைப் பற்றிச் சொல்கிற கருத்தை எபி 12:22-24 ஆணித்தரமாக உறுதிப்படுத்துகிறது. அதாவது, இயேசு புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராக இருக்கிறார்; அவருடைய இரத்தம் விசுவாசிகளுக்கு இரட்சிப்பளிக்கிறது. அவர் ராஜாவாகவும் ஆசிரியராகவும் பரலோகத்தில் நமக்காக ஊழியம்செய்வதால், பரலோகச்சேனைகள் கொண்டாடி மகிழ்கின்றன. இறுதியாக, உச்சக்கட்ட ஆலோசனைகளை எபி 12:25-29 சொல்கிறது. அதாவது, தேவனுடைய நியாயத்தீர்ப்பு வருகிறது. அப்போது தேவன் தம் எதிரிகளை அழிப்பார். தம் பிள்ளைகளை நீதிமான்களென நியாயந்தீர்த்து, அவர்களுக்குராஜ்யத்தை அருளுவார். எபி 12:28, 29.

எபிரெயரின் அந்தக் கடைசிப்பகுதியானது, சிலுவையில் இயேசு பெற்ற வெற்றிகளின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது; அந்த வெற்றி முழுமையடையும் வகையில் அவர் இரண்டாம் முறை வரப்போவதை விசுவாசிகளுக்குக் காட்டுகிறது. நியாயாதிபதியாகிய தேவனிடமிருந்து இயேசு ஒரு ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டதையும், ‘உன்னதமானவருடைய பரிசுத்தவான்களாகிய’ விசுவாசிகளை தம் ராஜ்யத்தில் சேர்த்துக்கொள்வதையும், அவர்கள் என்றென்றும் அதைச் சுதந்தரிப்பதையும் வலியுறுத்த தானியேல் 7இன் உருவகத்தைப் பயன்படுத்துகிறது. தானி 7:9-14; குறிப்பாக தானி 7:18.

  • 2021, மார்ச் 19 வருப்புக்காகப் படிக்கவேண்டி பாடம்

ஞாயிற்றுக்கிழமை

மார்ச் 13

சீயோன் மலையினிடத்திற்கு வந்து சேர்ந்தீர்கள்

எபி 12:22-24இல் பவுல் எதைப் பற்றி விளக்குகிறான்?

நாம் சீயோன் மலையினிடத்திற்குச் சேர்ந்து, மிகப்பெரிய கொண்டாட்டத்தில் பங்கேற்றிருப்பதாக எபிரெயர் சொல்கிறது. ‘இந்தப் புதிய இடத்தின் பெயர் சீயோன் மலை. தேவன் வசிக்கும் நகரத்திற்கு வந்திருக்கிறீர்கள். இது பரலோகமான எருசலேம். ஆயிரக்கணக்கான தேவதூதர்கள் மகிழ்ச்சியோடு கூடுகிற இடம்’. எபி 12:22 (எளிய மொழிபெயர்ப்பு). நம் பிரதிநிதியாகிய இயேவை விசுவாசித்து, அங்கு சேர்ந்துள்ளோம். அந்தக் கொண்டாட்டத்தில் எண்ணிலடங்காத தேவதூதர்களும், தேவனும், கொண்டாட்டத்தின் நாயகரான இயேசுவும் கலந்து கொண்டிருக்கிறார்கள். ‘பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களாக’ அதில் நாம் கலந்துகொள்கிறோம். எபி 12:23. தேவனை விசுவாசிக்கிற ஒவ்வொரு பெயர்களும் எழுதப்பட்டுள்ள பரலோகப்புத்தகங்களில் நம் பெயர்களை எழுதியிருக்கிறார். யாத் 32:32; சங் 56:8; தானி 12:1; மல் 3:16; லூக் 10:20; வெளி 13:8; 17:8.

நாம் ‘முதற்பேறானவர்கள்’. ஏனென்றால் முதற்பேறானவர்களில் முந்தினவராகிய இயேசுவின் சுதந்தரத்தில் பங்குபெற்றுள்ளோம். எபி 1:6. எனவே அங்கு விருந்தினர்களாக அல்ல, குடிமக்களாகச் சென்றிருக்கிறோம். பிலி 3:20. நம்மைப் பற்றி ‘பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகள்’ என்று எபி 12:23 சொல்கிறது. இது சினயைாகு பெயராக உள்ளது. மனிதனின் ஒரு பகுதியின் பெயரானது முழுமனிதனுக்கும் ஆகிவந்துள்ளது. எபி 12:9 இல் சொல்லப்படும் ‘ஆவிகளின் பிதா’ என்பதும் சினயைாகு பெயரே. ஆவிக்குரிய இயல்புள்ள அனைத்து மனிதர்களின் பிதாவாகிய தேவன் என்று அதற்கு அர்த்தம்.

இயேசுவின் ஆளுகையும், பிரதான ஆசாரிய ஊழியமும், புதிய உடன்படிக்கையும் தொடங்கியதைக் கொண்டாடின நிகழ்ச்சிதான் இது. இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் சீயோன் மலையில் நடப்பதாக எபிரெயர் சொல்கிறது. எபி 1:5-14இல் வருகிற மூன்று சங்கீதங்கள் குமாரன் அரசராக பொறுப்பேற்றதை விவரிக்கின்றன; சீயோன் மலையில் அந்நிகழ்ச்சி நடப்பதாகச் சொல்கின்றன. சங் 2:6, 7; 110:1, 2; 102:21-27.

சீயோன் மலையில்தான் குமாரனை ‘என்றென்றைக்கும் ஆசாரியராக’ தேவன் நியமித்தார் என்று சங்கீதம் 110:4ஐ எபி 5:6 மேற்கோள் காட்டுகிறது. குமாரனை பிரதான ஆசாரியராக நியமித்ததும் சீயோன் மலையில்தான். சங் 110:2. இறுதியாக, இயேசுவின் ஆசாரியத்துவத்தின் துவக்கம், புதிய உடன்படிக்கையின் துவக்கமாக இருக்கிறது. எபி 7:11-22. எனவே, புதிய உடன்படிக்கையை உறுதி செய்த இடமும் சீயோன் மலைதான். இயேசு பரலோகம்சென்றபிறகு, மகிழ்ச்சியான அந்தக் கொண்டாட்டம் நடைபெற்றதாக எபி 12:22-24 விவரிக்கிறது.

இயேசுவையும் அவரது பிரதான ஆசாரிய ஊழியத்தையும், புதிய உடன்படிக்கையையும் நம் வாழ்விலும் தொழுகையிலும் நடைமுறைரீதியாக எவ்வாறு கொண்டாடி மகிழலாம்? இந்த மாபெரும் சத்தியத்தில் மகிழ்வது எவ்வாறு நம் விசுவாசத்தை உறுதிப்படுத்தும்?

திங்கட்கிழமை

மார்ச் 14

யாவருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடத்திற்கு வந்துசேர்ந்தீர்கள்

அது கொண்டாட்டமான நிகழ்வு என்றால், தேவன் நியாயாதிபதியாகக் காட்டப்படுவது ஏன்? எபி 12:23. கொண்டாட்டத்தில் நியாயாதிபதி என்ன பங்காற்ற முடியும்? தானி 7:9, 10, 13-22.

எபி 12:22-24 சொல்கிற கொண்டாட்டமானது வருங்கால நியாயத்தீர்ப்பு ஒன்றைக் குறிப்பிடுகிறது. நியாயத்தீர்ப்பை வழங்குகிறவர் தேவன்; புத்தகங்களை வைத்து விசாரித்து, நியாயத்தீர்ப்பு கொடுக்கிறார். அந்த நியாயத்தீர்ப்பின் முடிவில், தேவமக்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்கிறார். எபி 12:28.

வருகைக்கு முந்தைய நியாய விசாரணைபற்றி தானி 7 சொல்வதை இந்தக் காட்சி ஞாபகப்படுத்துகிறது. அதில், ‘நீண்ட ஆயுசுள்ளவர்’ அக்கினி ஜுவாலையான சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிறார். தானி 7:9. ‘கோடாகோடி’ தூதர்கள் அவரைச் சூழ்ந்திருக்கிறார்கள். தானி 7:10. ‘உன்னதமானவருடைய பரிசுத்தவான்களுக்கு’ ஆதரவாக தீர்ப்பை வழங்குகிறார்; அதன்பிறகு அவர்கள் ‘ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்கிறார்கள்’. தானி 7:22.

அதுபோல எபிரெயர் 12:22-29 வசனங்களும் சீயோன் மலையில் நடைபெறுகிற ஒரு நியாயவிசாரணைக் காட்சியை விளக்குகின்றன. அங்கு ‘யாவருக்கும் நியாயாதிபதியாகிய’ தேவன் இருக்கிறார்; அவரை ‘ஆயிரம் பதினாயிரமான’ தேவதூதர்கள் சூழ்ந்திருக்கிறார்கள். அங்கு அக்கினிமயமானக் காட்சியும் வருகிறது. எபி 12:29. அங்குப் புத்தகங்களும் வருகின்றன; பரிசுத்தவான்களுடைய பெயர்கள் அவற்றில் ‘எழுதப்பட்டிருந்தன’. எபி 12:23. எனவே பரிசுத்தவான்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்படுமென்பது புரிகிறது.

அந்தக்காட்சியின் மையம் இயேசு. எபி 12:24. அவரை மனுஷ குமாரன் என்று எபி 2 சொல்கிறது. அவர் நமக்காக ‘மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டார்’. எபி 2:9. ‘அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவருவதற்காக’ மனுஷகுமாரன் பாடனுபவித்தார். எபி 2:10,6. அதாவது விசுவாசிகள் ‘மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்படுவதற்காக’ அவர்பாடனுபவித்தார். ‘குமாரன்’ இப்போது அநேகரை புதிய உடன்படிக்கையின் அனுகூலங்கள்மூலம் பரலோக எருசலேமானசீயோனுக்குள் கொண்டுவந்திருக்கிறார். எபி 12:22-24. அங்கே, விசுவாசிகள் ராஜ்யத்தைப் பெறுவார்களென வாக்களிக்கிறார். எபி 12:28.

எனவே நியாய விசாரனை உண்மையிலேயே விசுவாசிகளுக்கு நற்செய்தி. ஏனென்றால் அங்கு அவர்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பளிக்கப்படும். நீதிமான்களெனத்தீர்க்கப்படுவார்கள். அந்த நியாயத்தீர்ப்பு அவர்களுடைய எதிராளியாகிய வலுசர்ப்பத்திற்கு எதிராக இருக்கும்; அந்த வலுசர்ப்பம்தாம் முன்புவிசுவாசிகளைஉபத்திரவப்படுத்தியது, இனிவிசுவாசிகளை உபத்திரவப்படுத்தப்போகிற கொடிய மிருகங்களுக்கு பின்னாலிருந்து செயல்பட்டது. தானி 7; வெளி 13.

முத்தூது சொல்கிற நியாயத்தீர்ப்பானது இக்காலத்திற்கான ‘ நற்செய்தி ‘ என்பதைப் புரிந்துகொள்ள இன்றைய பாடம் எவ்வாறு உதவியது? வெளி 14:6,7; உபா 32:36; 1நாளா 16:33-35.

செவ்வாய்

மார்ச் 15

பூமியையும் வானத்தையும் அசைத்தல்

பரலோகத்தில் நடைபெறும் அந்த மகிழ்ச்சியான கொண்டாட்டத்தை விவரித்துவிட்டு, தேவனுடைய சத்தத்திற்குச் செவிகொடுக்கும்படி பவுல் விசுவாசிகளை எச்சரிக்கிறான். ஏனென்றால் தேவன் ‘இன்னும் ஒருதரம் பூமியை மாத்திரமல்ல, வானத்தையும் அசையப்பண்ணுவார்’. எபி 12:26. பரலோகத்தில் இயேசு அரசராகப் பதவியேற்றபோதிலும், நம் இரட்சிப்பு இன்னும் முற்றிலும் நிறைவேறவில்லை. முக்கிய நிகழ்வுகள் இன்னும் நிறைவேற இருப்பதால் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

ஆகாய் 2:6-9, 20-22; சங் 96:9, 10; 99:1; எபி 12:26, 27 ஆகிய வசனங்களை ஒப்பிடுங்கள். இயேசு வானத்தையும் பூமியையும் அசையப்பண்ணுவதின் நோக்கம் என்ன? அதன் அர்த்தம் என்ன?

பழைய ஏற்பாட்டில், பூமியை அசையப்பண்ணுவது தேவனுடைய பிரசன்னத்திற்கு ஓர் அடையாளமாக இருந்தது; பூமியை அசையப் பண்ணி தேவன் தம் மக்களைக் காப்பாற்றியிருக்கிறார். பாராக்கும் தெபொராளும் சிசெராவுக்கு எதிராக யுத்தம் செய்தபோது, தேவன் அவர்களுக்காக பரலோகத்திலிருந்து யுத்தம் செய்தார். நியா 5:20. அப்போது மிகப்பெரிய பூகம்பம் உண்டானது. தேவனுடைய பிரசன்னத்தால் பூமியும் பர்வதங்களும் அசைந்தன. நியா 5:4,5. பழைய ஏற்பாட்டில், தம் மக்களை ஒடுக்கினவர்களிடமிருந்து விடுவிக்க தேவன் செயல்பட்ட சமயங்களில் எல்லாம் இதே போன்ற காட்சி வருவதைக் காணலாம். சங் 68:7,8; 60:2; 77:17, 18. எனவே, பூமியின் மனிதர்கள்மேல் தமக்குள்ள அதிகாரத்தை உறுதிப் படுத்தும் வகையில் தேவன் பூமியை அசையப் பண்ணினார்; அது தேவனுடைய நியாயத்தீர்ப்பைச் சுட்டிக்காட்டியது. கர்த்தருடைய நாளிலும் அவ்வாறு நிகழுமென தீர்க்கதரிசி முன்னுரைத்தான். ஏசா 13:13; 24:18-23.

தேவன் வானத்தையும் பூமியையும் ‘அசையப் பண்ணுவது’, தேவனுடைய எதிரிகளின் அழிவைச்சுட்டிக்காட்டுவதை எபிரெயர் வலியுறுத்துகிறது. இயேசுவை அரசராக மூடிசூட்டியபோது, தேவன் கொடுத்த வாக்குறுதியும் அதுதான். ‘நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலது பாரிசத்தில் உட்காரும் ‘. எபி 1:13. எனவே, இயேசு சத்துருவைத் தோற்கடித்திருக்கிறார். எபி 2:14-16. அரசராக முடிசூட்டப்பட்டுள்ளார். எபி 1:5-14. ஆனால் சத்துருக்கள் இன்னும் அழிக்கப்படவில்லை. எபி 10:11-14; 1கொரி 15:23-25.

முடிவுகாலத்தில் தேவன் வானத்தையும் பூமியையும் அசையப்பண்ணி, அந்த எதிரிகளை அழிப்பார். எனவே வானத்தையும் பூமியையும் அசையப்பண்ணுவது என்றால், தேவனுடைய மக்களை உபத்திரவப்படுத்தின பூலோக வல்லமைகளை அழிப்பதாகும்:முக்கியமாக, பூலோக வல்லமைகளின் பின்னால் நின்று, அவர்களைக் கட்டுப்படுத்தின தீய வல்லமைகளான சாத்தானையும் அவன் தூதர்களையும் அழிப்பதாகும்.

ஒருநாள் தேவள் நீதியைச் சரிகட்டுவார்; இன்று உலகம்முழுவதிலும் நிறைந் திருக்கும் தீமை ஒழிக்கப்படும் என்கிற வாக்குறுதி ஏன் நமக்கு நம்பிக்கையளிக்கிற வாக்குறுதியாக இருக்கிறது? குறிப்பாக, தீமையை நேரடியாக அனுபவித்தவர்களுக்கு நம்பிக்கையளிக்கிறது?

புதன்

மார்ச் 16

அசைக்கப்படாத ராஜ்யம்

வானத்தையும் பூமியையும் தாம் ‘அசையப்பண்ணுவதாக’ தேவன் சொன்னார். அதற்கு எதிரி தேசங்களை அழிக்கப்போவதாக அர்த்தம். ஆனால் அசைக்கப்படாத, அதாவது அழிக்கப்படாத சில விஷயங்களும் இருக்கின்றன.

அசைக்கப்படாத விஷயங்கள் யாவை? சங் 15:5; 16:8; 21:7; 62:2; 112:6; எபி 12:27.

வானமும் பூமியும் அசைக்கப்படும் என்றால், அவை அகற்றப்பட்டு, என்றென்றும் இல்லாமல் போகுமென்று நினனத்துவிடக் கூடாது. தேவன் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிப்பார், நாம் உயிரோடு எழுப்பப்பட்டு, புதிய சரீரமுள்ளவர்களாக இந்தப் பூமியில் இருப்போம் என்று வேதாகமம் தெளிவாகச் சொல்கிறது. ஏசா 65:17; வெளி 21:1-4; 1தெச 4:13-17; பிலி 3:20. எனவே, ‘அசையப்பண்ணுதல்’ என்பது முற்றிலும் அகற்றப்படுவதை அல்ல, மாறாக சிருஷ்டிப்பு சுத்திகரிக்கப்பட்டு, புதுப்பிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டு கிறது.இப்போது இருக்கிற சிருஷ்டிப்பு மீண்டும் புதுப்பிக்கப்படும்; மீட்கப்பட்டவர்கள் அங்குதான் வாழ்வார்கள்.

அசைக்கப்படாத, அசைக்கப்படமுடியாத சில விஷயங்களும் உள்ளன. அவற்றில் நீதிமான்களும் உண்டு. அவர்கள் தேவனில் நம்பிக்கை வைத்ததால், அசைக்கப்படுவதில்லை. சிருஷ்டிகர் அவர்களைத்தாங்குகிறார்; அவர்களுடைய உயிருக்கு உத்தரவாதமளிக்கிறார்.

நிலைத்திருப்பதும் ஸ்திரப்படுவதும் இயேசுவால் கிடைப்பது என்பதை எபிரெயர் வலியுறுத்துகிறது. எபி 1:10-12 இயேசுவைப் பற்றி இவ்வாறு சொல்கிறது: ‘கர்த்தாவே, நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கரத்தின் கிரியைகளாயிருக்கிறது; அவைகள் அழிந்துபோம்; நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் வஸ்திரம்போலப் பழைமையாய்ப்போம்; ஒருசால்வையைப் போல அவைகளைச்சுருட்டுவீர், அப்பொழுது மாறிப்போம்; நீரோமாறாதவராயிருக்கிறீர், உம்முடைய ஆண்டுகள் முடிந்துபோவதில்லை’. இயேசுவின் ஆசாரியத்துவம் நிலைத்திருக்கும். எபி 7:3, 24. மீட்கப்பட்டவர்களின் சுதந்தரம் நிலைத்திருக்கும். எபி 10:34. இறுதி நியாயத்தீர்ப்பில், ‘ இயேசுவைப் பற்றிக்கொள்கிறவர்கள் அசைக்கப்படுவதில்லை. சங் 46:5.

நாம், ‘அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுவோம்’ என்று எபி 12:28 சொல்கிறது. இது தானியேல் 7:18 பற்றியக் குறிப்பு. பரிசுத்தவான்கள் ‘சதாகாலங்களிலும் ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்’. ‘என்றென்றைக்கும் அழியாத’ இந்த ராஜ்யத்தைத்தான் தானி 2:44 குறிப்பிடுகிறது. இது குமாரனுக்குச் சொந்தமான ராஜ்யம்; அதில் நம்மையும் சேர்த்துக்கொள்வார். நம்மை உபத்திரவப்படுத்தின தீயவல்லமைகளை அவரோடு சேர்ந்து, நாமும் நியாயத்தீர்ப்போம். வெளி 20:4. மேலும் பார்க்கவும்: 1கொரி 6:3.

அசைக்கப்படுவதுபற்றி எவ்வளவு தூரம் அறிந்திருக்கிறீர்கள்? சரியாக அறிந்திராவிட்டால். அதுபற்றி இன்னும் சிறப்பாக அறிந்துகொள்ள என்ன தீர்மானங்களைச் செய்யலாம்? எபே 4:14.

வியாழன்

மார்ச் 17

நன்றிசெலுத்தக்கடவோம்

இந்தப் பகுதியின் முடிவில் எபிரெயர் குறிப்பிடுகிற கருத்தைக் கவனிக்க வேண்டும். அதாவது தேவன் நமக்குச் செய்த சகல அதிசயங்களுக்காகவும் அவருக்கு நன்றி செலுத்த வேண்டும்; அவருக்கு பிரியமான தொழுகையைச் செலுத்துவதே அதற்கான வழி.

எவ்வாறு தேவனுக்குப் பிரியமாக தொழுகைசெய்யலாம்? எபி 12:28; 13:15, 16.

பழைய உடன்படிக்கை அமைப்பில், மக்கள் மனந்திரும்புதலையும் நன்றியையும் வெளிக்காட்டும் விதமாக மிருகங்களைப் பலியிட்டார்கள். ஆனால் தொழுபவரின் இருதயத்தில் மனந்திரும்புதலும் நன்றியறிதலும் உண்டானதற்கு ஓர் அடையாளமாக மட்டுமே அந்தப் பலிகள் இருந்தன. எனவே, மிருகங்களின் இரத் தத்தை அல்ல, ஆராதிப்பவர்களின் நீதியையும் நன்றியறிதலையும் நற்கிரியைகளையும்மட்டுமே தாம் உண்மையில் விரும்புவதாக சங்கீதங்களிலும் தீர்க்கதரிசிகளிலும் தேவன் தெளிவுப்படுத்தினார். சங் 50:7-23; ஏசா 1:11-17.

எனவே, பரலோக ஆசரிப்புக்கூடாரத்தில் உள்ள தேவனுடைய நாமத்தை அறிக்கையிட்டும், ஸ்தோத்திரப் பலி செலுத்தியும், நன்மை-தானதர்மங்கள் செய்தும் ஆராதிக்குமாறு பவுல் நம்மை அழைக்கிறான்; அதுவே அவருக்குப் பிரியமான ஆராதனை. பூமியில் இந்தப் பலிகளைத் தரும்போது, தேவன் தமக்குப் பிரியமான பலிகளாக பரலோகத்தில் ஏற்றுக்கொள்கிறார். இயேசுவின் நாமத்தை அறிக்கையிடுமாறும், தொடர்ந்து நற்கிரியைகளைச் செய்யுமாறும் அந்த நிருபம்முழுவதிலும் பவுல் அறிவுறுத்துகிற இடங்களில் எல்லாம் இந்த ஆலோசனை பொருந்தும். எபி 3:1; 4:14; 10:23; 6:10-12; 13:1, 2, 16.

‘தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி’ விசுவாசிகளை பவுல் அழைக்கிறான். எபி 12:28. ஏனென்றால், அவர்கள் இப்போதுதம்முடைய பலியால் இயேசு பரிசுத்தப்படுத்தி, பூரணமாக்கின கூட்டத்தார். எபி 10:10-14, 19-23. இஸ்ரவேலரைப்பற்றி தேவன் கொண்டிருந்த நோக்கம் இதன்மூலம் நிறைவேறுகிறது. அதாவது இஸ்ரவேல் ஓர் ஆசா ரியராஜ்யமாக இருக்க வேண்டும், அவர்கள் இரட்சிப்பின் நற்செய்தியை உலகத்திற்கு அறிவிக்க வேண்டும் என்று விரும்பினார். யாத் 19:4-6; 1 பேதுரு 2:9,10; வெளி 1:6; வெளி 5:10.

நடைமுறை வாழ்வில் நாம் எவ்வாறு நன்மை செய்ய வேண்டும், நம்மிடம் உள்ளதைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதை எபி 13:1-6 விவரிக்கிறது. இயேசு நம்மிடம் சகோதரசிநேகத்துடன் நடந்துகொண்டதுபோல, நாமும் அவ்வாறு நடக்க வேண்டும்.எபி 2:11, 12. விருந்தோம்ப வேண்டும்; சிறையில் இருப்பவர்களையும் அல்லது தீங்கனுபவித்தவர்களையும் சென்று சந்திக்க வேண்டும். எபி 13:3. விபசாரத்தையும் பேராசையையும் விட்டுவிலக வேண்டும்.

நன்மைசெய்வதும் நம்மிடமுள்ளதைப் பகிர்வதும் தேவனை நாம் ஆராதிப்பதில் எவ்வாறு முக்கிய அங்கமாக இருக்கிறது? அதேநேரம், தேவனுக்கு நாம் ஏறெடுக்கிற ஆவிக்குரிய பலிகள்கூட எவ்விதங்களில் எல்லாம் கறைப்பட்டிருக்க வாய்ப்புள்ளது? ஏசா 1:11-17.

வெள்ளி

மார்ச் 18

மேலும் படிக்க: “முதலாவது உயிர்தெழுதலுக்கும் இரண்டாவது உயிர்தெழுதலுக்கும் இடைப்பட்ட ஆயிரம் வருடக்காலத்தில் மனந்திரும்பாத பாவிகளைக் குறித்த நியாயவிசாரணை நடைபெறும். அந்த நியாயவிசாரணை கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கும்பின்னர் இருக்கும்: ‘கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக் குறித்தும் தீர்ப்புச் சொல்லாதிருங்கள்; இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்’. 1கொரிந்தியர் 4:5. ‘நியாயவிசாரிப்பு உன்னதமான வருடைய பரிசுத்தவான்களுக்குக் கொடுக்கப்பட்டது’ என்றுதானியேல் கூறுகிறான். தானி 7:22. இந்தக் காலத்தில் நீதிமான்கள் தேவனுடைய ராஜாக்களாகவும் ஆசாரியர்களாகவும் இருந்து அரசாளுவார்கள். ‘நான் சிங்காசனங்களைக் கண்டேன். அவைகளின்மேல் உட்கார்ந்தவர்கள். நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது’. ‘இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவிற்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்’. வெளி 20:4, 6. ‘பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பது இந்தக்காலத்தில்தான். 1 கொரி 6:2. கிறிஸ்துவோடு சேர்ந்து அவர்கள் பாவிகளை நியாந்தீர்ப்பார்கள். பாவிகள் செய்த ஒவ்வொரு செய்கையையும் வேதா கமமாகிய சட்டப்புத்தகத்தோடு ஒப்பிட்டுப்பார்த்து, அவர்கள் செய்தது அநீதியானதே என்பதுதீர்மானிக்கப்படும். பிறகு அவரவர் செய்த பாவக்கிரியைகளுக்கு ஏற்றவாறு, தண்டனையின் கடுமை தீர்மானிக்கப்படும். இவையாவும் மரணபுத்தகத்திலே அவரவர் பெயர்களுக்கு நேராக எழுதப்படும்.

“கிறிஸ்துவும் அவரது ஜனங்களும் பாவம்செய்த மனிதர்களைமட்டுமல்ல, சாத்தானையும் அவனது தூதர்களையும்கூட நியாந்தீர்ப்பார்கள். ‘வேததூதர்களையும் நியாயந்தீர்ப்போமென்று அறியீர்களா?’. 1 கொ 6:3. யூதாவும், ‘தங்களுடைய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும் மகாநாளின் நியாயத்தீர்ப்புகென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்த காரத்தில் அடைத்து வைத்திருக்கிறார்’ என்று கூறுகிறான். யூதா 6”.

கலந்துரையாடக் கேள்விகள்

  1. துன்மார்க்கருடைய நியாயவிசாரிப்பில் பரிசுத்தவான்களும் பங்கேற்பார்களாம். 1 கொரி 6:3; யூதா தேவன் பாவத்தையும் தீமையையும் அணுகிய விதத்தில் நல்லவராகவும் நீதியுள்ளவராகவும் நடந்துகொண்டதுபற்றிச் சொல்வது என்ன?
  2. பரலோகத்திலுள்ள தேவனுடைய புத்தகங்கள்பற்றி யாத் 32:32; சங் 56:8; 69:28; 139:16; ஏசா 4:3 தானி 12:1; மல் 3:16; லூக் 10:20; வெளி 13:8; 17:8 என்ன சொல்கின்றன. இந்தப் புத்தகங்களில் என்னென்ன உள்ளன? உதாரணமாக, நம் கண்ணீர்களையும் தேவன் எழுதி வைத்திருக்கிறாராம். சங் 56:8. அது ஏன் முக்கியமானது? தேவனுக்கு எல்லாம் தெரியும் என்றால், அந்தப் பதிவுகளின் நோக்கம் என்ன?
  3. தானி 7இல் உள்ள வாக்குறுதியைச் சுட்டிக்காட்டி எபிரெயர் நிருபம் முடிகிறது. அதிலுள்ள முக்கியத்துவம் என்ன? இவ்வாறு சம்பந்தப்படுத்திச் சொல்லப்படும் செய்திகள், பரலோகத்தில் இயேசு செய்கிற ஊழியத்தைப் புரிந்துகொள்ள எவ்வாறு உதவுகின்றன? பூலோகத்தில் உள்ளவைகள், விழுந்துபோனவைகளின் முடிவுபற்றி தானி 7 சொல்வது என்ன?