பாடம் 11
மார்ச் 5-11
விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவரும் இயேசுவே

ஓய்வுநாள் பிற்பகல்
இவ்வார ஆராய்ச்சிக்கு: எபி 10:35-39; ரோமர் 1:17; எபி 11; யோசுவா 2:9-11; எபி 12:1-3.
மனன வசனம்: ‘விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஒட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்; அவர் தமக்கு முன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்’ எபி 12:2
எபிரெயர் நிருபத்தில் நம்மை அதிகம் கவருகிற அதிகாரங்கள் 11,12. அவை கிறிஸ்தவ வாழ்வை ஒரு பந்தயத்திற்கு ஒப்பிடுகின்றன. அதில் அனைவரும் பங்குபெற்றிருக்கிறோம்; கடைசிமட்டும் உண்மையாக இருப்பவர்கள் பரிசைப் பெறு வார்கள். மேலும் மீட்பின் சம்பவத்தையும் அந்தப் பகுதி ஒரு பந்தயத்திற்கு ஒப்பிடுகின்றது. முற்கால விசுவாசிகள் அதில் உண்மையோடு ஓடினார்கள்; உபத்திரவங்களை அனுபவித்தார்கள்; அதற்கான பலனை இன்னும் பெறாமல் இருந்தார்கள்.
அதனால்தான் அந்தக் கதை அவர்களோடு முடியாமல், நம் காலம்வரை தொடர்கிறது. நம்மோடு முடியப்போகிறது. கடைசிப் பகுதி ஓட்டத்தில் பங்குபெற்றிருக்கிறோம்; ஓட்டத்தை முடிக்கும்போது, இயேசுவோடு தேவனுடையவலது பாரிசத்தில் வீற்றிருப்போம். அவரே நமக்கு ஊக்கமளிக்கிறார்; ஓட்டத்தை முன்மாதிரியாக ஓடிக்காண்பித்திருக்கிறார். அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும் என்பதற்கு அவரே மெய்யான சாட்சியாக இருக்கிறார். அதற்கு நமக்கு வழியை உண்டாக்குகிற முன்னோடியாக இருக்கிறார். எபி 6:19, 20; 10:19-23.
தேவனுடைய வாக்குறுதிகளின் நிறைவேறுதலை இன்னும் காணாவிட்டாலும்கூட, அவற்றை நம்புவதே விசுவாசம். எபி 11. விசுவாசம் என்றால் என்ன, நம்முற்பிதாக்களின் முன்மாதிரியிலிருந்து, குறிப்பாக ‘நம் விசுவாசத்தைத்துவக் குகிறவரும், முடிக்கிறவருமான’ இயேசுவின் முன்மாதிரியிலிருந்து எவ்வாறு விசுவாசத்தைப் பெறலாம் என்று இந்தப் பாடத்தில் ஆராய்வோம். எபி 12:2.
- மார்ச் 12 வகுப்புக்காகப் படிக்கவேண்டிய பாடம்
ஞாயிற்றுக்கிழமை
மார்ச் 6
விசுவாசத்தினால் நீதிமாள் பிழைப்பான்
எபி 10:35-39இல் தேவன் நமக்குச் சொல்லும் செய்தி என்ன?
முடிவுகாலத்தில் தேவபிள்ளைகளில் காணப்படும் ஒரு குணம் பொறுமை. இல்லையேல், அவர்கள் வாக்குறுதிகளைப் பெற முடியாது. வெளி 13:10; 14:12. விசுவாசத்தை ‘உறுதியாய்ப் பற்றிக்கொண்டால்’ மட்டுமே பொறுமைகாக்க முடியும். எபி 10:23; 4:14. வனாந்தர தலைமுறையினர் விசுவாசமின்றி நடந்ததால், வாக்குறுதியைப் பெறமுடியவில்லை. எபி 3:19. வாக்குறுதிகள் நிறைவேறப்போகிற புள்ளியில் விசுவாசிகள் இருப்பதாகவும், வாக்குறுதியைப் பெற விசுவாசத்தோடு வாழவேண்டுமென்றும் எபிரெயர் சொல்கிறது. எபி 9:28; 10:25, 36-38; எபி 10:39.
ஆபகூக் 2:2-4 ஐ மேற்கோள் காட்டி, விசுவாசம்குறித்து பவுல் விளக்குகிறான். நீதிமான்களை ஒடுக்குகிற ஏமாற்றுக்காரரை தேவன் ஏன் பொறுத்துக் கொள்கிறாரென தேவனிடம் ஆபகூக் கேட்டிருந்தான். ஆபகூக் 1:12-17. தீர்க்கதரிசியும் மக்களும் உபத்திரவத்தில் இருந்தார்கள்; தங்கள் சார்பாக தேவன் செயல்படவிரும்பினார்கள். ஆனால் தம் வாக்குறுதி நிறைவேற ஒரு காலம் குறிக்கப்பட்டிருப்பதாகவும், அதுவரைக்கும் அவர்கள் காத்திருக்க வேண்டும் என்றும் தேவன் சொன் னார். ஆப 2:2-4. ஆபகூக்கும் மக்களும் நம்மைப்போன்றே வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டு, அது நிறைவேறவிருந்த இடைபட்ட காலத்தில் வாழ்ந்தார்கள். ‘வருகிறவர் இன்னுங் கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம் பண்ணார்’ என்பதே எபிரெயரில் தேவன் சொல்லும் செய்தி. எபி 10:37; ஆப 2:3.
அது இயேசுவைப் பற்றிய செய்தி. அவரே நீதியானவர்; விசுவாசத்தின் ஆதா ரம்; தேவனைப் பிரியப்படுத்துகிறவர்; ஜீவனைக் கொடுக்கிறவர். எபி 10:5-10.
அப்படியானால் அவர் ஏன் ‘தாமதிக்க வேண்டும்’? அவர் தாமதிப்பதில்லை நமக்காக மரிக்கும்படி அவர் ஏற்கனவே வந்தார். எபி 9:15-26. குறித்த காலத்தில் நிச்சயமாகவே அவர் மீண்டும் வருவார். எபி 9:27, 28; 10:25.
‘விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்’. எபி 10:38. ரோமர் 1:17; கலா 3:11. குறிப்பாக ரோமர் 1:16,17 தெளிவான புரிதலைக் கொடுக்கிறது. அதாவது, விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி ‘விசுவாசத்திற்கென்று வெளிப்படுத்தப்படுகிறது’. பவுலின் கருத்து என்னவென்றால், முதலாவது தேவன் தம் வாக்குறுதி களில் உண்மையுள்ளவராக இருக்கிறார்; அவருடைய உண்மைதான் நம்மில் விசுவாசத்தை அல்லது உண்மைதன்மையை உருவாக்குகிறது.
தேவன் தம் வாக்குறுதிகளில் உண்மையுள்ளவராக இருப்பதால், தேவனு டைய உண்மைதன்மையைக் கண்டு, தேவபிள்ளைகள் உண்மையுள்ளவர்களாக இருப்பார்கள். 2தீமோ 2:13.
தேவனுடைய உண்மைதன்மையிலிருந்துதான் நம் விசுவாசம் உருவாகிறது, நிலைத்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது ஏன் முக்கியம்? அவர் நமக்கும், நமக்குக் கொடுத்துள்ள வாக்குறுதி களுக்கும் உண்மையுள்ளவராக இருந்ததை அதிகம் நம்புவதற்கு நாம் என்ன செய்யலாம்?
திங்கட்கிழமை
மார்ச் 7
விசுவாசத்தினால் ஆபிரகாம்
‘விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது’ என்று எபி 11:1 சொல்கிறது. பிறகு இஸ்ரவேல் வரலாற்றில் விசுவாசத்திற்கு முன்னுதாரணமாக வாழ்ந்து, தங்கள் செயல்களில் விசுவாசத்தை வெளிப்படுத்தின உண்மையுள்ள மக்களைப் பட்டியலிடுகிறது.
எபி 11:1-19இன் விசுவாச ‘ஜாம்பாவான்கள்’ விசுவாசத்திற்கு முன்னுதாரணமாகச் செய்தது என்ன? காணப்படாதவைகளின் நிச்சயத்தோடு எவ்வாறு நடந்தார்கள்?
இந்த அதிகாரத்தில் வரும் மிகமுக்கிய நபர் ஆபிரகாம், ஆபிரகாம் கடைசியாக விசுவாசத்தோடு நடந்துகொண்ட செயல், விசுவாசத்தின் மெய்தன்மைபற்றிய படிப்பினையாக உள்ளது.
ஈசாக்கைப் பலியிடும்படி ஆபிரகாமிடம் தேவன் சொன்னது சற்று முரண்போலத் தெரியலாம். எபி 11:17,18. ஆபிரகாமுக்கு ஈசாக்குமட்டுமே பிள்ளை இல்லை.ஆபிரகாமுக்கு முதலில் பிறந்தவன் இஸ்மவேல். ஆனால் சாராள் சொன்னதைக் கேட்கும்படியும், இஸ்மவேலையும் அவன் தாயையும் துரத்தி விடும்படியும் ஆபிரகாமிடம் தேவன் சொன்னார். தாம் அவர்களைப் பார்த்துக்கொள்வதாகவும், ஈசாக்கினிடத்தில் ஆபிரகாமின் சந்ததி விளங்குமென்றும் கூறினார். ஆதி 21:12,13.ஆனால் அடுத்த அதிகாரத்தில், ஈசாக்கை சர்வாங்க தகனபலியாகச் செலுத்தும்படி ஆபிரகாமிடம் தேவன் சொல்கிறார். ஆதி 12-21இல் தேவன் கொடுக்கிற வாக்குறுதிகளுக்கு முரணாக ஆதி 22இல் அக்கட்டளையைக் கொடுத்தார்.
அந்த இக்கட்டான நிலைக்கு ஆபிரகாம் அருமையான ஒரு தீர்வைக் கண்டதாக எபிரெயர் சொல்கிறது. அதாவது, ஈசாக்கை தான் பலியிட்டாலும் தேவன் அவனை எழுப்படி ஆபிரகாம் நம்பினான். அதற்கு முன் அப்படி யாரையும் அவர் எழுப்பினதில்லை என்பதுதான் ஆச்சரியம்! தேவனோடு சமீபத்தில் ஏற்பட்டிருந்த அனுபவம்தான் அவ்வாறு தீர்மானிக்கச் செய்திருக்க வேண்டும். ஆபிரகாம் ‘சரீரஞ்செத்தவனாக’ இருந்தான். எபி 11:12. தேவ வல்லமையால் ஈசாக்கு கருவில் உருவானான். ஆபிரகாம் ‘சரீரஞ்செத்தவனாகவும்’, சாராள் பிள்ளையற்றவளாகவும் இருந்தாலும், ‘தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான்’. தேவன் ‘மரித்தோரை உயிர்ப்பித்து, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப் போல் அழைக்கிறவர்’ என்று நம்பினான். ரோமர் 4:17-20. எனவே ஒருவிதத்தில், செத்த நிலையிலிருந்துதான் ஈசாக்கை தேவன் எழுப்பிருந்தார். எனவே, மீண்டும் அதை அவர் செய்ய முடியும் என்று ஆபிரகாம் நினைத்திருக்கலாம். கடந்த காலத்தில் தேவன் தன்னை வழிநடத்தியதை வைத்து, எதிர்காலத்தில் அவர் என்ன செய்ய முடியும் என்பதை ஆபிரகாம் கண்டான்.
கடந்தகாலத்தில் தேவன் நம்மை வழிநடத்தியுள்ள விதத்தைத் தியானிப்பது, எவ்வாறு இப்போது நாம் விசுவாசத்தோடும் நம்பிக்கையோடும் நடந்துகொள்ள உதவியாக இருக்கும்?
செவ்வாய்
மார்ச் 8
மோசே: விசுவாசத்தால் அதரிசனமானவரைத் தரிசித்தல்
விசுவாசப்பட்டியலின் விசுவாச ஜாம்பாவான்களின் சிறப்பு என்ன? எபி 11:20-28. எவ்வாறு காணப்படாதவைகளை நம்பி, நடந்தார்கள்?
இந்த அதிகாரத்தில், விசுவாசத்திற்கு இரண்டாவது பெரிய உதாரணம் மோசே அவனுடைய வாழ்க்கையில் ராஜாவுக்கு எதிரான இரண்டு செயல்கள் குறிப்பிடத்தக்கவை. அவன் பிறந்தபோது, அவன் பெற்றோர் அவனை மறைத்து வைத்தார் கள். ஏனென்றால் அவர்கள், ‘ராஜாவினுடைய கட்டளைக்குப் பயப்படவில்லை’. எபி 11:23. மோசே, ‘ராஜாவின் கோபத்துக்குப் பயப்படாமல்’ எகிப்தைவிட்டுப் புறப்பட்டான். எபி 11:27. ஆனாலும் அவன் தன்னை ‘பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்ததுதான்’ குறிப்பிடத் தக்க செயல். எபி 11:24. மோசேயைத் தத்தெடுத்த தாய், ‘பார்வோனுடைய குமாரத்தி’. எனவே அடுத்த பார்வோனாகிற வாய்ப்பு மோசேக்கு இருந்தது. ஆனாலும் ஒரு பெரியவல்லரசுக்கு மன்னனாகிற வாய்ப்பைப் புறந்தள்ளினான். தேவன் விடுவிக்க இருந்த அடிமைகளான அகதிகளுக்குத் தலைவனாவதைத் தெரிந்துகொண்டான்.
எபி 11:24-27; 10:32-35 ஆகிய வசனங்களை ஒப்பிடுங்கள். மோசேயின் அனுப வத்திற்கும், எபிரெய நிருபத்தை பவுல் எழுதின விசுவாசிகளுடைய அனுபவத்திற் கும் இருந்த ஒற்றுமைகள் என்ன?
மோசேயின் மேன்மை என்னவென்றால், எகிப்தின் ராஜாவாகிற வாக்குறுதிகளையும் தாண்டி, காணப்படாதவைகளை, அதாவது தேவனுடைய வாக்குறுதிகளைப் பார்த்ததுதான். மோசே எகிப்தின் ஐசுவரியங்களில் கவனம் செலுத்தாமல், இனிவரும் ‘பலன்மேல்’ நோக்கமாக இருந்தான். அதே பலன்பற்றி எபி 10:35 சொல்லுகிறது. தம்மை நம்புகிற அனைவருக்கும் அந்தப் பலனைக் கொடுப்பதாக தேவன் வாக்குரைத்திருக்கிறார்.
மோசேயின் தீர்மானம்பற்றி பவுல் சொன்ன வார்த்தைகள், அந்த விசுவாசிகளின் இருதயங்களில் பலத்ததாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். கிறிஸ்துவிலான விசுவாசத்தின் நிமித்தம் அவர்கள் நிந்தைகளுக்கும் கேலிப்பேச்சுக்கும் ஆளானார்கள். உபத்திரவமடைந்தார்கள்; தங்கள் ஆஸ்திகளைக் கொள்ளையிடக் கொடுத்தார்கள். எபி 10:32-34. சிலர் சிறையில் அடைபட்டார்கள். எபி 13:3. அதே போலத்தான் மோசேயும் தேவஜனங்களுடன் சேர்ந்து பாடுபடத் தெரிந்துகொண் டான்; கிறிஸ்துவுக்காக நிந்தைகளை அனுபவிப்பதற்காக எகிப்தின் ஐசுவரியங்களைப் புறந்தள்ளினான்; ஏனென்றால் எகிப்தின் ஐசுவரியவங்களைவிடகிறிஸ்துவிடம் மிகுந்த பலன் உண்டு என்பதை நம்பினான்.
உங்கள் விசுவாசத்தின்நிமித்தம் நீங்கள் சந்தித்த சில போராட்டங்கள் யாவை? அதற்காக நீங்கள் எதை விடவேண்டியதிருந்தது? அதற்கான பலனை இப்போது காணமுடியாவிட்டாலும், எவ்வாறு அது தகுதியானதாக இருக்கும்?
புதன்
மார்ச் 9
விசுவாசத்தினால் ராகாபும் மற்றவர்களும்
வேதாகமக் கதாபாத்திரங்களுடன் அஞ்ஞான தேசத்து விபசாரப் பெண்ணான ராகாபையும் பவுல் சொல்வதன் காரணம் என்ன? எபி 11:31; யோசுவா 2:9-11.
எபிரெயர் 11இன் பட்டியலில், ராகாபின் பெயரை யாரும் எதிர் பார்க்க வாய்ப்பில்லை. அந்தப் பட்டியலில் இரண்டு பெண்களின் பெயர்கள் வருகின்றன; அவற்றில் ராகாபும் ஒருத்தி. பத்தாவதாகச் சொல்லப்படுகிறாள். நீதிமான்களாகிய இஸ்ரவேலின் முற்பிதாக்கள், கோத்திரப்பிதாக்களின் பெயர்களைத் தொடர்ந்து ராகாபின் பெயர் வருகிறது. அவள்புறஜாதி, விபசாரப் பெண்.
அவள் அந்த அதிகாரத்தின் கருப்பொருளாக, உச்சக்கட்டமாக வருவது ஆச்சரியமானது. ஒரு குறிப்பிட்ட ஒழுங்குடன் பட்டியல் அமைந்துள்ளது. ஒவ்வொருவரையும்பற்றி ‘விசுவாசத்தினால்’ என்று பவுல் ஆரம்பிக்கிறான். ‘விசுவாசத்தினால் இன்னார் இதைச் செய்தார்’ அல்லது’ விசுவாசத்தினால் இன்னாருக்கு இவ்வாறு நடந்தது’ என்கிற பாணியில் சொல்கிறான். அடுத்தடுத்து அவ்வாறு சொல்கிற விதம் நம் எதிர்பார்ப்பை எகிறச்செய்கிறது; தொடர்ந்து, ‘விசுவாசத் தினாலே யோசுவா வாக்குத்தத்த தேசத்திற்குள் மக்களை வழிநடத்தினான்’ என்று சொல்லப்போகிறானென எதிர்பார்க்கலாம்.
ஆனால், அப்படி இல்லை. மாறாக, யோசுவாவின் பெயரை விட்டுவிட்டு, அந்த விபசாரப் பெண்ணின் பெயர் வருகிறது. ஏற்கனவே சொல்லிவந்த பாணியை ராகாபுடன் நிறுத்திவிட்டு,’ பின்னும் நான் என்ன சொல்லுவேன்?’ என்கிறான். எபி 11:32. தொடர்ந்து,அவசரஅவசரமாக சில பெயர்களையும் நிகழ்ச்சிகளையும் பட்டியலிட்டு, அதிகம் விளக்கமளிக்காமல் செல்கிறான்.
ராகாபின் விசுவாசச் செயல் என்ன? அவள் காணாத போதிலும், தான் கேட்ட வற்றை நம்பினாள்; கீழ்ப்படிந்தாள். அவள் எகிப்தின் வாதைகளையோ, செங்கடல் நிகழ்வையோ, கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்பட்டு வந்ததையோ, வானத்திலிருந்து மன்னா பொழிந்ததையோ காணவில்லை; ஆனாலும் நம்பினாள். எபிரெயர் நிருபத்தை பவுல் எழுதின விசுவாசிகளுக்கும், ஏன் நமக்கும் அவள் நல்ல எடுத்துக்காட்டு. ஏனென்றால், இயேசு பிரசங்கம்செய்ததையோ, அற்புதம் செய்ததையோ அவர்களும் காணவில்லை, நாமும் காணவில்லை.
‘எரிகோவின் மதில் மேலிருந்த வீட்டில் வசித்த விபசாரப் பெண் ராகாப். அந்நகரத்தின் அரண்களை வேவுபார்க்க அனுப்பின இரண்டு ஒற்றர்களை ஒளித்து வைத்தாள். அவர்களிடம் அன்பாக நடந்துகொண்டதாலும், தேவனைநம்புவதாகச் சொன்னதாலும், எரிகோவைத் தாக்கும்போது, ராகாபையும் அவள்குடும்பத் தையும் கொல்லாமல் விடுவதாக அந்த ஒற்றர்கள் வாக்குக்கொடுத்தார்கள்’.1
பவுல் தொடர்ந்து, பாடுகளை அனுபவித்த அநேகரைப் பற்றிச் சொல்கிறான். எபி 11:35-38. ‘விடுதலைபெறச் சம்மதியாமல்’ என்றால், விடுதலைபெற வாய்ப்பிருந்தும் அதைத் தெரிந்துகொள்ளாததைச் சுட்டிக்காட்டுகிறது. எபி 11:35. ஏனென்றால், தேவனளிக்கும் பலன்மேலேயே நோக்கமாக இருந்தார்கள்.
ஆறு நாள் சிருஷ்டிப்பு, யாத்திராகம அனுபவம், கிறிஸ்துவின் சிலுவை அனுபவம் போன்ற எதையும் நாம் கண்டதில்லை; ஆனாலும் அவர்களைப் போல நாமும் விசுவாசிப்பதற்கு ஏன் பல நல்ல காரணங்கள் உள்ளன?
வியாழன்
மார்ச் 10
விசுவாசத்தைத் துவக்குகிறவர், முடிக்கிறவர்
நாம் என்ன செய்யவேண்டுமென எபி 12:1-3 சொல்கிறது?
விசுவாசத்திற்கான விளக்கத்தை எபி 12 இல் இயேசுவோடு பவுல் நிறைவு செய்கிறான். ‘வருகிறவரும்’, ‘தாமதம் பண்ணாதவருமாகிய’ இயேசுவை வைத்து நிருபத்தைத் துவங்கினான். எபி 10:37 விசுவாசத்தை ‘முடிப்பவராகிய’ இயேசு வோடு நிருபத்தை நிறைவுசெய்கிறான். எபி 12:2. இயேசுவே ‘விசுவாசத்தைத்துவக் குகிறவர், முடிக்கிறவர்’. அவரே விசுவாசத்தைச் சாத்தியமாக்குகிறார்; விசுவாசத்தோடு வாழ்வதற்கு மிகச்சிறந்த முன்மாதிரியாக இருக்கிறார். இயேசுவின் வாழ்க்கையில்தாம் விசுவாசத்தின் மிகச்சிறந்த வெளிப்பாட்டைக் காணலாம்.
இயேசுவை நம் விசுவாசத்தின் ‘தலைவர்’ எனலாம். எபி 12:2 (எளிய மொழியாக்கம்). அல்லது, விசுவாசத்தைத் துவக்குகிற முன்னோடி எனலாம்.
முதலாவது, அவரே விசுவாச ஓட்டத்தை முற்றிலும் ஓடி முடித்திருக்கிறார். முந்தின அதிகாரத்தில் சொல்லப்படும் நபர்கள் தங்கள் இலக்கை அடைந்திருக்கவில்லை. எபி 11:39, 40. ஆனால் இயேசு, பரலோகத்தில் தேவனுடைய இளைப்பாறுதலில் பிரவேசித்து, பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். நாமும் மற்றவர்களோடு சேர்ந்து, பரலோகத்தில் இயேசுவோடு அரசாளுவோம். வெளி 20:4.
இரண்டாவது, இயேசுவின் பூரண வாழ்க்கைதான் மற்றவர்கள் அந்த ஓட்டத்தில் பங்கேற்பதைச் சாத்தியமாக்கியது. எபி 10:5-14. இயேசு வந்திருக்காவிட்டால், மற்ற எவரும் ஓடுகிற ஓட்டம் பயனற்றதாகியிருக்கும்.
மூன்றாவது, நாம் விசுவாசிப்பதற்கு காரணரே இயேசுதாம். தேவனோடு ஒன்றாக இருந்தவர், தேவனுடைய உண்மைத்தன்மையை நமக்கு வெளிப்படுத்தினார். நம்மை இரட்சிப்பதிலிருந்து தேவன் பின்வாங்கவே இல்லை; அதனால்தான் நாமும் பின்வாங்காமல் இருந்தால், இறுதியில் பிரதிபலனைப் பெறுவோம். இயேசு பொறுமையோடு ஓடினார்; நாம் உண்மையின்றி நடந்தபோதிலும், அவர் கடைசி மட்டும் உண்மையுள்ளவராக இருந்தார். 2தீமோ 2:13.
இறுதியாக, இயேசுவே விசுவாசத்தை ‘முடிக்கிறவர்’ ஏனென்றால், விசுவாச ஓட்டத்தை எவ்வாறு ஓட வேண்டும் என்பதை மிகச்சிறப்பாக எடுத்துக்காட்டினார். அவர் எவ்வாறு ஓடினார்? நமக்காக அனைத்தையும் துறந்து, பாரமான அனைத்தையும் தள்ளிவிட்டார். பிலி 2:5-8. அவர் ஒருபோதும் பாவம் செய்யவே இல்லை. தம் கிருபையால் மனுக்குலம் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதே அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷமாகும்; அந்தப் பலன்மேலேயே அவர் நோக்கமாக இருந்தார். அதனால் தவறானப் புரிதல்களையும், வன்செயல்களையும் சகித்துக்கொண்டார். சிலுவையின் அவமானத்தை பொறுத்துக்கொண்டார். எபி 12:2, 3.
இப்போது நாம் ஓடவேண்டிய தருணம். இயேசு பெற்ற வெற்றியை நம்முடைய பெலத்தால் நாம் பெறவே முடியாது. அவருடைய மிகச்சிறந்த முன்மாதிரியைப் பெற்றிருக்கிறோம். எனவே, அவர் மேலுள்ள விசுவாசத்தால், நமக்குமுன் இருந்த விசுவாசிகளைப் போல், அவரையே நோக்கிப் பார்த்தவர்களாக, பந்தயப்பொருள்குறித்து அவர் கொடுத்துள்ள வாக்குறுதிகளை நம்பினவர்களாக தொடர்ந்து ஓட வேண்டும்.
வெள்ளி
மார்ச் 11
மேலும் படிக்க:
‘விசுவாசத்தால் நீங்கள் கிறிஸ்துவின் சொந்தமானீர்கள். இப்போதும் அதே விசுவாசத்தால் அவருக்குள் வளர வேண்டும். உங்கள் மனம், சித்தம், சேவை அனைத்தையும் அவரிடம் கொடுக்க வேண்டும்; அவருடைய சகல நிபந்தனைகளுக்கும் கீழ்ப்படிய, உங்களையே அர்ப்பணிக்க வேண்டும். கிறிஸ்து உங்கள் இருதயத்தில் வாசம்செய்து, உங்கள் பெலனாகவும் நீதியாகவும் துணையாகவும் இருந்து, கீழ்ப்படிய வல்லமை தருவார். இந்த ஆசீர்வாதங்கள் முழுவதும் கிறிஸ்துவில் இருப்பதால், மொத்தமாக அவரைப் பிடித்துக்கொள்ள வேண்டும்’.
‘நாம் விசுவாசிப்பதற்குப் போதுமான ஆதாரங்களைக் கொடுக்காமல், தேவன் ஒருபோதும் விசுவாசிக்கச் சொல்வதில்லை. தேவன் இருப்பதையும், அவர் குணத்தையும், அவர் வார்த்தை உண்மை என்பதையும் நம் பகுத்தறிவுக்கு ஏற்றவாறு தேவன் தம் சாட்சிகளால் நிலைநாட்டுகிறார். ஏராளமான சாட்சிகள் இருந்தாலும், சந்தேகம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை தேவன் நீக்கிவிடவில்லை. கண்ணால் காண்பதில் அல்ல, சாட்சிகள் மேல்தான் நம் விசுவாசம் நிலைத்திருக்க வேண்டும். சந்தேகப்பட விரும்புகிறவர்களுக்குத் தருணம் கிடைக்கும். அதேவேளையில், உண்மையாகவே சத்தியத்தை அறிய விரும்புகிறவர் களுக்கு, தங்கள் விசுவாசத்தை நிலைநிறுத்துவதற்கான ஆதாரங்கள் ஏராளம் கிடைக்கும்.
‘எல்லையில்லாப் பரம்பொருளின் குணத்தையோ செயல்களையோ எல்லையுள்ள மனிதர்கள் முழுவதும் அறிந்துகொள்வது இயலாத காரியம். உயர்கல்வி கற்றவர்களுக்கும் அறிவுக்கூர்மை பெற்றவர்களுக்கும்கூட பரம்பொருள் பெரும் மறைபொருளாகவே இருந்து வருகிறார். தேவனுடைய அந்தரங்க ஞானத்தை நீர் ஆராய்ந்து சர்வவல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியக்கூடுமோ? அது வானபரியந்தம் உயர்ந்தது; உம்மால் என்ன ஆகும்? அது பாதாளத்திலும் ஆழமானது, நீர் அறியக்கூடியது என்ன? யோபு 11:7, 8.’
கலந்துரையாடக் கேள்விகள்
- முற்கால கிறிஸ்தவ அறிஞர் ஒருவர், ‘கிரிடோ அட் இன்டெல்லிகம்’ என்று எழுதி னார். அந்த லத்தீன் வாசகத்திற்கு, ‘நான் புரிந்துகொள்வதற்காக நம்புகிறேன்’ என்று அர்த்தம். ‘விசுவாசத்தினாலே நாம் அறிந்திருக்கிறோம்’ என்று எபி 11:3 சொல்கிறது. விசுவாசத்திற்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன? ஏன் அறிவுக்கு முன்னானதாக விசுவாசம் இருக்க வேண்டும்? சிலசமயங்களில் நாம் அறியாத ஒன்றை முதலில் விசு வாசத்தோடு அணுகவேண்டியதிருக்கலாம்; அதன்பிறகு அதுகுறித்த அதிக புரிதல் கிடைக்கலாம். அதுபற்றி விளக்குங்கள்.
- பிஸ்டிஸ் எனும் கிரேக்க வார்த்தை ‘விசுவாசம்’, ‘உண்மைதன்மை’ என இரண்டையும் குறிக்கிறது. ‘விசுவாசத்தோடு’ வாழ்வதுபற்றிப் புரிந்துகொள்ள ஏன் இந்த இரண்டு அர்த்தங்களும் முக்கியமானவை? எபிரெயர் 11 இன் விகவாச ஜாம்பாவான்கள் தங்கள் விசுவாசம் உண்மை என்பதை எவ்வாறு தங்கள் உண்மைதன்மைமூலம் காட்டினார்கள்? அதேபோல நாமும் எவ்வாறு வெளிப்படுத்தலாம்?
- விசுவாசம் தேவனுடைய ஒரு வரம்தான். ரோமர் 12:3. ஆனாலும் அந்த வரத்தைப் பெறுவதிலும், பராமரிப்பதிலும் நம்முடைய பங்கு என்ன?