
பாடம் 7
பெப்ரவரி 5-11
- ஓய்வுநாள் மாலை
அத்தும நங்கூரம் இயேசு
இவ்வார ஆராய்ச்சிக்கு: எபி 6:4-6; மத் 16:24; ரோமர் 6:6; எபி 10:26-29; 6:9-13; 6:17-20.
மனன வசணம்:’அந்த நம்பிக்கை நமக்கு நிலையும் உறுதியும் திரைக்குள்ளாகப் போகிறதுமான ஆத்தும நங்கூரமாயிருக்கிறது. நமக்கு முன்னோடினவராகிய இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நித்தியபிரதான ஆசாரியராய் நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார்‘. எபி 6:19,20.
நமக்காக இயேசு செய்துவரும் ஆசாரிய ஊழியம்பற்றிய இறையியல் விளக்கத்தை எபி 5:11-6:20 சொல்கிறது. கிறிஸ்துவைவிட்டுப் பின்வாங்குகிற ஆபத்துகுறித்து பவுல் கடுமையாக எச்சரிக்கிறான். சுயபரிதாப உணர்வாலும் விசுவாசமின்மையாலும் மக்கள் பின்வாங்கி கொண்டிருந்தார்கள்.
இக்கட்டான சூழ்நிலைகளைத் தாங்கமுடியாமல் ஆவிக்குரிய புலன்கள் மழுங்கியதோ, சுவிசேஷத்தை அறிந்து அனுபவிக்கிற வளர்ச்சி நின்றதோ என்று அப்போஸ்தலன் கவலையடைந்தான்.
சோதனைகளால் அதைரியமடைந்து, பின்வாங்குகிற கொடிய ஆபத்து நமக்கும் ஏற்படுவதில்லையா?
கடும் எச்சரிப்பை பாசமிக்க ஊக்கமான வார்த்தைகளோடு அப்போஸ்தலன் முடிக்கிறான். விசுவாசிகள்மேல் தனக்கு நம்பிக்கை இருப்பதாகச் சொல்கிறான்; தேவனுடைய மாறாத இரட்சண்ய வாக்குறுதி இயேசுவில் அடங்கியிருப்பதாக அவரை உயர்த்திப் பேசுகிறான். எபி 6:9-20. இவ்வாறு எச்சரிப்பதும், பிறகு ஊக்கப்படுத்துவதும் எபி 10:26-39 இலும் காணப்படுகிறது.
இந்தச் சுழற்சிபற்றிப் படிப்போம்; இயேசுவின் ஊக்கமான வார்த்தைகளை
ஆராய்வோம்.
2021, பெப்ரவரி 12 வகுப்புக்காகப் படிக்கவேண்டிய பாடம்
- ஞாயிற்றுக்கிழமை - பெப்ரவரி 6
தேவனுடைய நல்வார்த்தையை ருசித்தல்
விசுவாசிகள் கிறிஸ்துவுக்கு உண்மையுள்ளவர்களாக இருந்தபோது, அவருக்குள்
என்னவெல்லாம் பெற்றிருந்தார்கள்? எபி 6:4,5.
‘பிரகாசமாக்கப்பட்டார்கள்’ எபி 10:32. அதாவது, மனமாற்றத்தைப் பெற்றார்கள். அவர்கள் சாத்தானுடைய ‘அந்தகாரத்தைவிட்டு’ தேவனுடைய ‘ஒளியினிடத்திற்கு’ திரும்பினார்கள். அப் 26:17,18. அதாவது பாவம், அறியாமை ஆகியவற்றிலிருந்து விடுதலைபெற்றார்கள். எபே 5:11; 1தெச 5:4,5. பிரகாசமடையச் செய்பவர் தேவன்; அதை தம்முடைய ‘மகிமையின் பிரகாசமாகிய’ இயேசுவின்மூலம் நிறைவேற்றுகிறார். எபி 1:3.
‘பரம ஈவை ருசிபார்த்தார்கள்’; அல்லது, ‘பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள்’; இரண்டும் ஒன்றுதான். தேவனுடைய ‘ஈவு’ என்பது அவருடைய கிருபையை அல்லது பரிசுத்த ஆவியைச் சுட்டிக்காட்டுகிறது. ரோமர் 5:15. பரிசுத்த ஆவியானவர் மூலம்தான் தேவன் தம் கிருபையை வழங்குகிறார். அப் 2:38. பரிசுத்த ஆவியை ‘ருசித்தவர்கள்’ தேவனுடைய கிருபையை அனுபவித்தவர்கள். யோவான் 7:37-39; 1கொரி 12:13. அதனால் அவர் சித்தத்தைச் செய்வதற்கான வல்லமையையும் பெறுகிறார்கள். கலா 5:22,23.
‘தேவனுடைய நல்வார்த்தையை ருசித்தார்கள்’. அதாவது, சுவிசேஷத்தின் சத்தியத்தை தனிப்பட்ட விதத்தில் அனுபவித்தார்கள். எபி 6:5; 1பேதுரு 2:2,3. ‘இனிவரும் உலகத்தின் பெலன்கள்’ என்றால், விசுவாசிகளுக்காக தேவன் செய்யப்போகிற அற்புதங்களாகும். அதாவது, உயிர்த்தெழுதல், நம் சரீரங்கள் மறுரூபமாக்கப்படுதல், நித்திய வாழ்க்கை போன்றவை. யோவான் 5:28,29. ஆனால் விசுவாசிகள் அந்த அற்புதங்களை எல்லாம் இப்போதே ‘ருசிக்கத்’ தொடங்கலாம். ஆவிக்குரிய உயிர்த்தெழுதல், மனம் புதிதாக்கப்படுதல், கிறிஸ்துவில் நித்திய வாழ்க்கை போன்ற அற்புதங்களை அனுபவிக்கலாம். கொலோ 2:12,13; ரோமர் 12:2; யோவான் 5:24.
தேவனுடைய கிருபையையும் அவருடைய இரட்சிப்பையும் அனுபவித்த வனாந்தரத் தலைமுறையினரை மனதில் வைத்துதான் பவுல் பேசியிருக்க வேண்டும். வனாந்தரத் தலைமுறையினர் அக்கினி ஸ்தம்பத்தால் ‘பிரகாசிக்கப்பட்டார்கள்’. நெகே 9:12,19; சங் 105:39. பரலோக மன்னாவைப் புசித்தார்கள். யாத் 16:15. பரிசுத்த ஆவியைப் பெற்று மகிழ்ந்தார்கள். நெகே 9:20. தேவனுடைய ‘நல்வார்த்தைகளை’ருசித்தார்கள். யோசுவா 21:45. எகிப்திலிருந்து அவர்களை விடுவிக்க தேவன் செய்த ‘அற்புதங்களிலும் அடையாளங்களிலும்’ ‘இனி வரும் உலகத்தின் பெலன்களை’ ருசித்தார்கள். அப் 7:36. ஆனாலும் அவ்வளவு திரளான சாட்சிகளின் மத்தியிலும் அந்த வனாந்தரத் தலைமுறையினர் தேவனைவிட்டு விலகினார்கள். எண் 14:1-35. அதுபோல எபிரெய விசுவாசிகளும் தேவதயவின் ஆதாரங்களை எல்லாம் பெற்றிருந்தும் அதே தேவதுரோகச் செயலைச் செய்யக்கூடிய ஆபத்தில் இருந்ததை பவுல் குறிப்பிடுகிறான்.
எபிரெயரின் இந்த வசனங்களில் சொல்லப்படும் உண்மைகளை உங்கள் அனுபவத்தில் எவ்வாறெல்லாம் கண்டிருக்கிறீர்கள்? உதாரணமாக, பிரகாசிக்கப்படுவதை உங்கள் வாழ்க்கையில் எவ்வாறு அனுபவித்திருக்கிறீர்கள்?
- திங்கட்கிழமை - பெப்ரவரி 7
மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்
எபி 6:4-6; மத் 16:24; ரோமர் 6:6; கலா 2:20; 5:24; கலா 6:14 ஆகிய வசனங்களை ஒப்பிடுங்கள். கிறிஸ்துவை சிலுவையில் அறைவதின் அர்த்தம்பற்றி இந்த ஒப்பீடு காட்டுவது என்ன?
மூலமொழியான கிரேக்கத்தில் ‘கூடாதகாரியம்’ எனும் வார்த்தை வலியுறுத்திக் காட்டப்படுகிறது. ‘தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து’, ‘மறுதலித்துப் போனவர்களை’ தேவனால் புதுப்பிக்க இயலாது. எபி 6:6. கிறிஸ்துவைத் தவிர வேறு எந்த வழியிலும் இரட்சிப்பு இல்லை என்பதை பவுல் வலியுறுத்துகிறான். அப் 4:12. தேவன் ‘பொய்சொல்ல’ எவ்வளவுக்கு வாய்ப்பில்லையோ, அவ்வளவுக்கு வேறு வழியில்இரட்சிக்கப்படவும்வாய்ப்பில்லை. எபி 6:18. அதாவது, ‘விசுவாசமில்லாமல்’ தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம். எபி 11:6.
தேவகுமாரனை சிலுவையில் அறைவது என்பது ஓர் உருவகம்; இயேசுவுக்கும் விசுவாசிக்கும் இடையேயுள்ள தனிப்பட்ட உறவில் விரிசல் ஏற்படுவதைச் சுட்டிக்காட்டுகிறது.
தங்களுடைய சர்வாதிகாரத்திற்கும் ஆதிக்கத்திற்கும் அச்சுறுத்தலாக இருந்ததாலேயே மதத்தலைவர்கள் இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள். இயேசுவை ஒழித்துவிட்டால், ஆற்றல்மிக்க, ஆபத்துமிக்க ஓர் எதிரி அழிந்துபோவான் என்று நம்பினார்கள். இயேசுவைப்போல சுவிசேஷமும், தனிநபருடைய அதிகாரத்திற்கும் தீர்மானத்திற்கும் சவால் விடுகிறது. கிறிஸ்தவ வாழ்வின் சாராம்சமே சுயத்தை மறுத்து, சிலுவையைச் சுமப்பதுதான். மத் 16:24. அதாவது ‘உலகத்தையும்; ‘பழைய மனுஷனையும்’, ‘மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும்’ சிலுவையில் அறைய வேண்டும். கலா 6:14; ரோமர் 6:6; கலா 5:24. சுயத்திற்கு மரிப்பதே கிறிஸ்தவ வாழ்க்கையின் நோக்கம். அந்த மரணத்தை அனுபவிக்காவிட்டால், தேவன் கொடுக்க விரும்புகிற புதிய வாழ்க்கையைப் பெற முடியாது. ரோமர் 6:1-11.
இயேசுவா, சுயமா என்கிற போராட்டம் ஒரு மரணப்போராட்டம். ரோமர் 8:7,8; கலா 5:17. இது உடனடியாக வெற்றிகிடைக்கிற போராட்டம் அல்ல. ‘பழைய மனுஷனுக்கும்’ ‘சுயத்திற்கும்’ எதிரான போராட்டத்தில் அவ்வப்போது தோற்க நேரிடலாம்; அவ்வாறு தோற்கிறவர்கள் பற்றி இந்த வசனங்கள் பேசவில்லை. மாறாக மெய்யான இரட்சிப்பையும், அதன் பெலன்களையும் அனுபவித்தும், தான் விரும்புகிற வாழ்க்கைக்கு இயேசு தடையாக இருப்பாரோ என்று எண்ணி, அவரோடான உறவை முறிக்க முயல்வது பாவம்; அவரைபற்றிப் பேசுகிறது. எபி 6:4,5. அதாவது, ஒரு நபர் முற்றிலும் கிறிஸ்துவைவிட்டு விலகத் தீர்மானிக்காதவரையிலும் அவருக்கு நம்பிக்கை இருக்கிறது.
‘சுயத்திற்கு‘ மரித்து, ‘சிலுவையை‘ எடுத்து நடப்பதின் பொருள் என்ன? உங்கள் வாழ்க்கையில் கிறிஸ்துவின் ஆளுகைக்குள் விடமுடியாமல் தவிக்கிற விஷயங்கள் யாவை?
- செவ்வாய்க்கிழமை - பெப்ரவரி 8
பாவங்களுக்கான வேறொருபலி இல்லை
எபி 6:4-6இன் எச்சரிப்பும் எபி 10:26-29இன் எச்சரிப்பும் ஒன்று தான். இயேசுவின் பலியை ஏற்றுக்கொள்ள மறுக்கிறவர்களுக்கு பாவமன்னிப்புக்கான வழி இல்லை. ஏனென்றால், இயேசுவைத் தவிர பாவமன்னிப்பிற்கான வழியே இல்லை. எபி 10:1-14.
மன்னிப்புப் பெறமுடியாத பாவத்தை என்ன மூன்று வழிகளில் பவுல் விவரிக்கிறான்? எபி 10:26-29.
சத்தியத்தை அறிந்தபிறகு செய்கிற எந்தப் பாவத்திற்கும் நிவாரணம் இல்லையென பவுல் சொல்லவில்லை. இயேசுவை தேவன் நம் நீதிபரராக நியமித்திருக்கிறார். 1 யோவான் 2:1. அவர் மூலமாக நாம் பவமன்னிப்பைப் பெற்றிருக்கிறோம். 1யோவான் 1:9. தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதிக்கிற, உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணுகிற, கிருபையின் ஆவியை நிந்திக்கிற பாவம்தான் மன்னிப்புப் பெறமுடியாத பாவம். எபி 10:29.
‘தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதிப்பது’ என்றால், இயேசுவின் ஆளுகையைப் புறக்கணிப்பதாகும். எபி 10:29. ‘தேவ குமாரன்’ என்கிற பட்டம், இயேசுவை தேவன் தம் வலது பாரிசத்தில் வீற்றிருக்கச் செய்ததையும், அவருடைய எதிரிகளை அவருக்கு ‘பாதபடியாக்கிப்’ போடுவதாக வாக்குரைத்திருப்பதையும் ஞாபகப்படுத்துகிறது. எபி 1:13; 1:5-12,14. இயேசுவை காலின் கீழ் போட்டு மிதிப்பது என்றால், இயேசுவை ஒருவன் தன் எதிரியாகக் கருதி விலகிச்செல்வதாகும். எனவே எபிரெயர் 1:13இன்படி, இயேசுவைவிட்டு விலகினவன், இயேசுவை சிங்காசனத்திலிருந்து அகற்றி, அவனே அந்தச் சிங்காசனத்தில் ஏறி, அவரை பாதபடியாக்குகிறான். அதைத்தான் பரலோகத்தில் லூசிபர் செய்ய விரும்பினான் ஏசா 14:12-14. அதையே ‘கேட்டின்’ மகன், எதிர்காலத்தில் செய்ய முயலுவான். 2தெச 2:3,4. ‘உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணுதல்’ என்றால், இயேசுவின் பலியைப் புறக்கணிப்பதாகும். எபி 9:15-22. அதன்மூலம், இயேசுவின் இரத்தத்திற்குச் சுத்திகரிக்கும் வல்லமை இல்லையெனக் காட்டுவதாகும்.
‘கிருபையின் ஆவியை நிந்திப்பது’ உச்சக்கட்ட செயல். நிந்திப்பது என்பதற்கான கிரேக்க வார்த்தை எனிபிரிசாஸ். மிகுந்த ஆணவத்துடன் ‘அவமரியாதையாக’ அல்லது ‘துணிகரமாக’ நடப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. பரிசுத்த ஆவியானவரோ ‘கிருபையின் ஆவியானவர்’. எனவே இயேசுவைவிட்டு விலகினவன் தேவன் ஈவாகக் கொடுக்கும் கிருபையை நிந்திக்கிறான்.
இயேசுவைவிட்டு விலகுகிறவன் இயேசுவையும், அவருடைய பலியையும், பரிசுத்த ஆவியையும் புறக்கணிப்பதால், தேவனிடம் வரமுடியாத நிலைக்குச் செல்கிறான்.
- புதன்கிழமை - பெப்ரவரி 9
நன்மையானவைகள்
பவுல் கடுமையாக உள்ளன்புடன் எச்சரித்துவிட்டு, விசுவாசிகள் குமாரனை விட்டு இனி விலகமாட்டார்களென தான் நம்பிக்கையோடு இருப்பதாகச் சொல்கிறான். எபி 6:4-8. அவர்கள் தன் எச்சரிப்புகளை ஏற்றுக்கொண்டு, அதற்கேற்ற கனிகளைக் கொடுக்க வேண்டும். அவர்கள் தேவன் பண் படுத்தின ‘நிலம்’போல இருந்து, அவர் எதிர்பார்க்கிற கனிகளைக் கொடுக்க வேண்டும். அவர்கள் தேவனிடமிருந்து ஆசீர்வாதத்தை, அதாவது இரட்சிப்பைப் பெற வேண்டும். எபி 6:7,9. அதுவே அவனுடைய ஆசை.
அத்தகைய விசுவாசிகள் செய்த, தொடர்ந்து செய்கிற நற்காரியங்களைப் பட்டியலிடுங்கள். எபி 6:9-12. அவற்றின் அர்த்தம் என்ன?
தேவனுடைய ‘நாமத்திற்காக’ அன்புகாட்டினார்கள். அதாவது, பரிசுத்தவான்களுக்கு ஊழியம் செய்ததினால், தேவன்மேல்தானே அன்புகாட்டினார்கள். முன்பு, எப்போதோ செய்ததுடன் நிற்காமல், தொடர்ந்து அவ்வாறு செய்துவந்தார்கள். அவ்வப்போது செய்கிற செயல்கள் ஒருவரின் குணத்தை வெளிப்படுத்துவதில்லை. தேவன் மேலான அன்புக்கு பலத்த ஆதாரம், ‘பக்தியான’ செயல்களை அறிக்கையிடுவது அல்ல; மாறாக, சகமனிதர்கள்மேல், குறிப்பாக வசதிவாய்ப்பில்லாதவர்கள்மேல் அன்புகொண்டு, அவர்களுக்கு நன்மை செய்வதாகும். மத் 10:42; 25:31-46. அதனால்தான் பவுல், விசுவாசிகளிடம் நன்மைசெய்ய ‘மறவாதிருங்கள்’ என்று அறிவுறுத்துகிறான். எபி 13:2,16.
ஆனால் ‘ஆர்வக்குறைவும்’, ‘மந்தநிலையும்’ ஏற்பட்டுவிடக் கூடாதென எபி 6:12 எச்சரிக்கிறது. ஆவிக்குரிய முதிர்ச்சியடையாமல், வழிவிலகிச் செல்லும் ஆபத்தில் இருப்பவர்கள் இந்நிலைக்கு ஆளாகலாம். எபி 5:11; 6:12. விசுவாசம்பற்றி அறிவுப்பூர்வமாக அறிந்திருப்பதால் அதில் நிலைத்திருக்க முடியாது; மாறாக அன்பின் கிரியைகளில் அந்த விசுவாசம் வெளிப்பட வேண்டும். ரோமர் 13:8-10.
விசுவாசத்தாலும் பொறுமையாலும் வாக்குறுதிகளைச் சுதந்தரித்தவர்களைப் பின்பற்றுமாறு பவுல் அறிவுறுத்துகிறான். விசுவாசமும் முயற்சியும் இல்லாமல், வாக்குறுதியைச் சுதந்தரிக்கத் தவறின வனாந்தர தலைமுறையினரை அதற்கு எடுத்துக்காட்டாக சொல்கிறான். பிறகு ஆபிரகாமைச் சுட்டிக்காட்டி, அவன் ‘விசுவாசமாகவும் பொறுமையாகவும்’ இருந்து, வாக்குறுதியைப் பெற்றதாகச் சொல்கிறான். எபி 6:13-15. அவ்வாறு நல்ல முன்மாதிரிகளாக வாழ்ந்த விசுவாசிகளை எபிரெயர் 11இல் பட்டியலிடுகிறான். அவர்கள் எல்லாரிலும் விசுவாசத்திற்கும் பொறுமைக்கும் இயேசு மாபெரும் முன்மாதிரியென எபி 12இல் சொல்கிறான். முடிவுக்காலத்தில் பரிசுத்தவான்௧ளிடம் விசுவாசமும் பொறுமையும் கற்பனைகளைக் கைக்கொள்வதும் காணப்படும். எபி 12:1-4 வெளி 14:12.
சிலசமயம், நாம் நேசிக்கிற நபர்களை எச்சரித்துப் பேசவேண்டிய அவசியம் ஏற்படலாம். எச்சரிப்பது, ஊக்குவிப்பதுபற்றி அப்போஸ்தலனிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?
- வியாழக்கிழமை - பெப்ரவரி 10
ஆத்தும நங்கூரம் இயேசு
தேவதுரோகம் கூடாதென பவுல் எச்சரிக்கிறான்; அன்பையும் விசுவாசத்தையும் காட்டுமாறு ஊக்குவிக்கிறான்; முடிவாக, கிறிஸ்துவுக்குள்ளான நிச்சயம் பற்றி அருமையாக, அற்புதமாக விளக்குகிறான்.
தேவன் தம் வாக்குறுதிகளை நமக்கு எவ்வாறு உறுதிப்படுத்தியிருக்கிறார்? எபி 6:17-20.
தேவன் தம் வாக்குறுதிகளை பல விதங்களில் நமக்கு உறுதிப் படுத்தியிருக்கிறார். முதலாவது, ஓர் ஆணையினால் உறுதிப்படுத்தியிருக்கிறார். எபி 6:17. ஆபிரகாமுக்கும் தாவீதுக்கும் தேவன் கொடுத்த ஆணைகள்தாம், தேவதயவு இஸ்ரவேலருக்கு எப்போதும் உண்டு என்கிற நம்பிக்கையை உறுதிப்படுத்தியது. பொன் கன்றுகுட்டி சம்பவத்தில், இஸ்ரவேலர் தேவதுரோகம் செய்தார்கள். அதற்காக மோசே தேவனிடம் மன்னிப்புக் கேட்டுச்சென்றபோது, ஆபிராகமுக்கு தேவன் கொடுத்த ஆணையைக் குறிப்பிட்டான். யாத் 32:11-14; 22:16-18. தேவனுடைய ஆணை மாறாதது என்பதே அதற்கு காரணம். ரோமர் 9:4; 11:28,29.
அதுபோல சங்கீதக்காரன் இஸ்ரவேலுக்காக தேவனிடம் பரிந்து பேசியபோது, அவர் தாவீதுக்குக் கொடுத்த ஆணையைக் குறிப்பிட்டான்: ‘என் உடன்படிக்கையை மீறாமலும், என் உதடுகள் விளம்பினதை மாற்றாமலும் இருப்பேன். ஒருவிசை என் பரிசுத்தத்தின் பேரில் ஆணையிட்டேன், தாவீதுக்கு நான் பொய் சொல்லேன். அவன் சந்ததி என்றென்றைக்கும் இருக்கும்; அவன் சிங்காசனம் சூரியனைப் போல எனக்கு முன்பாக நிலைநிற்கும். சந்திரனைப் போல அது என்றென்றைக்கும் உறுதியாயும், ஆகாயமண்டலத்துச் சாட்சியைப் போல் உண்மையாயும் இருக்கும்’. சங் 89:34-37. இரண்டு ஆணைகளுமே இயேசுவில் நிறைவேறியதாக புதிய ஏற்பாடு சொல்கிறது. அதாவது, ஆபிரகாமின் சந்ததியான இயேசு, பரமேறிச்சென்று, தாவீதின் சிங்காசனத்தில் அமர்ந்தார். கலா 3:13-16; லூக்கா 1:31-33,54,55
இரண்டாவது, இயேசுவை தேவன் தம் வலது பாரிசத்தில் வீற்றிருக்கச் செய்து, நமக்கான தம் வாக்குறுதிகளை உறுதிப்படுத்தினார். விசுவாசிகளுக்கு அளித்த வாக்குறுதியை உறுதிப்படுத்துவதற்காகஇயேசு பரலோகம் சென்றார். இயேசு நமக்கு ‘முன்னோடியாகப்’ பரலோகம் சென்றார். எபி 6:20. எனவே, அவர் பரலோகம் சென்றது, தேவனுடைய இரட்சிப்பு நமக்கு நிச்சயம் என்பதை வெளிப்படுத்துகிறது. இயேசு ‘அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்ப்பதற்காக’, உபத்திரவமடைந்து ‘ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்த்தார்’. அதன்மூலம் தேவன் அவரை மகிமையினால் முடிசூட்டினார். எபி 2:9,10. பிதாவுக்கு முன் இயேசு இருக்கிறார் என்கிற நம்பிக்கையே ‘ஆத்தும நங்கூரமாயிருக்கிறது’; பிதாவின் சிங்காசனத்துடன் நங்கூரமிட்டுள்ளது. எபி 6:19. தேவன் நமக்குக் கொடுத்துள்ள வாக்குறுதி இயேசுவில் நிறை வேற்றும் வகையில் தேவனுடைய அரசாட்சி நடைபெறுகிறது. அதைவிட வேறு என்ன நிச்சயம் வேண்டும்?
தேவன் உங்களுக்கு ஓர் ஆணை கொடுத்துள்ளார் என்கிற உண்மை சொல்வது என்ன? நீங்கள் உங்களை அபாத்திரராக எண்ணும்போது, இரட்சிப்பின் நிச்சயத்தைப் பெறுவதற்கு அதுமட்டுமே ஏன் போதுமானது?
- வெள்ளிக்கிழமை - பெப்ரவரி 11
மேலும் படிக்க:
‘யுத்தத்திலேயே மிகப்பெரிய யுத்தம் சுயத்திற்கு எதிரானது. சுயத்தைச் சரணாகதியாக்கி, அனைத்தையும் தேவசித்தத்திற்கு அர்ப்பணிக்க பெரும் யுத்தமே தேவைப்படும்; ஆத்துமாவை தேவனுக்குக் கீழ்ப்படுத்தினால் மட்டுமே, அது பரிசுத்தத்தில் புதுப்பிக்கப்பட முடியும்’.1
‘இயேசுவைப் போல மாற யோவான் விரும்பினான்; மறுரூபமாக்கவல்ல கிறிஸ்துவினுடைய அன்பின் செல்வாக்கால் சாந்தமும் மனத்தாழ்மையும் உள்ளவனாக மாறினான். கிறிஸ்துவுக்குள் சுயம் மறைந்தது. தன் நண்பர்கள் அனைவரையும்விட, அற்புத ஜீவனின் வல்லமைக்கு யோவான் தன்னைச் சரணாகதியாக்கினான்.
‘கிறிஸ்துவின்மேலான மிகுந்த அன்பே, அவர் பக்கத்தில் எப்போதும் இருக்க யோவானில் ஆசையைத் தூண்டியது. இரட்சகர் பன்னிருவரையும் நேசித்தார்; ஆனால் யோவான்தான் அதை அதிகம் மனதார ஏற்றுக்கொண்டான். அவன் மற்றவர்களைவிட இளையவன்; சிறுபிள்ளை நம்புவதுபோல இயேசுவுக்கு இருதயத்தில் இடமளிக்க ஆயத்தமாக இருந்தான். அதனால் இரட்சகர்மேல் மிகுந்த பரிவுகொண்டான்; அவன் மூலமாக இரட்சகர் ஆழமான ஆவிக்குரிய போதனைகளை மக்களுக்கு வழங்கினார்.
‘அவனை மறுரூபமாக்கின பரிசுத்தத்தின் செளந்தர்யம், கிறிஸ்துவின் பிரகாசமாக அவன் முகத்தில் ஜொலித்தது. கிறிஸ்துவைப் போல மாறுவதும், சகமனிதர்களோடு ஐக்கியமாவதுமே தன் ஒரே ஆசையாக மாறுகிற வரையிலும் இரட்சகரை அன்போடும் பயபக்தியோடும் நோக்கினான்; தன் எஜமானின் குணம் அவனது குணத்தில் பிரதிபலித்தது’2
1Elen G. White, Steps to Christ, p 43.
2.Ellen G. White, The Acts of the Apostles, pp. 544, 545
கலந்துரையாடக் கேள்விகள்
- பிரியமான சீடனான யோவானின் வாழ்க்கைக்கும், யூதாஸ்காரியோத்தின் வாழ்க்கைக்கும் முக்கிய வித்தியாசம் இருக்கிறது. யோவானையும் அவன் சகோதரனையும் இயேசு பொவனெர்கேஸ் என்று அழைத்தார். அதற்கு இடிமுழக்க மக்களென்று அர்த்தம். யோவானிடம் பயங்கர குணக்குறைபாடுகள் இருந்தன. யூதாஸிடமும் குறைபாடுகள் இருந்தன; ஆனால் யோவான் அளவுக்கு தீவிரமான குறைகள் இல்லை. ஆனால் யோவான் இயேசுவின் சாயலில் மாறியதற்கும், யூதாஸ் பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாகப் பாவம் செய்ததற்கும் காரணம் என்ன? இரண்டுக்குமுள்ள வித்தியாசம் என்ன?
- விசுவாசிகள் தங்கள் சிலுவைகளை எடுத்துக்கொண்டு, தம்மைப் பின்பற்றும்படி இயேசு அழைக்கிறார். சிலுவையை எடுப்பதற்கும், பிறர் வன்செயல்களுக்கு அடிபணிந்து போவதற்கும் இடையேயுள்ள வித்தியாசம் என்ன?
- நாம் நம் வாழ்க்கையை முற்றிலும் அர்ப்பணிக்க தேவன் விரும்புவது ஏன்? சுயாதீன சித்தத்நிற்கும் இரட்சிப்பிற்கும் இடையேயுள்ள வித்தியாசம் என்ன?